132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 6

சிவநெறியில் ஒழுகுதல்
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 6


பாடல் 6:

    திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
    அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
    மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
    புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

தீவினை நோய்=தீயினும் கொடிய வினைகளால் ஏற்படும் பிறவிப்பிணி; மறம்=பாவச்செயல்;   திறம்=சைவத் திறம், சிவநெறியில் ஒழுகுதல்: திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் மணிவாசகர், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்,  என்று பெருமான் தனது திருவாயால் ஆகமங்கள் தோற்றுவித்ததை குறிப்பிடுகின்றார். திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்த ஆகமங்கள் எவருக்கு சொல்லப்பட்டன என்ற விவரங்கள் காணப்படுகின்றன. தத்புருட முகத்தின் மூலம் கௌதம முனிவருக்கு, இரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் எனப்படும் ஐந்து ஆகமங்களும், வாமதேவ முகத்தின் மூலம்  காசிப முனிவருக்கு தீர்த்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் அப்பிரபேதம் ஆகிய ஐந்து ஆகமங்களும், சத்தியோஜாதம் முகத்தால் கௌசிக முனிவருக்கு காமிகம் யோகசம் சிந்தியம் காரணம் அசிதம் ஆகிய ஐந்து ஆகமங்களும், அகோர முகத்தால் பாரத்வாஜ முனிவருக்கு விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்னேயம் வீரம் ஆகிய ஐந்து ஆகமங்களும், ஈசான முகத்தின் மூலமாக அகத்திய முனிவருக்கு புரோற்கீதம் இலளிதம் சித்தம் சந்தானம் சருவோத்தம் பரமேசுரம் கிரணம் வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களும், உணர்த்தப் பட்டன என்று கூறுவார்கள். இந்த பாடலில் அறம் என்ற சொல் கருணை என்று பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மலத்துடன் பிணைந்துள்ள உயிர்கள் பால் கருணை கொண்டு, அந்த உயிர்கள் தங்களது மலத்தினைக் கழித்துக் கொண்டு உய்வினை அடையும் பொருட்டு பல விதமான உடல்களுடன் அந்த உயிர்களை இணைக்கும் பெருமான், அந்த உயிர்கள் உய்வினை அடையும் வழி யாது என்பதை உணர்த்தும் பொருட்டு நான்கு வேதங்களையும் ஆகமங்களையும் பல முனிவர்கள் மூலமாக நமக்கு உணர்த்தியுள்ளான்.  வடமொழி வேதங்களையும் ஆகமங்களையும் அளித்த பெருமான், அத்துடன் நிற்காமல், நால்வர் பெருமானார்கள் மூலம் தேவார திருவாசக பதிகங்களையும் அருளியது நமது தமிழுலகம் செய்த பெரும் பேறு அல்லவா. இந்த கருணைச் செயல் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.  

இந்த பாடலில் புறம் கண்ட சடாயு என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்நாள் வரை எவரிடமும் பெருமான் அளித்த வாளினால் போரிடாத அரக்கன் இராவணன், அந்த தெய்வத்தன்மை வாய்ந்த வாளினை எடுத்து சடாயுவின் சிறகுகளை வெட்டினான் என்பதே  நிலைகுலைந்த நிலையினில் அரக்கன் ஒரு தருணத்தில் இருந்தான் என்பதை நமக்கு புலப்படுத்துகின்றது. சுந்தர காண்டம் நிந்தனைப் படலத்தில் வரும் கீழ்க்கண்ட கம்ப இராமாயண வரிகள், ஜடாயுவுக்கும் இராவணனுக்கும் நடந்த சண்டையை நேரில் கண்ட  சீதையின் வாய்மொழியாக வந்த சொற்கள், நாம் இங்கே நினைவு கூரத் தக்கன. பெருமான் அருளிய வாளின் உதவி இல்லையேல். அன்றே ஜடாயுவிடம் நீ தோற்று இறந்திருப்பாய் அல்லவா என்று ஏளனமாக சீதா பிராட்டி அரக்கன் இராவணனை நோக்கி கேள்வி கேட்பதை நாம் உணரலாம். எனவே ஜடாயு மற்றும் இராவணன் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் வெற்றி பெற்றது பெருமான் அளித்த வாள் தான் என்பதையும் இராவணன் அல்ல என்பதையும் நாம் உணரலாம். எனவே புறம் கண்ட ஜடாயு என்ற தொடர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.      

    தோற்றனை பறவைக்கு அன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி
    ஏற்றவன் வாளினால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே

ஜடாயுவின் வலிமை அரக்கனின் வலிமையை விடவும் குறைந்தது என்பதால் ஜடாயு  தோல்வி அடையவில்லை என்பதையும், கம்பர் ஜடாயு வதைப் படலப் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். ஜடாயுவின் ஆற்றலுக்கு முன்னம் தனது வலிமையை இழந்து  அரக்கன் வெட்கத்துடன் நின்றான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் தனது வாழ்நாள் அன்றே   முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அரக்கன் பெருமான் கொடுத்த வாளினை எடுத்தான் என்று கம்பர் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம். எவராலும் தடுக்கவொண்ணாத சிறப்புத் தன்மை வாய்ந்த வாள் என்றும் கம்பர் குறிப்பிடுகின்றார். மாற்றரும்=தடுக்கும் படை ஏதுமின்றி திகழும்; இராவணின் வலிமை முன்னர் ஜடாயு தோற்கவில்லை என்றும் எவராலும் தடுக்கமுடியாத வாளின் முன்னர் தோற்றான் என்றும் கம்பர் இங்கே கூறுகின்றார். முன்னொரு காலத்தில் மலைகளுக்கு சிறகுகள் இருந்தன என்றும், அந்த மலைகளின் சிறகுகளை இந்திரன் தனது வச்சிராயுதத்தால் வெட்டி வீழ்த்தினான் என்றும் புராணம் கூறுகின்றது. அவ்வாறு சிறகுகள் வெட்டப்பட்ட மலைகள் கீழே விழுந்தது போன்று, தனது சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கம்பர் இங்கே கூறுகின்றார்.     

    வலியின் தலை தோற்றிலன் மாற்றரும் தெய்வ வாளால்
    நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
    மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன்   
    குலிசம் எறிய சிறை அற்றதோர் குன்றின் வீழ்ந்தான்             

பொழிப்புரை:

சிவநெறி ஒழுக்கத்தில் ஒழுகும் அடியார்கள் தங்களது பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச்  சுழற்சியிலிருந்து விடுபடும் வழியினை உணர்த்தும் வண்ணம், உயிர்களின் மீது கருணை கொண்டு, வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய பெருமான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் ஆகும். மாற்றான் மனைவியைக் கவர்ந்ததால் தருமத்திற்கு புறம்பான வழியில் சென்ற அரக்கன் இராவணன், தனது வலிமையை மிகவும் பெரிதாக கருதி, தான் சீதை பிராட்டியைக் கவர்ந்து செல்வதை தடுப்பவர் எவருமில்லை என்ற செருக்குடன், வந்த அரக்கன் இராவணனுடன் போரிட்டு அவனை புறமுதுகிட்டோடச் செய்த ஜடாயு பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர்  ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com