118. யாமாமாநீ யாமாமா - பாடல் 6

உயிரை பறிக்காத
118. யாமாமாநீ யாமாமா - பாடல் 6


பாடல் 6:

    மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
    யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே

விளக்கம்:

    மேலேபோகாமே தேழீ காலாலே கால் ஆனாயே
    ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே

மேலே போகாமே=சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை பறிக்கும் நோக்கத்துடன் வந்த இயமன் தனது முயற்சியில் முன்னேறி சிறுவனின் உயிரை பறிக்காத வண்ணம்; தேழீ= கடுமையான குரலில் அதட்டிய பெருமான்; காலாலே=தனது காலினால்; கால்=காலன்; ஏல்=பொருந்திய; நால்=சனகாதி முனிவர்கள் நால்வர்; ஆகி=குருவாகி; ஆல்=கல்லால மரத்தின் நிழலில்; ஏலா=ஏற்றுக்கொண்டு; காழீ=சீர்காழி; தே=தெய்வமே; மேகா=மேகத்தை வாகனமாக கொண்டவனே, மேகவாகனன் என்பது பெருமானின் திருநாமங்களில் ஒன்று. ஒரு முறை, திருமால் மேகத்தின் வடிவம் கொண்டு பெருமானை சுமந்து சென்றதாக கூறுவார்கள்; போலோமே=அடியார்கள் போல் கருதலாமா. அடியார்களின் பத்து குணங்களை கூறும் போது, மற்ற அடியார்களை வணங்குதல் ஒரு குணமாக கருதி கூறப்படுகின்றது. எனவே திருமாலை, பெருமானின் அடியாராக கருதி வழிபடுதல் சைவ நெறிக்கு உகந்த செயலாகவே கருதப் படும் என்பதால், திருமாலை சிவனடியாராக கருதி வழிபடலாமா என்ற கேள்வியை இறைவனிடம் கேட்கும் நயத்தை இந்த பாடலில் உணரலாம். மேகா என்ற சொல்லுக்கு மேகம் பலனை எதிர்பாராது மழையை உலகுக்கு கொடையாக அழிப்பது போன்று பலனை எதிர்பாராமல் உயிர்களுக்கு நன்மை செய்பவன் பெருமான் என்று பொருள் கொண்டு, மேகா போலேமே என்ற தொடருக்கு சிலர் மேகனாகிய பெருமானுக்கு தொண்டர்களாக இருக்கும் வண்ணம் பெருமான் அருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் வைப்பதாக பொருள் கூறுகின்றனர்.

சனகாதி முனிவர்கள் நால்வரும் பொருந்தி அமர்ந்து பெருமானிடம் விளக்கம் கேட்ட செய்தி பல திருமுறைப் பாடல்களில் விளக்கப் படுகின்றது. திருஞானசம்பந்தர் தான் அருளிய சேய்ஞலூர் தலத்தின் பதிகத்தின் முதல் பாடலில் (1.48.1) எதற்காக சனகாதி முனிவர்கள் நால்வரும் பெருமானிடம் விளக்கம் கேட்டனர் என்று கூறுகின்றார். நூல்=வேதம் மற்றும் சிவ ஆகமங்கள்; மால்=ஐயப்பாடு; மால் என்ற சொல்லுக்கு காதல் மயக்கம் என்று ஒரு பொருளும் உள்ளது. என்னே, வியப்புக் குறிச்சொல். பெருமானின் கருணைத் திறத்தினை வியந்து சொல்லியது. நல்லறம்=சிவதன்மம்; நால்வர்=சனந்தனர், சனத்குமாரர், சனாதனர், சனகர் ஆகியோர்

    நூல் அடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
    மால் அடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
    ஆல் அடைந்த நீழல் மேவி அருமறை சொன்னது என்னே
    சேல் அடைந்த தண்கழனி சேய்ஞலூர் மேயவனே  

வேதங்கள் ஆகமங்கள் ஆகிய பல நூல்களைக் கற்ற பின்னரும், பெருமானின் திருவடியை அடையும் மார்க்கம் தெளிவாக புரியாமல், தங்களது அஞ்ஞானம் நீங்காததால், உண்மை யாது என்று புரிந்து கொள்ள முடியாமல் மயக்க நிலையில் இருந்த சனகர் சனாதனர் சனந்தனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் தங்களது ஐயப்பட்டினை விளக்க வேண்டும் என்று பெருமானிடம் வேண்ட, அதற்கு இசைந்த பெருமானும் ஆலமரத்தின் நிழலில் பொருந்தி அமர்ந்தவாறு அரிய மறைகளின் பொருளை விளக்கிய அவரது கருணைத் திறம் மிகவும் வியக்கத்தக்கது. அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான் சேல் மீன்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான். என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை.    
 
பொழிப்புரை:

சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலன், தனது முயற்சியில் முன்னேறி சிறுவனின் உயிரைக் கவர்வதன் முன்னம், கடுங்குரலால் அவனை அதட்டி நிறுத்தி, அதன் பின்னர் காலால் உதைத்து காலனுக்கே காலனாகி காலகாலன் என்ற பெயர் பெற்றவன் பெருமான். தங்களுக்கு வேதங்களில் இருந்த ஐயப்பாட்டினை, பெருமானிடம் தெரிவித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பொருந்திய மனதினை உடைய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும், ஞானகுருவாக அமைந்து கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, அவர்களை சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கள் மெய்ப்பொருளை அடையும் வழியினை உணர்த்தி அருள் புரிந்த பெருமான், சீர்காழி நகரினில் தெய்வமாக வீற்றிருக்கின்றான். மேகத்தின் வடிவம் கொண்டு பெருமானைத் தாங்கி சுமந்து சென்று தொண்டு புரிந்த திருமாலை, அவர் செய்த தொண்டினைக் கருத்தில் கொண்டு, அவரை சிவனின் அடியார்களாக ஒருவராக மதித்து அவரை புகழ்ந்து  வழிபடுதல் ஏற்புடைய செயலா என்பதை, பெருமானே நீர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com