132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 1

முதல் தலமாக கண்ணார்கோயில்
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 1

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் சென்று வழிபட்ட திருஞானசம்பந்தர், அந்த தலத்திலிருந்து புறப்பட்டு, காவிரி நதியின் வடகரை ஓரமாக  மேற்கு திசை நோக்கிச் சென்று புள்ளிருக்குவேளூர் சென்றடைந்தார் என்று சேக்கிழார்  பெரிய புராணத்தில் கூறுகின்றார். பெருமான் பால் தான் வைத்திருந்த அன்பு மேலும் மேலும் பெருகும் வண்ணம், அழகான பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பதிகத்தினை பாடி சொல்மாலையாக இறைவனுக்கு சம்பந்தர் அணிவித்தார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சம்பந்தர் சடாயுவினை குறிப்பிட்டு சடாயு செய்த வழிபாட்டினை குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரும் இறைவனை  வழிபட்ட தன்மை குறிப்பிடப்படுவதால், சடாயு என்ற சொல் சம்பாதியையும் குறிப்பதாக பொருள் கொண்டு, பறவைகள் இருவரும் இறைவனை போற்றி வழிபட்டமையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று சேக்கிழார் (இருவர் ஆற்றிய பூசனை) கூறுவதை நாம் உணரலாம்.    

    போற்றிய காதல் பெருகப் புள்ளிருக்கும் திருவேளூர்
    நாற்றடம் தோளுடை மூன்று நயனப்பிரான் கோயில்         
    ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
    ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொல் பதிகம் அணிந்தார்

பொதுவாக இறைவனை எண்தோள் ஈசன் என்றே திருமுறை பாடல்கள் பலவும் குறிப்பிடுகின்றன. தோள் என்ற சொல் இணையான இரண்டு தோள்களையும் குறிப்பதாக கையாண்டு, சேக்கிழார் நாற்றடம் தோள் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். புள் (பறவை), இருக்கு (இருக்கு முதலான நான்கு வேதங்கள்), வேள் (முருகப் பெருமான்), ஊர் (சூரியன்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் பெயர்=வைத்தியநாதர்;  இறைவியின் பெயர்=தைல நாயகி, தைலாம்பாள்;

தாரகாசுரனுடன நடைபெற்ற போரினில் காயம் அடைந்த தனது படைவீரர்களுக்கு  மருத்துவ உதவி அளிக்குமாறு முருகப் பெருமான் இறைவனிடம் வேண்ட இறைவன் வைத்தியராக இந்த தலத்தில் ஒரு வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து வைத்தியம் பார்த்ததால் வைத்தியநாதர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனுடன் இறைவியும், தனது கையஈல் ஒரு எண்ணெய் கிண்ணம் ஏந்தியவாறு உதவி செய்ததால்  தைல நாயகி என்று அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் அந்த பெயர் தையல் நாயகி  என்று மாறியது என்றும் கூறுவார்கள். திருக்கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியில் உள்ள பெருமானின் சன்னதி ஆதி வைத்தியநாதர் சன்னதி என்று அழைக்கப் படுகின்றது. தையல் என்ற சொல் பல திருமுறைப் பாடல்களில் அம்பிகையை குறிக்க பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே தையல் நாயகி என்ற பெயரும் பொருத்தமாக காணப் படுகின்றது. .

பொதுவாக திருஞானசம்பந்தரின் பெரும்பாலான பதிகங்களில், எட்டாவது பாடலில் இராவணனுக்கு பெருமான் அருள் செய்தமையும், ஒன்பதாவது பாடலில் அண்ணாமலை நிகழ்ச்சியும், பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும் காணப் படுவதை நாம்  அறிவோம். ஆனால் இந்த பதிகத்தின் பாடல்கள் மற்ற பதிகங்களிளிருந்தும் மாறுபட்டவை. இந்த பதிகத்தில் இராவணன் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், மற்ற இரண்டு குறிப்புகள் ஒன்பதாவது பத்தாவது பாடல்களில் காணப்படவில்லை. இவ்வாறு இராவணனுக்கு அருள் புரிந்தமை குறிப்பிடப்பட்டு மற்ற இரண்டு நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படாத சம்பந்தரின் தேவாரப் பதிகம் இந்த பதிகம் ஒன்று தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஞானசம்பந்தரின் இந்த பதிகம் தவிர்த்து இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளன.            .
 
பாடல் 1:

    கள்ளார்ந்த பூங்கொன்றை மத மத்தம் கதிர் மதியம்
    உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம்
    தள்ளாய சம்பாதி சடாய் என்பார் தாம் இருவர்
    புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

கள்=தேன்; அரையன்=அரசன்; அரையன் என்ற சொல்லே நாளடைவில் அரசன் என்று மருவியதாக சிவக்கவிமணியார் பெரியபுராணம் விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். புள்= பறவை; இங்கே கழுகுப் பறவைகள், சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரையும் குறிக்கும். தள்ளாய=வலிமை மிகுந்த என்ற பொருளும் கூறப்படுகின்றது.; கதிர்=ஒளிக் கதிர்கள்; ஆர்ந்த=நிறைந்த; மதமத்தம் என்று ஊமத்தை மலர் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஊமத்தை காயினை உட்கொண்டால் சிந்தனை மயக்குற்று பைத்தியம் பிடிக்கும் என்று நம்பப் படுகின்றது. அனைவரும் வெறுக்கும்/தவிர்க்கும் பொருட்கள் பெருமானால் மிகுந்த  விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஊமத்தை மலர் மற்றும் கொன்றை மலர்களை எவரும் சூடிக் கொள்வதில்லை. யானையின் தோலை, கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அணிந்து கொள்வதில்லை. சுடுகாட்டு சாம்பலை உடலில் எவரும் பூசிக் கொள்வதில்லை; ஆனால் பெருமானோ இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தான் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.   

தள்ளாய=தள்ளத் தகாத; பொதுவாக கழுகுகள் என்றால் சுடுகாட்டினில் உலவும் பறவைகள் என்று தாழ்மையாக கருத்வோம். ஆனால், சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இரு பறவைகளும் கழகுகளாக இருந்த போதிலும் தொடர்ந்து பெருமானை வழிபட்டு வந்தன.    இராமகாவியத்தில் இந்த இரண்டு பறவைகளும் இடம் பெறுகின்றன. இராவணனுடன்  போரிட்டு, அவன் சீதையை கடத்திச் செல்வதை தடுக்க முயன்ற சடாயு, தனது சிறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கீழே விழுந்து இருந்த நிலையிலும். இராமனும் இலக்குவனும் சீதையை தேடிக் கொண்டு அலைந்த போது அவர்கள் இருவரையும் சந்தித்து, சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டதை அவர்களுக்கு உரைத்தது. சீதையைத் தேடிக் கொண்டு சென்ற வானர வீரர்கள், தங்களது நம்பிக்கையை  இழந்து பாரத நாட்டின் தென்கோடி கடற்கரையில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது, ஆங்கே இருந்த சம்பாதி, சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டு இருப்பதை உணர்த்தி இராமனுக்கு சேவை செய்தது. இவ்வாறு இரண்டு பறவைகளும் இராமனுக்கு  சேவை செய்து உதவியதாலும், பெருமானை தொடர்ந்து வழிபட்டமையாலும், அந்த பறவைகளின் உயர்வு கருதி, கழுகுகள் என்று தாழ்வாக நினைக்கலாகாது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐந்து அறிவுகள் கொண்ட கழுகுகள் பெருமானை வணங்கி  உய்வடைந்த நிலையினை பாடல் தோறும் குறிப்பிட்டு மனிதர்களாகிய நாமும் இறைவனை வழிபட்டு உய்வினை அடையவேண்டும் என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.    

பொழிப்புரை:

தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் சிந்தனையை கலக்கும் ஊமத்தை மலர்களையும்,  ஒளிவீசும் பிறைச் சந்திரனையும், நிறைவாகத் தனது சடையினில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் உறையும் இடமாவது, இழிந்த பிறவி என்று கருதாமல் உயர்ந்தவை என்று மதிக்கப்பட வேண்டிய சடாயு மற்றும் சம்பாதி கழுகு இனத்தினைச் சார்ந்த பறவைகள் தங்களது அரசனாகக் கருதி இறைவனைத் தொழுது வணங்கும் தலம் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப் படும் தலமாகும்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com