118. யாமாமாநீ யாமாமா - பாடல் 5

கால தத்துவனாக இறைவன்
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 5

பாடல் 5:

    யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
    வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா

விளக்கம்:

    யா காலா மேயா காழீ யா மேதாவீ தாய் ஆவீ
    வீயாதா வீ தாமே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா

யா=யாவரும் வணங்கத்தக்க, காலா=கால தத்துவமாக இருப்பவன்; மேயா=அனைத்திலும் கலந்து இருப்பவன்; காழீயா=காழி நகரத்தில் இருப்பவன்; மேதாவீ=அறிவில் சிறந்தவன்; தாய் ஆவீ=தாயாகவும் உயிராகவும் இருப்பவன்; வீயாதா=என்றும் அழிவின்றி இருப்பவன்; வீ=கின்னரம் எனப்படும் பறவைகள்; தாமே=தாமாகவே; யாழீ=யாழ் வாசிப்பவன்; கா=காப்பாய்; யாம்=நாங்கள் மேல் ஆகா=வாழ்வினில் மேற்கொண்டு நடக்க இருப்பவை; ஆயா=ஆராய்ந்து கவலை கொள்ளாதவாறு; கா=காப்பாற்றுவாய்; கின்னரம் எனப்படும் பறவை இனிய இன்னிசைக்கு மயங்கி தன்னை அறியாதவண்ணம் உறங்குவது போன்று அசையாமல் படுத்து இருக்கும் பறவை என்று கூறப்படுகின்றது. 

கால தத்துவனாக இறைவன் இருக்கும் தன்மை திருச்சதகம் பதிகத்து பாடலில் மணிவாசகரால் குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் திருவுருவத்தை வானோர்களும் அறிந்து கொள்ள முடியாது என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். உலகத்தின் தோற்றத்திற்கும் அழிவுக்கும் சாட்சியாக இருக்கும் கால தத்துவன் என்று பெருமானை குறிப்பிடுகின்றார். 

    மேலை வானவரும் அறியாததோர்
    கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
    ஞாலமே விசும்பே இவை வந்து போம்
    காலமே உன்னை என்று கொல் காண்பதே 

நாம் நமது வாழ்க்கையில் இனி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நினைத்து கவலை கொள்ளாமல் இருக்கும் நிலையினை இறைவன் அருள வேண்டும் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். அவ்வாறெனின் நாம் எதைப் பற்றி நினைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா. இதற்கு குழைத்த பத்து பதிகத்தின் பாடலில் மணிவாசகர் விடை அளிக்கின்றார். நாம் எப்போதும் நினைக்க வேண்டியது, இந்த மண்ணுலக வாழ்க்கையை விட்டுவிட்டு இறைவனின் திருவடிகளில் சேரும் நாள் எப்போது என்பதே என்று கூறும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு இருப்பது தான் நமது அடிமைத் திறத்திற்கு ஏற்ற செயல் என்று கூறுகின்றார். 

    கண்ணார் நுதலோய் கழல் இணைகள் கண்டேன் கண்கள் களிகூர
    எண்ணாது இரவும் பகலும் நான் அவையே எண்ணும் அது அல்லால்
    மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன் கழற்கே புகுமாறும்
    அண்ணா எண்ணக் கடவோனே அடிமை சால அழகு உடைத்தே 

  
பொழிப்புரை:

அனைத்து உயிர்களும் வணங்கும் தன்மை உடையவனே, கால தத்துவனாக இருப்பவனே, அனைத்து உயிர்களிலும் எள்ளினுள்ளே எண்ணெய் இருப்பது போன்று கலந்து இருப்பவனே, சீர்காழி நகரத்து பெருமானே, மேம்பட்ட அறிவினை உடையவனே, தாயாகவும் உயிராகவும் அனைத்து உயிர்களும் விரும்பும் வண்ணம் உள்ளவனே, என்றும் அழிவற்றவனாக இருப்பவனே, கின்னரப் பறவைகள் தாமே இறங்கி வந்து மயங்கி படுக்கும் வண்ணம் வீணையில் இனிய இசை எழுப்பும் ஆற்றல் படைத்தவனே, எங்களது வாழ்வில் இனி எதிர்கொள்ள இருக்கும் இடர்களின் தன்மை குறித்து நாங்கள் ஆராய்ந்து கவலைப் படாத வண்ணம் எங்களை நீ தான் காப்பாற்ற வேண்டும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com