133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 3

தீப்பிழம்பாக நின்றவன்
133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 3


பாடல் 3:

    பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவம் ஆர
    அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை
    நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள் நின்றியூரில்
    உறையும் இறை அல்லது என் உள்ளம் உணராதே

 
விளக்கம்:

திருக்கோயில்களில் சிறப்பு பூஜை நேரங்களில் சங்கு பறை இவற்றின் ஒலிகள் கலந்து  ஆரவாரமாக காணப்படும். நேரங்களிலும் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் தனது மனம் எதையும் உணராது இறை சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். உலகெங்கிலும் பல விதமான ஓசைகள் கலந்து நிற்கின்றன. ஆனால் இந்த ஓசைகளின் மூலம் எது என்பதை ஆராய்ந்தால், நமக்கு நாததத்துவம் புலப்படும். இறைவனின் கையினில் இருக்கும் உடுக்கையின் ஒலியே, இந்த சப்த பிரபஞ்சத்தின் மூலமாக திகழ்வதை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் எனும் விளக்கம் பொருத்தமாக தோன்றுகின்றது. பாங்கு ஆரவும் ஆர=பறை சங்கு ஆகிய ஒலிகளின் பக்கத்தில் தோன்றும் பல விதமான ஓசைகள்.

அனைத்து ஓசைகளின் பின்னணியில் இறைவன் இருப்பதாக பெரியோர்கள் உணருகின்றனர் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவையாறு தாண்டகத்தின் முதல் பாடலை  (6.38.1) நினைவூட்டுகின்றது. நமது மொழியில் உள்ள 247 எழுத்துக்களும் பொருளைத் தருவதில்லை. பொருள் தரும் எழுத்துகள் (பூ, மா, ஆ, பா, வா, போன்றவை) தவிர்த்த மற்று எழுத்துக்கள் வெறும் ஓசையை மட்டும் தருகின்றன. இந்த எழுத்துகள் தனித்து நிற்கும் போது  பொருள் தராவிடினும் மற்ற எழுத்துக்களுடன் இணையும் போது பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் இருக்கும் எழுத்துகளாகவும், எழுத்துகளின் கூட்டாகிய  சொற்களாகவும் இறைவன் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தேசம்=உலகம்; தேச விளக்கு=உலகிலுள்ள ஒளிதரும் பொருட்கள் சூரியன், சந்திரன், கோள்கள், மற்றும் விண்மீன்கள்.

    ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
    வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே
    பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
    தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

இந்த பாடலில் சம்பந்தர் இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் தனது உள்ளம் உணராது என்று கூறுவது நமக்கு திருவெண்காடு தலத்தின் மீது பாடிய பாடலை (2.48.9) நினைவூட்டுகின்றது. திருமால் மற்றும் பிரமன் காண முடியாமல் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் என்றும் ஐராவத யானைக்கு அருள் புரிந்தவன் என்று அவனது பெருமைகளை தங்களது உள்ளத்தில் நினைத்து உருகாத மாந்தர்களை உணர்வு உடையவராக கருதமாட்டோம் என்று கூறுகின்றார். கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஆடுதல் என்றால் நீராடுதல் என்று பொருள். உள்ளம் முழுவதும் பெருமான் குறித்த சிந்தைனைகளால் நீராட்டப்பட்டு நனைந்து  நையவேண்டும் என்பதை உள்ளாடி என்று சம்பந்தர் உணர்த்துகின்றார்.  

    கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
    ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்
    வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
    உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

திருஞானசம்பந்தர் தான் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் (2.44.10) பாடலில் சம்பந்தர், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப்படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.  

    பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்
    கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்
    அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்    
    நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே   

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்=கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில்  குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே.

    முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
    தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்
    வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே
    என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே    

பொழிப்புரை:

பறை சங்கு முதலிய கருவிகளிலிருந்து எழுகின்ற ஓசை, மற்றும் அந்த கருவிகளின்  அருகிலுள்ள ஏனைய வாத்தியங்களிளிருந்து ஒலிக்கும் ஒலிகளும் எங்கும் பரவி இருக்கும் சூழ்நிலையில், அந்த ஓசைகளின் அடிப்படைத் தன்மையில் இறைவன் இருப்பதை சான்றோர்கள்  உணருகின்றனர். நிறைந்த நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடையில் வைத்துள்ள இறைவன் நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அந்த ஒரு பொருளைத் தவிர்த்து வேறு எதனையும் எனது உள்ளம் உணராது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com