123. ஓர் உருவாயினை - பாடல் 32--38

முக்தி நிலை
123. ஓர் உருவாயினை - பாடல் 32--38


பாடல் வரிகள்: 

    ஒரு மலை எடுத்த இரு திறல் அரக்கன்
    விறல் கெடுத்து அருளினை புறவம் புரிந்தனை
    முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
    பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை
    ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும் 
    ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
    எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை 

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஒன்று முதல் ஏழு வரை உள்ள எண்கள் ஏறு வரிசையில் அமைந்து உள்ளன. ஒரு மலை=ஒப்பற்ற கயிலை மலை; இரு திறல்=மிகவும் அதிகமான வலிமை; விறல்=வெற்றி கொள்ளும் வலிமை; திறல்=வலிமை; முந்நீர்=மழைநீர் ஆற்றுநீர் ஊற்றுநீர் ஆகிய மூவகை நீர்களும் சென்று சேரும் கடல்; ஐயுறும் அமணர்=உறுதியான நிலைப்பாடு ஏதுமின்றி சந்தேகத்துடன் தங்களது கொள்கைக்கு விளக்கம் அளிக்கும் சமணர்கள்; இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று இருவகையாக உயிர்களின் அனைத்து தன்மைகளுக்கும் விளக்கம் கூறுவது சமணர்களின் கொள்கையாக அந்நாளில் இருந்தது போலும். அறுவகை=அழியும் வகை; உடல் அழிவதே முக்தி நிலை என்ற கொள்கை உடையவர்கள் புத்தர்கள்; தேரர்=புத்தர்; அறுவகைத் தேரர் என்ற தொடருக்கு ஆறு சுவைகளும் நிறைந்த உணவினை புசிப்பதில் நாட்டம் உடைய புத்தர்கள் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். எச்சன்=யக்ஞம், யாகம் செய்பவன்; ஏழிசை=மிகுந்த புகழ்; பல வேள்விகளைச் செய்வதால் மிகுந்த புகழ் உடையவனாக விளங்கிய பராசர முனிவர். ஊழி வெள்ளத்தால் சீர்காழி தளம் அழியாமல் நின்ற நிலையை, மிகவும் நயமாக ஊழி உணராமல் நின்றது என்று சம்பந்தர் கூறுகின்றார். 

கொச்சையோன் என்ற சொல்லுக்கு, மீனவப் பெண் மச்சகந்தியைப் புணர்ந்ததால், பராசர முனிவரின் உடலிலும் மீன் வாடை வீசத் தொடங்கியது என்றும் அந்த கொச்சையான நாற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு சிவபெருமானை நோக்கி தவம் செய்து, பராசர முனிவர் அந்த நாற்றத்தை நீக்கிக் கொண்டார் என்றும் செவிவழிச் செய்தி நிலவுகின்றது. கொச்சையை மெச்சினை என்ற தொடர் மூலம், கொச்சையான நாற்றம் கொண்டிருந்த பராசர முனிவரின் தவத்தினை மெச்சி, பெருமான் அவருக்கு அருள் புரிந்தார் என்று உணர்த்துவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கம் தருமபுரம் ஆதீனத்தார் வெளியிட்டுள்ள திருமுறை விளக்கத்திலும் காணப்படுகின்றது,      
 
பொழிப்புரை:

இறைவனின் உறைவிடம் என்பதால் ஒப்பற்ற மலையாக விளங்கும் கயிலாய மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த, மிகுந்த வல்லமை கொண்டிருந்த அரக்கன் இராவணனின் வலிமையை, எப்போதும் வெற்றியே கண்டிருந்த அவனது வீரத்தினை, பெருமானே, நீ அடக்கினாய்; புறாவின் வடிவெடுத்து மன்னன் சிபியை சோதனை செய்ததால் மீண்டும் தனது உருவினை அடைய முடியாமல் திகைத்த தீக்கடவுள் தனது உருவத்தினை மீண்டும் பெறும் வண்ணம், பெருமானே நீ தான் அருள் புரிந்தாய்; முந்நீர் என்று அழைக்கப்படும் கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும் நான்கு முகங்களைக் கொண்டுள்ள பிரமனும், உனது திருவடியையும் திருமுடியையும் அறிய முடியாத வண்ணம் நீண்ட நெருப்புப் பிழம்பாக நின்றவனே, சண்பை என்று அழைக்கப்படும் தலத்தில் நீ விரும்பி அமர்ந்துள்ளாய்; தங்களது கொள்கைகளில் உறுதியான நிலைப்பாடு ஏதுமின்றி இரண்டு வகையாக விளக்கம் கூறி சந்தேகம் கொண்டவர்களாக விளங்கும் சமணர்களும் உடல் அழியும் நிலையினை (உடல் உலகத் துன்பங்களிலிருந்து விடுபடுகின்றது என்று  கருதி) முக்திநிலை என்று தவறாக கருதும் புத்தர்களும் உன்னை அறிய முடியாமல் திகைத்து நிற்பது போன்று, நீ உறைகின்ற சீர்காழி தலத்தினை ஊழி வெள்ளமும் அறிய முடியாமல் நின்றது. பல வேள்விகளையும் யாகங்களையும் செய்ததால் மிகுந்த புகழுடன் விளங்கிய பராசர முனிவர், மீனவப் பெண் மச்சகந்தியைப் புணர்ந்த தனது கொச்சையான கீழ்மைச் செயலால் விளைந்த பாவத்தை போக்கிக் கொள்ள உதவிய கொச்சைவயம் என்று அழைக்கப்படும் தலத்தினை, பெருமானே நீ மிகவும் புகழ்ந்து அதனை உனது இருக்கையாகக் கொண்டுள்ளாய்; 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com