132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 11

மீண்டும் மீண்டும் பிறந்து
132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 11

பாடல் 11:

    செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான்
    பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரைக்
    கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
    மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

விளக்கம்:

செடி=குணமின்மை; பாவம் சேர்ந்தது; வினைகளால் விளைந்த உடல் என்பதால் களங்கம் உடையது என்று கூறப்படுகின்றது. வினைகளை தீர்த்துக் கழிப்பதற்கு தானே, உயிர் தகுந்த  உடலுடன் சேர்க்கப்படுகின்றது. மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வது உயிர்களின் குற்றம். அந்த குற்றமாகிய நோயினைத் தீர்க்கும் வல்லமை படைத்த மருத்துவன் என்பதால் தலத்து இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் ஏற்பட்டது. அவனைத் தொழுது வணங்குவதே மருந்தாக செயல்படுவதால், பெருமானையே மருந்து என்று சம்பந்தர் கூறுகின்றார். பொடி=திருநீறு; நீரில் நீராடும் ஒருவனின் உடலில் எங்கும் நீர்த்துளிகள் காணப்படுவது போன்று, பெருமானின் உடலெங்கும் திருநீறு காணப்படுவதால், பொடியில் நீராடியவன் என்ற பொருள்பட பொடியாடி என்று நயமாக சம்பந்தர் கூறுகின்றார். மடி=சோம்பல்; மடியின்றி=சோம்பல் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் சொல்லும் தன்மை; கடி=நறுமணம்; பொடியாடிக்கு அடிமை என்று திருஞானசம்பந்தர் தன்னை குறிப்பிடுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்து அருள வல்லான் என்று அப்பர்  பிரான் கூறுவது (6.54.8) நமது நினைவுக்கு வருகின்றது. பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும், பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம், பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா
        அடியார்க்கு என்றும்
    வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும்
         மருந்தும் ஆகித்
    தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள்
         தீயெழத் திண்சிலைக்         கொண்ட
    போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
         நாள் போக்கினேனே         

பொழிப்புரை:

நமது தீவினைகளுக்கு மருந்தாக விளங்கி அவற்றை முற்றிலும் நீக்கி, களங்கம் நிறைந்த உடலுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்க்கும் பெருமானுக்கு, தனது உடல் முழுதும் திருநீறு பூசி விளங்கும் பெருமானுக்கு, அடிமையாக திகழ்ந்து வழிபட்ட சடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர். நறுமணம் உடைய மலர்ச் சோலைகள் நிறைந்த சீர்காழி நகரத்தில் தோன்றியவனும், கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஞான சம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களையும், சோம்பல் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் சொல்லும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு மறுபிறப்பு என்பதே இல்லை. அவர்கள் இறைவனின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைந்து நிலையான இன்பமுடன் வாழ்வார்கள்.          

முடிவுரை:

இந்த பதிகத்தினை நாள்தோறும் பாராயணம் செய்யும் அடியார்களுக்கு பிறவிப்பிணி தீரும்  என்பது சான்றோர்களின் முடிவு. பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் சிறப்பாக கருதுவது போன்று அடியார்களின் தன்மையையும் நாம் சிறப்பாக கருதவேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு, சம்பந்தர் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சடாயு மற்றும் சம்பாதியின் செயல்களை குறிப்பிடுகின்றார். சடாயு மற்றும் சம்பாதியின் செயல்கள் விவரமாக கூறப்பட்டாலும் பெருமானின் பெருமைகளையும் சம்பந்தர் இந்த பதிகத்து பாடல்களில் கூறுகின்றார்.

பதிகத்தின் முதல் பாடலில் சந்திரனுக்கு அருளிய கருணைத் தன்மையும், இரண்டாவது பாடலில் பக்குவப்பட்ட அடியார்களின் மலங்களைத் தனது பிச்சைப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டு முக்தி நிலை அளிக்கும் தன்மையும், மூன்றாவது பாடலில் தேவர்களால் வணங்கப்படும் தன்மையும்,  நான்காவது பாடலில் தீயினை ஏந்தியவாறு நடமாடும் தன்மையும்,  ஐந்தாவது பாடலில் அடியார்கள் இசையுடன் இணைத்து பாடல்கள் பாடும் வண்ணம் தலத்தில் உறையும் தன்மையும்,  ஆறாவது பாடலில் நாம் அனைவரும் உய்யும் வண்ணம் ஆகமங்களையும் வேதங்களையும் அருளிய கருணைச் செயலும்,  ஏழாவது பாடலில் தன்னை எதிர்த்து வந்த மதயானையினை வெற்றி கொண்ட தன்மையும்,  எட்டாவது பாடலில் இசைப் பாடல்கள் பாடி தன்னை மகிழ்விக்கும் அடியார்கள் மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகுக்கு வாராமே தன்னுடன் இணைந்து இன்பமாக இருக்கும் நிலையினை அருளும் திறமும்,  ஒன்பதாவது பாடலில் திரிபுரங்களை எரித்த சாதனையும், பத்தாவது பாடலில் பெருமானின் பெரிய உருவத்தையும் பேராற்றலையும் குறிப்பிடும் ஞானசம்பந்தர் பதிகத்தின் கடைப்பாடலில், மறுபிறப்பினை நாம் தடுப்பதற்கான வழியினை உணர்த்துகின்றார். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி நமது பிறவிப்பிணியினைத் தீர்க்கும் மருத்துவனகிய வைத்தியநாதரை, அப்பரும் சம்பந்தரும் அருளிய பதிகங்கள் கொண்டு வணங்கி துதித்துப் பாடி, இம்மையில் நோயின்றியும் மறுமையில் பிறவிப் பிணி நீங்கப் பெற்றும் இன்பமுடன் வாழ்வோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com