122. கல்லால் நீழல் - பாடல் 10

விலக்கப்பட்டவர்கள்
122. கல்லால் நீழல் - பாடல் 10


பாடல் 10:

    மொட்டமணர்
    கட்டர் தேரர்
    பிட்டர் சொல்லை
    விட்டுளோமே 

விளக்கம்:

மோட்டமணர் என்ற சொல்லின் திரிபாக கருதி (மோட்டம்=இறுமாப்பு) இறுமாப்பு உடைய சமணர்கள் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். தலைமயிர் பறிக்கப்பட்டு மொட்டையாக காட்சி அளிப்பதால் மொட்டை அமணர் என்ற பொருள்பட மொட்டமணர் என்று கூறுகின்றார் என்று சிலரும் பொருள் கூறுகின்றனர். மொட்டு என்ற சொல்லினை அரும்பினை உணர்த்துவதாக பொருள் கொண்டு அரும்பு போன்று முடிகள் ஏதுமின்றி மேற்புறத்தில் வழுவழுப்பாக உள்ள தலையினை உடையவர்கள் என்றும் சிலர் விளக்கம் கூறுகின்றனர். கட்டு=பொய்; கட்டர்=பொய்மொழிகளை பேசும் புத்தர்கள்; புத்தர் மற்றும் சமணர்களின் கட்டுரை கேளாத அடிகளார் என்று பல தேவாரப் பாடல்களில் சம்பந்தர் கூறுகின்றார். பிரஷ்டர் என்ற வடமொழி சொல்லின் தமிழாக்கமாக பிட்டர் என்ற சொல் கருதப் படுகின்றது. பிரஷ்டர் என்றால் விலக்கப்பட்டவர்கள் என்று பொருள். வேதநெறிக்கும் சைவ நெறிக்கும் புறம்பான தன்மை உடையவர்கள் என்பதால், சமணர்களையும் புத்தர்களையும் தாம் விலக்கியுள்ளதாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இந்நாளில் நமது நாட்டினில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் தொகை மிகவும் குறைந்து காணப்பட்டாலும், வேதநெறி மற்றும் சிவநெறிக்கு புறம்பாக வாழும் மனிதர்கள், வேதநெறியினை இழிவாக பேசும் மனிதர்கள் வாழ்கின்றனர். அத்தகையோரை நாம் இனம் கண்டு கொண்டு விலக்க வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் சம்பந்தர் நமக்கு கூறும் அறிவுரையாகும்.    

பொழிப்புரை: 

இறுமாப்பு உடைய சமணர்களையும் பொய்மொழிகள் பேசும் புத்தர்களையும், சைவ நெறிக்கு புறம்பாக நடந்து கொள்வதால் அவர்களை விலக்கி வைத்துள்ள நாங்கள் அவர்களின் சொற்களை ஒரு பொருளாக கருதாமல் விட்டுவிட்டோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com