122. கல்லால் நீழல் - பாடல் 11

அழகும் குளிர்ச்சியும்
122. கல்லால் நீழல் - பாடல் 11


பாடல் 11:

    அந்தண் காழிப்
    பந்தன் சொல்லைச்
    சிந்தை செய்வோர்
    உய்ந்துளோரே

விளக்கம்:

அந்தண்=குளிர்ச்சியும் அழகும் பொருந்திய சோலைகளை உடைய சீர்காழி நகரம். பாடலில் உள்ள கருத்துகளை உணர்ந்து சிந்தித்து பாடல் வேண்டும் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

பொழிப்புரை: 

அழகும் குளிர்ச்சியும் ஒருங்கே பொருந்திய சோலைகள் நிறைந்த சீர்காழி நகரில் அவதரித்த, ஞானசம்பந்தனின் சொற்கள் கொண்ட இந்த பதிகத்தின் பாடலை சிந்தித்து பொருள் உணர்ந்து பாடும் அடியார்கள் வாழ்வினில் உய்வினை அடைவார்கள்.  

முடிவுரை:

இரண்டே இரண்டு சீர்களைக் கொண்டு அளவில் சிறியதாக உள்ள அடிகளை உடைய பாடல்கள் எனினும், கருத்தாழம் மிகுந்த பாடல்கள் கொண்ட பதிகம். அளவில் சிறியதாக எளிய சொற்களைக் கொண்டுள்ள பாடல் என்பதால் எளிதில் மனனம் செய்துகொண்டு பாடும் வண்ணம் அமைந்துள்ளது. பல நல்ல குணங்களைப் பெற்றுள்ள சான்றோர்கள் சிவபெருமானைத் தவிர்த்து பற்ற தெய்வங்களை போற்ற மாட்டார்கள் என்று பதிகத்தின் முதல் பாடலில் உணர்த்தும் சம்பந்தர், அடுத்த பாடலில் நாமும் அவர்களை பின்பற்றி பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நன்மை தரும் பொருளாக கருதாமல் வாழவேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். தொடர்ந்து அதே நிலையில் நிலைத்து நின்றிட, பெருமானின் திருநாமங்களை சொல்லாத மாந்தர்களுடன் சேராமல் இருப்போம் என்று மூன்றாவது பாடலில் கூறும் சம்பந்தர், பெருமானைப் போற்றாமல் வாழ்வது ஒரு வாழ்வாக கருதப்படாது என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். ஐந்தாவது பாடல் உணர்த்தும் வண்ணம் பெருமான் பால் நாட்டம் உடையவர்கள் பெருமானின் அருள் செல்வமும் கருணைச் செல்வமும் பெற்ற செல்வந்தர்கள் என்பதால், நாமும் பெருமானைச் சார்ந்து வாழ்வோம் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் பெருமானை நினைக்காதோரை ஒரு பொருட்டாக கருதாமல் வாழும் நாம் தக்க தருணத்தில் உதவும் பெருமானை நமக்கு நெருங்கிய நண்பனாக கருதி போற்ற வேண்டும் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது பத்தாவது பாடல்கள் அண்ணாமலை சம்பவம் மற்றும் சமணர்கள் புத்தர்கள் பற்றிய குறிப்பினை கொண்டுள்ளன. கடைப் பாடலில் இந்த பதிகத்தின் பொருள் உணர்ந்து சிந்தித்து ஓதி பயனை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார். சம்பந்தர் சாற்றிய வழியினில் நின்று, பெருமானை வணங்கி வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவோமாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com