119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 7

சரணடையும் உயிர்கள்
119. சுரருலகு நரர்கள் பயில் - பாடல் 7

பாடல் 7:

    அரணை உறு முரணர் பலர் மரணம் வர இரணம் அதில் அர மலி படைக்
    கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயிர் பரன் நெறி கொள் கரனது இடமாம்
    பரவ அமுது விரவ இடல் புரள உறும் அரவை அரி சிரம் அரிய அச்
    சிரம் அரன் சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே   

விளக்கம்:

இந்த பாடலில் வரும் பெயர் சிரபுரம். இந்த சொல்லின் இரண்டாவது எழுத்தாகிய ர அனைத்துச் சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் காணலாம். இராகு கேது ஆகிய இருவரும் பெருமானை வழிபட்டு கோள்களாக கருதப்படும் வண்ணம் உயர்ந்ததை உணர்த்தும் வண்ணம் சிரபுரம் என்ற பெயர் வந்தது என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்,  

அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே

திரிபுரத்து அரக்கர்கள் பறக்கும் கோட்டைகளில் சென்று தாங்கள் நினைத்த இடங்களில் கீழே இறங்கியதால், அந்த கோட்டைகளின் அடியில் மாட்டிக் கொண்டு பல உயிர்களை இறந்தமையும் பல் உயிர்கள் காயம் அடைந்தமையும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. முரணர்=பகைவர்; படைக்கரம்=அம்பு; விசிறு=எய்த,ஏவிய; அர மலி=வாசுகியாகிய பாம்பு பொருந்திய; விரகன்=சமர்த்தன்; அமர்=தன்னைச் சரணடையும் உயிர்கள்; கரணன்= அந்தக்கரணங்களின் சேட்டைகளை அடக்குபவன்; நெறி கொள் கரன்=உபதேசம் செய்யும் திருக்கை; உயர் பரன்=அனைவரிலும் உயர்ந்தவன்; பரவ அமுது=பலராலும் புகழ்ந்து சொல்லப்படும் அமுதம்; விரவ=தனக்கு கிடைக்கும் வண்ணம்; விடல்=விடம்; புரளவுறும்=புரண்டு வந்தைடைந்த; அரி=திருமால்; சிரம் அரிய=தலையினை வெட்ட; அமர்= மற்ற கோள்களுக்கு நிகராக அமரச் செய்த; மௌன குருவாக விளங்கும் தென்முகக் கடவுள், சனகாதி முனிவர்களுக்கு, திருக்கையால் முத்திரை காட்டி விளக்கம் அளித்தமை, இங்கே வழிநெறி காட்டிய கரம் என்றார் பொருளில் நெறி கொள் கரம் என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது.    

பொழிப்புரை:

பறக்கும் கோட்டைகளில் சென்று தாம் விரும்பிய இடங்களில் கீழே இறங்கி பல உயிர்களை கொன்றும் பல உடல்களுக்கு காயம் விளைவித்தும் துன்பமிழைத்த பகைவர்கள் திரிபுரத்தவர்களின் கோட்டைகள் மேல், வாசுகி பாம்பு நாணாக பொருந்திய வில்லிலிருந்து அம்பினை வீசி எறிந்த சமர்த்தனும், தன்னைச் சரணடையும் உயிர்களை அந்தக்கரணங்களின் சேட்டைகளிலிருந்து விடுவிக்கும் வல்லமை உடையவனும், அனைவரிலும் உயர்ந்தவனும், சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த முறையை வெளிப்படுத்தும் திருக்கையினை உடையவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் சீர்காழி தலமாகும். பலராலும் புகழ்ந்து பேசப்பட்ட அமுதினை அடையும் நோக்கத்துடன், விடமுடைய பாம்பு புரண்டு வந்து தேவர்களின் வரிசையில் அமர்ந்த பாம்பின் தலையினை, தனது கையினில் இருந்த சட்டுவத்தால் மோகினியாக வந்த திருமால் வெட்டினார். இவ்வாறு துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை, பெருமானின் திருவடிகளில் சரணம் அடைந்து பெருமானைப் போற்றி வழிபட, அந்த பாம்பினை இராகு கேது எனப்படும் இரண்டு கிரகங்களாக மாற்றி மற்ற கோள்களுடன் சமமாக அமரும் வண்ணம் உயர்ந்த நிலை அளித்ததால், இந்த தலத்திற்கு சிரபுரம் என்ற பெயர் வந்தது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com