123. ஓர் உருவாயினை - பாடல் 3--5

பெருமானே காப்பாற்று
123. ஓர் உருவாயினை - பாடல் 3--5

    ஒன்றிய இரு சுடர் உம்பர்கள் பிறவும்
    படைத்து அளித்து அழிப்ப மும் மூர்த்திகள் ஆயினை
    இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை

விளக்கம்:

ஒன்றிய, இருசுடர், மும்மூர்த்திகள், இருவரோடு, ஒருவன் என்ற சொற்கள் மூலம் முறையே ஒன்று இரண்டு மூன்று இரண்டு ஒன்று ஆகிய எண்கள் குறிப்பிடப்படுகின்றன. இரு சுடர்=சூரியன் மற்றும் சந்திரன்; ஒன்றிய இரு சுடர் என்ற தொடர் மூலம், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய சுடர்களுடன் ஒன்றி இறைவன் அவற்றை இயக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.  

ஒன்றிய என்ற சொல்லுக்கு சிவம் சக்தியுடன் ஒன்றி இருக்கும் நிலை என்ற விளக்கம் சிலரால் கூறப்படுகின்றது. விண் முதல் பூதலம் என்ற தொடரினைத் தொடர்ந்து ஒன்றிய இரு சுடர் என்று வருவதால், சூரிய சந்திரர்களை இயக்கும் இறைவன் என்று பொருள் கொள்வதே மிகவும் பொருத்தமானது. அளித்து=பாதுகாப்பினை அளித்து; உயிர்கள் பொருந்தியுள்ள உடல்களை அழிப்பது இந்த பிறவியில் கழித்துக் கொள்ளாது எஞ்சியிருக்கும் வினைகளை, உயிர்கள் அடுத்த பிறவியில் கழித்துக் கொள்வதற்கு வழிவகுக்கவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்    

உம்பர்கள் பிறவும்=தேவர்கள் உட்பட பலரையும்; பெருமான் புரியும் ஐந்து தொழில்களில் மூன்று தொழில்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. மூன்று தொழில்களையும் புரிபவன் பெருமான் தான் என்பது மிகவும் விளக்கமாக சிவபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.21) முதல் மூன்று பாடல்களில் ஞானசம்பந்தரால் உணர்த்தப் படுகின்றது. அந்த பாடல்களை நாம் இங்கே காண்போம். புவம்=வானம்: வளி=காற்று; புனல்=தண்ணீர்; கனல்=தீ; கலை=அறுபத்து நான்கு கலைகள்; திரிகுணம்=சாத்துவீகம், ராஜசம் மற்றும் தாமசம் ஆகிய மூன்று குணங்கள்; அமர் நெறி=விரும்பத்தக்க வழிமுறைகள்; திவம்= தேவலோகம்; மருவி=கூடி பொருந்தி, பிரமனால் படைப்புத் தொழில் எவ்வாறு செய்யப் படுகின்றது என்பது இந்த பாடலில் கூறப்படுகின்றது. தாவரங்கள் முதலாக தேவர்கள் வரை ஏழு வகையான உடல்களில் அந்தந்த உயிரின் வினைத் தொகுதிக்கு ஏற்ப உயிர்கள் பொருத்தப் படுகின்றன. தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனது மனதினில் சிவபெருமான் பொருந்தி இருப்பதால், பிரமனால் படைப்புத் தொழிலை ஒழுங்காக செய்ய முடிகின்றது. பிரமன் தனது தொழிலை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற கருத்தினை மனதில் கொண்டு, இறைவனை வணங்கி செயல்படுவதால், சிவபெருமான் பிரமனது மனதினில் அமர்ந்து அருள் புரிகின்றார் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். 

    புவம் வளி கனல் புனல் புவிகலை உரை மறை திரிகுணம் அமர்நெறி
    திவமலி தரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை அவை தம 
    பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
    சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலை பெறுவரே  

பதிகத்தின் இரண்டாவது பாடலில் திருமால் காத்தல் தொழிலைப் புரியும் நிலை விளக்கப் படுகின்றது. மனிதர்கள், தேவர்கள் உட்பட அனைத்து உயிர்களும் உலகில் நிலை பெற்று வாழும் பொருட்டு அவர்களை காத்தருள வேண்டும் என்ற எண்ணத்தில் பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள திருமாலின் மனதினில் நிலை பெற்று இருக்கும் சிவபெருமான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். மேற்கண்ட பாடலில் பிரமன் தனது தொழிலினைச் சரிவரச் செய்வதற்காக சிவபெருமானை வேண்டுவது போன்று, திருமாலும் தனது தொழிலினை சரிவரச் செய்யும் வண்ணம் பெருமானை வேண்டுகின்றார் என்று உணர்த்தப் படுகின்றது. திருமால் புரியும் யோக நித்திரை அறிதுயில் என்று சொல்லப் படுகின்றது தூங்குவது போன்று காட்சி அளித்தாலும் உலகில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர் திருமால் என்பதால் அவர் கொண்டுள்ள நித்திரை யோக நித்திரை என்று அழைக்கப்படுகின்றது.   

    மலை பல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் 
    நிலை மலி சுரர் முதல் உலகுகள் நிலைபெறு வகை நினைவொடு மிகும்
    அலைகடல் நடு அறிதுயில் அமர் அரி உரு இயல் பரன் உறை பதி
    சிலை மலி மதிள் சிவபுரம் நினைபவர் திருமகளொடு  திகழ்வரே

    
பதிகத்தின் மூன்றாவது பாடலில் அழித்தல் தொழில் நடைபெறும் முறை விளக்கப் படுகின்றது. கடலால் சூழப் பட்ட உலகங்களில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கும் வண்ணம், அழிக்கும் தொழிலினைச் செய்யும் உருத்திரனின் உருவில் எழுந்தருளும் சிவபிரான் என்று இங்கே சம்பந்தர் கூறுகின்றார். 

    பழுதில கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள் மலி
    குழுவிய சுரர் பிறர் மனிதர்கள் குலமலி தரும் உயிரவை அவை
    முழுவதும் அழிவகை நினைவொடு முதல் உருவியல் பரன் உறை பதி
    செழுமணி அணி சிவபுரநகர் தொழும் அவர் புகழ் மிகு மூவுலகிலே

மேற்கண்ட மூன்று பாடல்களிலும் உள்ள கருத்தினை, சிவபெருமான் மூவராகவும், அவர்களின் தலைவராகவும் உள்ள நிலை, சம்பந்தரால் முதுகுன்றம் பதிகத்தின் (1.53) முதல் பாடலில் கூறப்படுகின்றது. மறை சேர் நாவர்=வேதங்களை ஓதும் நாவினை உடைய அந்தணர்கள்: எரி=தீ; கால்=காற்று; விரை மலரோன்=நறுமணம் உடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்;  

    தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
    நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
    மேவாராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் எனும்
    மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே 

புள்ளிருக்குவேளூர் தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (6.54) ஒன்பதாவது பாடலில் நாரணனாகவும், பிரமனாகவும் பெருமான் விளங்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பண்ணியான்=ஆக்கியவன்; படிறன்=வஞ்சகன், மறைப்பது வஞ்சகர் செய்யும் தொழில் என்பதால் கங்கையைச் சடையில் மறைத்த இறைவனை படிறன் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். நண்ணியவன்=நெருங்கி நின்று துணையாக இருந்தவன். நளிர்=குளிர்ச்சி

    பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் தன்னைப் படர்சடை மேல்
              புனல் கரந்த             படிறன் தன்னை 
    நண்ணியனை என்னாக்கித் தன்னானானை நான்மறையின்
               நற்பொருளை நளிர்             வெண்திங்கள்
    கண்ணியனைக் கடியநடை விடை ஒன்று ஏறும் காரணனை
               நாரணனைக் கமலத்து         ஓங்கும்
    புண்ணியனைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே
              ஆற்ற நாள் போக்கினேனே

அதிகை தலத்தின் மீது அருளிய ஏழைத் திருத்தாண்டகத்தின் (6.3) முதல் பாடலில், இதே  செய்தி கூறப்படுகின்றது. பறவைகளின் அரசன் என்று கருதப்படும் கருடனை வாகனமாகக் கொண்ட திருமால் என்றும் பொன் நிறத்தினை உடைய பிரமன் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் இவர்கள் இருவரையும் குறிப்பிடுகின்றார்.

    வெறிவிரவு கூவிள நல் தொங்கலானை
            வீரட்டத்தானை வெள்ளேற்றினானைப்
    பொறி அரவினானைப் புள்ளூர்தியானைப் பொன்
             நிறத்தினானைப் புகழ் தக்கானை
    அறிதற்கரிய சீர் அம்மான் தன்னை அதியரைய மங்கை
             அமர்ந்தான் தன்னை
    எறிகெடிலத்தானை இறைவன் தன்னை ஏழையேன்
              நான் பண்டு இகழ்ந்தவாறே

செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.29) ஒரு பாடலில் வெள்ளியர் (உடல் முழுவதும் திருநீறு பூசியதால் வெண்மை நிறத்துடன் காணப்படும் சிவபெருமான்), கரியர் (திருமால்) மற்றும் செய்யர் (பொன் நிறத்தில் உள்ள பிரமன்) ஆகிய மூவராக இருப்பவர் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். தெள்ளியார்=தெளிந்த உள்ளம் கொண்ட ஞானியர்கள்: பள்ளியார்=பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால்: ஒள்ளியர்=ஒளி தருபவர்

    வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
    ஒள்ளியர் ஊழிஊழி உலகமது ஏத்த நின்ற
    பள்ளியர் நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடி ஆடும்
    தெள்ளியார் கள்ளம் தீர்ப்பார் திருச்செம்பொன் பள்ளியாரே

வேணுபுரத்தின் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) அருளப்பட்ட பதிகத்தின் இரண்டாவது பாடலில் (1.9.2) சம்பந்தர், படைப்பவனாகவும், காப்பவனாகவும், அழிப்பவனாகவும் விளங்குவதுடன், இந்த தொழில்களின் முடிந்த பயனாகிய முக்தி நிலையாகவும் சிவபெருமான் விளங்குகின்றார் என்று கூறுகின்றார். கிடை=வேதம் ஓதும் கூட்டம்

    படைப்புந் நிலை இறுதிப் பயன் பருமையொடு நேர்மை
    கிடைப் பல்கணம் உடையான் கிறி பூதப்படை உடையான் ஊர்
    புடைப் பாளையின் கமுகின்னொடு புன்னை மலர் நாற்றம்
    விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே

பொதுவாக மும்மூர்த்திகள் என்றால் மூவரும் சமமான நிலையில் உள்ளவர்கள் என்று பொருள் கொள்ளப் படுகின்றது. ஆனால் மும்மூர்த்திகளுக்கு பெருமை கிடைப்பதன் காரணமே, பெருமான் அவர்களுடன் இணைந்து இருந்து அவர்கள் தங்கள் தொழிலினைச் செய்யும் வண்ணம் இயக்குவதே ஆகும். எனவே பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரிடமிருந்து பெருமான் வேறுபட்டவர் என்பதை உணர்த்தும் பொருட்டும், பெருமான் தான் அவர்கள் இருவரையும் இயக்குகின்றான் என்பதையும் உணர்த்தும் பொருட்டும் இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மும்மூர்த்திகளிலும் தனியாக விளங்குபவன் பெருமான் என்று சம்பந்தர் இங்கே கூறுவது நமக்கு திருவாசகப் பாடல் (திருச்சதகம்) ஒன்றினை நினைவூட்டுகின்றது. தகர்=ஆடு; அவிதா=அச்சக் குறிப்பு சொல்; நம்மவர்=நம்மைப் போன்று அழியும் நிலையில் உள்ள பிரமனும் திருமாலும்;

    சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி
    ஆவ எந்தாய் என்று அவிதா விடும் நம்மவர் அவரே
    மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண் மேல்
    தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரிதவரே

தக்கனுக்கு அஞ்சி அவன் செய்த வேள்வியில் பங்கு கொண்டு அவிர்ப்பாகம் எடுத்துக் கொண்டவர்களும் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த நஞ்சின் தாக்கத்தினை தாங்க முடியாமல், எந்தை பெருமானே காப்பாற்று என்று அலறியவர்களும் எவ்வாறு பெருமானுக்கு சமமாக மூவர்களில் ஒருவன் என்று தங்களை எண்ணிக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் இருவரும், மண்ணுலகில் பலரும் தங்களை வழிபடுதலை நினைத்து மூவரில் தாங்களும் ஒருவர் என்றே இறுமாப்புடன் இருப்பது எத்தனை பெரிய பாவம் என்பதை அறியாமல் இருக்கின்றார்களே என்று அவர்கள் இருவரது நிலையை நினைத்து அடிகளார் இரக்கம் கொள்கின்றார். மூவரில் ஒருவனாகிய உருத்திரன், குறிப்பிட்ட செயலைச் செய்யும் பொருட்டு இயங்கும் இறைவனின் ஒரு அம்சமாகும். எனவே உருத்திரனை சிவன் என்று கொள்வதும் தவறு என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. சாவ முன்னாள் தக்கன் என்று குறிப்பிட்டு, வீரபத்திரனின் வலிமையின் முன்னே தக்கன் செயலற்று நின்ற தன்மையை குறிப்பிட்டு, அத்தகைய தக்கனுக்கு அஞ்சி வேள்வியில் பங்கேற்ற இருவர் என்று இழிவாக கூறுவதையும் நாம் உணரலாம்.

கேதீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.80.9) சுந்தரர், இறைவனை மூவராகவும் இருவராகவும் ஒருவனாகவும் இருப்பவன் என்று கூறுகின்றார். தங்களது பாவத்தையும் வினைகளையும் அறுத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள், மாதோட்ட நகரில் அமைந்துள்ள கேத்தீச்சரத்து இறைவனை தொடர்ந்து வழிபடுகின்றனர் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.   

    மூவரென இருவரென முக்கண் உடை மூர்த்தி
    மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில்
    பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
    தேவன் எனை ஆள்வான் திருகேதீச்சரத்த்தானே 

இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை என்ற தொடர் ஏகபாத திருமூர்த்தி உருவத்தினை குறிப்பிடுகின்றது என்றும் விளக்கம் கூறப்படுகின்றது. ஏகபாதர் என்று இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று. இந்த மூர்த்தங்கள் இறைவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை என்று கூறுவார்கள். சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர் மற்றும் நடராஜர்: தத்புருட முகத்திலிருந்து தோன்றியவை, பிக்ஷாடனர், காமாரி (காமனை அழித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), ஜலந்தராரி (ஜலந்தரனை அழித்தவர்), திரிபுராரி (திருபுரங்களை அழித்தவர்) ஆகும். சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றியவை, இலிங்கோத்பவர், சுகாசனர், உமாமகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), மற்றும் அர்த்த நாரீஸ்வரர் ஆகும். அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (பாசுபத மூர்த்தி) மற்றும் நீலகண்டர். வாமதேவ முகத்திலிருந்து தோன்றியவை, கங்காளர், சக்ரதானர், கஜமுகானுக்ரகர் (ஐராவதத்திற்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுக்ரகர் மற்றும் ஏகபாதர் ஆகும்,

முற்றூழிக் காலம் முடிந்த பின்னர், மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொள்ளும் சிவபெருமான் ஒற்றை கால் உடையவராக, தனது இடது புறத்திலிருந்து திருமாலையும் வலது புறத்திலிருந்து பிரமனையும் தோற்றுவிக்கின்றார் என்று புராணம் கூறுகின்றது. திருவொற்றியூர் திருக்கோயிலின் வடக்கு பகுதியில், மகிழ மரத்திற்கு அருகில், பிராகாரத்தின் வெளிச்சுவற்றில் பொறிக்கப்பட்ட ஏகபாத திருமூர்த்தியின் உருவத்தை நாம் காணலாம். மானும் மழுவும் தாங்கி உள்ள சிவனை, இரு புறமும் பிரமனும் திருமாலும் சூழ்ந்து இருப்பதையும் அவர்கள் தொழுவதையும் காணலாம். சிவனின் இடுப்பிலிருந்து பிரமனும் திருமாலும் தொன்றுவது போல் சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த சிற்பத்தில், அவர்கள் இருவரும் தங்களது ஒரு காலை மடித்து இருப்பதையும் காணலாம். பிரமனை ஜபமாலை மற்றும் கமண்டலத்துடனும், திருமாலை சங்கு சக்கரத்துடனும் நாம் காணலாம். இந்த சிற்பம் ஒற்றைக் கல்லால் ஆன சிற்பம், இதைப் போன்ற சிற்பம் ஆனைக்காவிலும் உள்ளது.

இவ்வாறு ஏகபாத திருமூர்த்தியாக விளங்கும் பெருமானின் தன்மை திருவெண்காடு தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பாடலில் (6.35.2) குறிப்பிடப் படுகின்றது. தரித்தல்=மனதினில் நினைத்தல்: ஏதம்=துன்பம்: ஓதம்=கடலலைகள் எழுப்பும் ஒலி; ஊர் உண்டு=பல ஊர்கள் அடங்கிய உலகத்தினை விழுங்கி; உலகமும் உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒடுங்கிய பின்னரும் தான் ஒடுங்காது இருக்கும் இறைவனின் தன்மை, மற்றவரிடமிருந்து மாறுபட்டது என்பதால், மிகவும் பொருத்தமாக விகிர்தனார் என்று இறைவன் இந்த பாடலில் அழைக்கப் படுகின்றார், இந்த பாடலில் சிவபிரானின் திருவடிகளைத் தங்களது மனதினில் நினைத்து வழிபடும் அடியார்களுக்கு திருவடி தீட்சை தந்து அருளும் பெருமான் என்று தனது வாழ்க்கையில் இறைவன் புரிந்த அருளினை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இந்த பெருமை மணிவாசகருக்கும் கிடைத்ததை நாம் திருவிளையாடல் புராணத்திலிருந்து அறிகின்றோம்.        

    பாதம் தரிப்பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழுருவப் பாய்ந்த பாதர்
    ஏதம் படாவண்ணம் நின்ற பாதர் ஏழுலகுமாய் நின்ற ஏக பாதர்
    ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டேறி ஒத்து உலகமெல்லாம் ஒடுங்கிய பின்
    வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே

பெருமான் மும்மூர்த்திகள் தோன்றும் இடமாக தானே விளங்கி பின்னர் அவர்கள் ஒடுங்கும் இடமாக தான் இருக்கும் நிலையை பெருமான் நமக்கு உணர்த்துவதே ஏகபாத திரிமூர்த்தி திருவுருவம் என்று வேதங்களும் ஆகமங்களும் கூறுகின்றன, அவரது இரண்டு பக்கங்களிலிருந்து பிரமன் திருமால் ஆகிய இருவரும், அவரது இதயத்திலிருந்து உருத்திரனும் தோன்றும் மூர்த்தம் ஏகபாத திருமூர்த்தி என்றும் மும்மூர்த்திகளும் ஒடுங்கும் நிலை திரிபாத திருமூர்த்தி என்றும் அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் பெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில் அடங்கியவை. 

பொழிப்புரை:

சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களுடன் இணைந்து அவற்றை இயக்கும் பெருமானே, நீ தேவர்கள் உள்ளிட்ட பல உயிர்களையும் படைக்கும் செயலையும், அந்த உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் செயலையும், அழிக்கும் செயலையும் செய்யும் பொருட்டு மூன்று மூர்த்திகளாக இயங்குகின்றாய்; மேலும் பிரமனையும் திருமாலையும் தோற்றுவித்து ஏகபாத திரிமூர்த்தியாகவும் விளங்குகின்றாய்;  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com