134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 1

பெருமானை வணங்கி பதிகங்கள்
134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 1

பின்னணி:

வைத்தீச்வரன் கோயில் (தேவாரப் பதிகங்களில் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலம்) சென்று வைத்தியநாதரை, கள்ளார்ந்த என்று தொடங்கும் பதிகம் பாடி போற்றி வணங்கிய பின்னர் திருஞானசம்பந்தர், திருநின்றியூர் திருநீடூர் மற்றும் திருப்புன்கூர் தலங்கள் சென்று பெருமானை வணங்கி பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார். நீண்ட புகழ் வாய்ந்த திருநின்றியூர் சென்று ஆங்கே வீற்றிருக்கும் நிமலனாரின் திருவடிகளைத் தொழுது பெருமான் மீது காதல் கொண்டு அவரைப் போற்றி சிறந்த தமிழ்ப்பதிகம் பாடிய ஞானசம்பந்தர், சிறப்பு வாய்ந்த திருநீடூர் தலம் சென்று பெருமானை வணங்கிய பின்னர் திருபுன்கூர் தலம் சென்று நடனம் ஆடும் பெருமானின் திருப்பாதங்களை சிறப்பித்து அவனது அருளை இறைஞ்சி பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய, சூலம்படை சுண்ணப்பொடி என்று தொடங்கும் பதிகத்தினை (1.18) சிந்தித்த நாம் இப்போது திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தை சிந்திப்போம். திருநீடூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. திருப்புன்கூர் தலத்தின் மீது, சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள் தலா ஒவ்வொன்று நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தலம் நந்தனார் சரித்திரத்துடன் தொடர்பு கொண்டது. திருக்கோயிலின் உள்ளே செல்லாமல் புறத்தே கோபுர வாயிலிலிருந்து நந்தனார் வழிபட்ட போது, இலிங்கத் திருமேனியை நந்தி மறைத்தால் காண முடியாமல் அவர் வருந்தினார். அவரது வருத்தத்தைப் போக்க திருவுள்ளம்  கொண்ட பெருமான் நந்தியை சற்று விலகுமாறு கட்டளையிட்டார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இன்றும் அந்த நந்தி சற்று விலகிய நிலையில் இருப்பதை நாம் காணலாம். பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் நந்தனாரின் சன்னதி உள்ளது. சுந்தரர் தனது பதிகத்தின் பாடலில் (7.55.2) இந்த தலத்துடன் ஏயர்கோன் கலிக்காமர் தொடர்பு கொண்டுள்ள நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். ஒரு சமயம் உலகெங்கும் மழை இன்றி தவித்தபோது மழை பெய்தால் பன்னிரு வேலி நிலம் திருக்கோயிலுக்கு தருவதாக வேண்டிக்கொள்ள, பெருமழை பெய்து வெள்ளமாக ஓடியது. பின்னர் அந்த மழையினை நிறுத்த, மேலும் பன்னிரு வேலி நிலம் தருவதாக வேண்டிக்கொள்ள மழை நின்றது என்று சுந்தரர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். வைத்தீஸ்வரன்கோயிலிருந்து அணைக்கரை வழியாக மணல்மேடு செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே சுமார் மூன்று கி,மீ, தூரத்தில் அமைந்துள்ள தலம். கும்பகோணம் மணல்மேடு பேருந்து, சீர்காழி மணல்மேடு பேருந்து, மற்றும் மயிலாடுதுறை நகரப் பேருந்து இந்த தலம் வழியாக செல்கின்றன. இறைவனின் திருநாமம்=சிவலோகநாதர்; இறைவியின் பெயர்=சொக்க நாயகி. திருக்கோயிலில் உள்ள குளம், ஒரே இரவில் விநாயகப் பெருமானின் உதவியுடன் நந்தனார் வெட்டியதாக கூறப்படுகின்றது.   
  
பாடல் 1:

    முந்தி நின்ற வினைகள் அவை போக
    சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
    அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
    கந்தம் மல்கு கமழ் புன்சடையாரே

விளக்கம்:

தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பது சிவனார் என்று சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எந்த உயிரும் தான் கொண்டிருந்த உடலை விட்டு நீங்கிய பின்னர், தன்னுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. எஞ்சியுள்ள வினைகளின் தன்மை பற்றியே, அடுத்து எடுக்கவிருக்கும் உடலின் தன்மை இறைவனால் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் முன்னமே, வினைகள் முன்னமே சென்று அந்த பிறவியின் தன்மையை நிர்ணயிப்பதையும் தக்க தருணத்தில், புதிய உடலுடன் பிணைந்துள்ள அந்த உயிர்கள்,  வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறு வினைகள் இருக்கும் நிலையினையே முந்தி நின்ற வினைகள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த வினைகளை அனைத்து உயிர்களும் அனுபவித்தே கழிக்க வேண்டிய நிலையில் பொதுவாக இருந்தாலும், சிவபெருமான் கருணையால் பக்குவப்பட்ட உயிர்களின் வினைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. அத்தகைய பக்குவம் பெறுவதற்கான முதற்படி பெருமானை வணங்கி வழிபடுதல். எனவே தான் சம்பந்தர் இந்த பாடலில், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் காபாலி வேடத்தைக் கண்டு களித்து, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார்.  

உயிர்கள் இணைந்திருக்கும் உடல் அழிகின்றது: அதனால் எஞ்சிய வினைகளை கழித்துக் கொள்ள உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க நேரிடுகின்றது. ஆனால் பெருமானோ அழிவின்றி என்றும் நிலையாக இருப்பவன். அவனுக்கு இறப்பு என்பதே இல்லை; மேலும் அவன் மலங்களின் கலப்பற்றவன். எனவே மலங்களைக் கழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அதனால் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு ஏற்படும் பிறப்பும் அவனுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு அழிவின்றி, அழிவினால் ஏற்படும் பிறப்பின்றி இருக்கும் பெருமான் ஒருவனே நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்க வல்லவன் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்தமில்லா அடிகள் என்று குறிப்பிடும் சம்பந்தர், இவ்வாறு அந்தமில்லா அடிகளாக இறைவன் இருப்பதால் அவனைத் தொழ வேண்டும் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியுடன் பிணைக்கப்பட்டு பிறந்தும் இறந்தும் இறந்த பின்னர் மீண்டும் பிறந்தும் உழல்பவர்கள். இந்த சங்கிலியிலிருந்து தன்னை  விடுவித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு அந்த விடுதலையை மற்றவர்க்கு அளிக்க முடியும். எனவே தான் பெருமான் ஒருவன் மட்டுமே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.        
 
பொழிப்புரை:

ஒரு உடல் பிறக்கும் முன்னமே, அந்த பிறவியில் அனுபவித்து கழித்துத் தீர்க்கவேண்டிய வினைகள், அந்த உடலையும் உயிரினையும் வருத்த காத்திருகின்றன. இவ்வாறு காத்திருக்கும் வினைகளை நீங்கள் முற்றிலுமாக கழித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் திருப்புன்கூர் தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகனாதரை சிந்திப்பீர்களாக. அழிவு என்பதே இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் சிவபெருமான், நறுமணம் கமழும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையை உடையவர் ஆவார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com