134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 11

பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக
134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 11

பாடல் 11:

    மாடம் மல்கு மதில் சூழ் காழிமன்
    சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
    நாட வல்ல ஞானசம்பந்தன்
    பாடல் பத்தும் பரவி வாழ்மினே

விளக்கம்:

இந்த பதிகத்தின் கடைக்காப்பு மற்ற பதிகங்களிலிருந்து மாறுபட்டது. இந்த பாடலில் இந்த பதிகம் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் கருணைத் திறனையும் குறிப்பிட்ட சம்பந்தர், அந்த பாடல்கள் குறிப்பிடும் கருத்தினை உள்வாங்கி, அவற்றை பின்பற்றி, பெருமானை வணங்கித் தொழுது நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சம்பந்தர் விரும்புகின்றார் போலும். அதனால் தான் பதிகத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி வாழ்வீர்களாக என்று கூறுகின்றார். நாடவல்ல=ஆராய்ந்து  அறியும் வல்லமை வாய்ந்த;      

பொழிப்புரை:

உயர்ந்த மாடவீடுகள் நிறைந்ததும் உயர்ந்த மதிற்சுவர்களைக் கொண்டதும் ஆகிய சீர்காழி தலத்தின் தலைவன் ஆகிய ஞானசம்பந்தன், சான்றோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர்   தலத்து இறைவனின் தன்மைகளை ஆராய்ந்து அறியும் ஆற்றலை வெளிப்படுத்திய பாடல்கள் பத்தையும் பாடி வாழ்வீர்களாக.            

முடிவுரை:

இந்த பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு ஒரே பதிகத்தின் பல பாடல்களில் திரிபுரம் எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுவது அரிது. திருப்புன்கூர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஒரு பூதகணம் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதாகவும் மற்றொரு பூதகணம் மத்தளம் (குடமுழா) வாசிப்பதாகவும் சிற்பங்கள் உள்ளன.  இந்த சிற்பத்தைக் கண்ட ஞானசம்பந்தர்க்கு, பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று சிவனடியார்களை தனது இரண்டு காவல்காரர்களாகவும் குடமுழா வாசிப்பவனாகவும் நியமித்து பெருமான் கருணை புரிந்த செயலும் அதற்கு முன்னோடியாக அமைந்த திரிபுர தகனமும் நினைவுக்கு வந்தது போலும். அதனால் தான் பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரம் எரித்த வீரச் செயலை குறிப்பிட்டார் போலும்.

சுந்தரர் தனது பாடல் ஒன்றினில் (7.54.8) பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார். தாரகாட்சன் கமலாக்ஷன் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்களும், தாங்கள் பின்பற்றி வந்த சிவநெறியை கைவிட்டு புத்தர்களாக மாறி சிவநிந்தனையும் வேதநிந்தனையும் செய்யத் தொடங்கினார்கள். மக்கள் அனைவரும் தங்களது மன்னனை பின்பற்றி புத்த மதத்திற்கு மாறிய போதிலும் சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவர் சிவநெறியைக் கைவிடாமல் வாழ்ந்து வந்தனர். பெருமானிடம் தொடர்ந்து அன்பு பூண்டு அவர்கள்  வாழ்ந்து வந்தமையால் பெருமான் இவர்கள் மூவரும் அழியாமல் காத்து, திரிபுரத்தை எரித்தார். மேலும் மூவரில் இருவரை தனது கோயிலில் வாயில் காவலராகவும் ஒருவரை மத்தளம் முழக்குவராகவும் மாறும் வண்ணம் அருள் புரிந்தார் என்று காஞ்சிப்புராணம் கூறுகின்றது. அவர்களே இந்த திருக்கோயிலில் வாயில் காப்பாளராக இருப்பதாக நம்பப்படுகின்றது. பொதுவாக வாயில் காப்பாளர்கள் நுழைவாயிலைப் பார்த்த வண்ணம் நிற்பதைக் காண்கின்றோம். ஆனால் இந்த கோயிலில் அவர்கள் இருவரும் பெருமானின் சன்னதியை நோக்கிய வண்ணம் சற்று தலை சாய்த்து நிற்பதை நாம் காணலாம். காவலராக இருப்பினும் பெருமானைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று அந்த திரிபுரத்து அடியார்கள் விரும்பினர் போலும். செற்ற=வெற்றி கொண்ட; ஞான்று=நாளில்; முழா=மத்தளம்; ஏவுதல்=கட்டளை இடுதல்;

    மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின்
              திருக்கோயிலின் வாய்தல்
    காவலாளர்கள் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி
              காடு அரங்காக
    மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க
             அருள் செய்த
    தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர்
              உளானே    
    

பதிகத்தின் முதல் பாடலில் ஆதி அந்தம் இல்லாத பெருமானாக விளங்கும் அவர் ஒருவர் தாம், நமது வினைகளை முற்றிலும் அழித்து, அதன் விளைவாக பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று குறிப்பிட்ட சம்பந்தர் அடுத்த பாடலில் தேவர்கள் அனைவரும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில் அவரது உயர்வினைக் கருதி, அவரை தியானித்த தான் அவரைத் தனது தலை உச்சியின் மேல் உள்ள துவாதசாந்தப் பெருவெளியில் வைத்திருப்பதாக கூறுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு நான்காவது பாடலில் அறிவுரை கூறப்படுகின்றது. நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளின் தன்மையை குறிப்பிட்ட சம்பந்தர் ஐந்தாவது பாடலில் பெருமான் திருமேனி அழகு வாய்ந்து என்றும், ஆறாவது பாடலில் அவரது சடைமுடியின் அழகினையும் குறிப்பிடுகின்றார். முந்தைய மூன்று பாடல்களில் குறிப்பிட்ட அழகினை உடைய பெருமான் வீதிவலம் வரும் திருப்புன்கூர் வீதிகளின் சிறப்பு ஏழாவது பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எட்டாவது பாடலில், அழகராக விளங்கும் பெருமான் வீரமும் கருணையும் கொண்டவராக திகழ்வது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றது. அனைவரும்  மலைத்து நிற்கும் வண்ணம் ஆற்றல் பொருந்திய திரிபுரத்து அரக்கர்களை அழித்தமை பெருமானது வீரத்தையும், தனது இருப்பிடத்தையே பேர்த்து எடுக்க முயற்சி செய்தவன் என்பதையும் பொருட்படுத்தாது அரக்கன் இராவணனுக்கு பல வரங்கள் அளித்தமை பெருமானின் கருணையையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அழகும் வீரமும் கருணையும் பொருந்திய பெருமான் ஆடல் பாடல் கலைகளில் வல்லவராக விளங்கும் தன்மை ஒன்பதாவது பாடலில்  குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதல் ஒன்பது பாடல்களில் பெருமானின் தன்மை, அழகு, கருணை வீரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, பெருமானை நாம் சென்று அடையவேண்டும் என்ற  ஏக்கத்தினை நம்மில் ஏற்படுத்தும் சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் நமது ஏக்கத்தினைத் தீர்த்துக் கொள்ளும் வழியினை காட்டுகின்றார். காபாலியாக வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாய், விருப்பு வெறுப்பு அற்றவர்களாய் வாழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அவனது திருவடிகளைச் சென்று அடையவேண்டும் என்று உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் கடைப்பாடல் மற்ற  பதிகங்களின் கருத்திலிருந்து மாறுபட்டு இருப்பது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பதிகத்தின்  பாடல்களை மீண்டும் மீண்டும் பாடவேண்டும் என்று கூறுவதன் மூலம், பாடல்கள் உணர்த்தும் பொருட்களை புரிந்து கொண்டு அதனை நாம் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று உணர்த்தும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று இறைவனை வணங்கித் தொழுது அவனது புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com