133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 9

பிரமனும் திருமாலும் திகைத்து
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 9

பாடல் 9:

    நல்லம் மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்
    அல்லர் என ஆவர் என நின்றும் அறிவரிய
    நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரின் நிலையார் எம்
    செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே

விளக்கம்:

தமது முன்னர் எழுந்த அழற்றூணின், இயல்பினை அறியமாட்டாது, பகைவரோ எவரோ என்று இன்னதொன்று அறியாத நிலையில் பிரமனும் திருமாலும் திகைத்து நின்ற நிலை, அல்லர் என ஆவார் என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. மற்ற எவரும் உயிர்களுக்குத் தலைவர் அல்லர் தாம் ஒருவனே உயிர்களுக்குத் தலைவன் என்று செருக்குடன் நின்ற நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. அல்லர் என ஆவர் என நின்றும் என்ற தொடருக்கு வேறுவிதமாகவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் பேசிய  பிரமன் மற்றும் தன்னால் திருவடியைக் காண இயலவில்லை என்று உண்மை பேசிய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல மலர்=தாமரை மலர்; கண்ணனாக அவதாரம் செய்த போது, தனது மகன் மண்ணைத் தின்று விட்டானே என்ற கவலையில் அவனது வாயினைத் திறத்து யசோதை பார்த்தபோது, அவனது வயிற்றினில் உலகம் இருப்பதைக் கண்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.

மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

    பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
    பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க
    அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
    பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப்பட்டுள்ளது.

    பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
    பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே
    பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
    அரனடி தேடி அரற்றி நின்றாரே

தங்களுக்குள்ளே யார் மேம்பட்டவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் முன்னே எழுந்த தீப்பிழம்பினைக் கண்டு, அந்த தீப் பிழம்பின் இரண்டு புறத்திலும் நின்ற பிரமனும் திருமாலும் இறைவனைப் பணிந்த செய்தி, சொல்லப்படும் அப்பர் பிரானின் பாடல் (4.14.2)  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பரம் ஒரு தெய்வம்=தங்களுக்கு அப்பாற்பட்ட பரமாகிய ஒரு தெய்வம்:  தம்பம்=தூண்

    நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்
    பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
    பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
    பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே    

பொழிப்புரை:

நல்ல மலராகிய தாமரை மலரின் மேல் அமரும் பிரமனும், உலகினை உண்டவன் என்று கருதப்படும் திருமாலும் தங்களுக்குளே தானே தலைவன் என்றும் அடுத்தவர் தலைவன் அல்ல என்றும் வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்து திற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் பெருமான் .அத்தகைய பெருமான் நெல்வயல்கள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வதைத் தன்னிடம் வைத்துள்ள செல்வராகிய பெருமானின் திருவடிகளை தவிர்த்து வேறு எதையும் எனது சிந்தை உணராது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com