134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 2

மூவிலைச் சூலம்
134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 2


பாடல் 2:

    மூவராய முதல்வர் முறையாலே
    தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
    ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்
    ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

ஏ=அம்பு; அல்லார்=வேதநெறியில் சாராது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; மூன்றாவது அடியில் உள்ள சொற்களை அடிகள் ஆவர் என்னும் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். எயில்=மதில்; பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்திருந்து அவர்கள் தந்தம் தொழில்களைச் செய்வதற்கு துணையாக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் மூவராய முதல்வன் என்று சம்பந்தர்  இங்கே கூறுகின்றார். ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல், நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார்.

    மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்
    மூவரும் யான் என மொழிந்தவாறே

 
மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில்  (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

    மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்
    மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்
    மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
    மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை வணங்கி நமது வினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறும் ஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமான் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டும் பொருட்டு, தேவர்களும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார்.    

பொழிப்புரை:

பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்து இருந்து அவர்கள் தத்தம் தொழில்களை செய்யும் வண்ணம் இயக்கி அந்த மூவருக்கும் முதல்வனாகத் திகழும் பெருமானை தேவர்கள் அனைவரும் முறையாக வணங்குகின்றனர். திருப்புன்கூர் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அவரே, வேதநெறியைச் சாராமல் நின்று பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com