124. வரமதே கொளா - பாடல் 8

பெருமானின் அருள்
124. வரமதே கொளா - பாடல் 8


பாடல் 8:

    உறவுமாகி அற்றவர்களுக்கு மாநெதி  கொடுத்து நீள்புவி இலங்கு சீர்ப்
    புறவ மாநகர்க்கு இறைவனே எனத் தெறகிலா வினையே

விளக்கம்:

அற்றவர்கள்=வறுமையில் வாடுவோர்; நெதி=நிதி,செல்வம்; புறவம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்து ற. இந்த எழுத்து பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை நாம் உணரலாம். பொதுவாக வறுமையில் வாடும் மனிதர்களை விட்டு அவரது உறவினர்கள் பிரிந்து விடுவதையே நாம் உலகில் காண்கின்றோம். ஆனால் பண்டைய நாளில் வாழ்ந்த வந்த மனிதர்கள், அத்தகைய வறியோரை தங்களது உறவினராக பாவித்து அவர்களுக்கு செல்வம் அளித்து உதவுவார்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அத்தகைய ஈகைக் குணம் உடையோர் பெருமானின் அருள் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடல் திருவையாறு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (4.38.10) கடைப் பாடல். .

    இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
    கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
    பரப்பு நீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
    அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே

இந்த பாடலில் பொருள் இல்லாமல் இருப்பவர்களுக்கு கொடை கொடுத்து உதவும் செல்வர்களுக்கு பொருளும் கொடுத்து அவர்களுக்கு வறியவர்க்கு அருளும் குணமும் வைத்தவர் இறைவன் என்று அப்பர் நயமாக கூறுவதை காணலாம். இரந்தவர்க்கு கொடுத்து உதவாது மறைத்து வாழ்பவர்க்கு நரகம் என்ற ஒன்றினை இறைவன் வைத்துள்ளான் என்று கூறி செல்வர்களுக்கு எச்சரிக்கை விடுவதையும் இந்த பாடலில் நாம் உணரலாம். அடுத்தவர்களுக்கு உதவாமல் செல்வத்தை மறைத்து வைக்கும் லோபிகளுக்கு இறைவன் தண்டனை அளிப்பான் என்பதற்கு கங்கை நதி ஒரு உதாரணம் என்பதால், கங்கை நதியுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சி இங்கே கூறப்பட்டுள்ளது. தங்களிடம் பொருள் இருந்தும், இரப்பவர்களுக்கு உதவாதவர்களை உலகம் உலோபி என்று இகழ்கின்றது. அவ்வாறு இருத்தல் கொடிய செயல் என்பதை உணர்த்தும் வண்ணம், காமம் முதலான ஆறு குற்றங்களில் ஒன்றாக உலோபம் கருதப்படுகின்றது. இந்த குற்றத்தை இறைவன் பொறுக்கமாட்டார் என்றும் அதற்கு உரிய தண்டனை அளிப்பார் என்றும் இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார்.

கபில முனிவரை, தங்களது தந்தை சகரன் செய்யவிருந்த அசுவமேத யாகத்து குதிரையைத் திருடியவன் என்று தவறாக கருதி, அவர் மீது பாய்ந்த சகரனின் புத்திரர்கள் அனைவரும் தியானத்திலிருந்து விழித்த கபிலரின் கண் பார்வையால் சாம்பலாக எரிந்தனர். தனது நீரினில் அந்த சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு நற்கதி வழங்கும் தன்மை கங்கை நதிக்கு இருந்ததால் தான், பகீரதன் கங்கை நதியை பூவுலகத்திற்கு, தவம் செய்து வரவழைக்க முயற்சி செய்தான். ஆனால் அவ்வாறு உதவ மறுத்த கங்கை நதிக்கு பாடம் கற்பிக்கும் வகையில், வேகமாக இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் இறைவன் சிறை வைத்த நிகழ்ச்சி இங்கே நயமாக உணர்த்தப் படுகின்றது. தன்னில் நீராடுபவர்களுக்கு, அவர்களின் பாவத்தை போக்கும் புனித தன்மை படைத்தது கங்கை நதி. அதனால் தான், கபில முனிவரின் சாபத்தால் சாம்பலாக மாறிய சகர மன்னனின் புதல்வர்களை உய்விக்க வேண்டி, பகீரதன் கங்கை நதியை பூவுலகிற்கு கொண்டு வர முயன்றான். ஆனால் அப்போது, கங்கை நதிக்கு விருப்பம் இல்லாத நிலை இருந்தது, அதனால் தான், தான் கீழே இறங்கி வரும்போது தன்னைத் தாங்கும் வல்லமை படைத்தவர் வேண்டும் என்று சாக்கு கூறியபோது, கங்கையை தனது சடையில் தாங்கி சிறை செய்து கங்கை நதிக்கு தண்டனை அளித்து, அனைவருக்கும் அருள வேண்டும் என்று கங்கை நதிக்கு உணர்த்தியவர் அல்லவா சிவபெருமான். 

கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (4.43.5), அப்பர் பிரான் கொடையாளர்களின் செல்வமாக இருப்பவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். தானவர்=தானம் அளிப்பவர், கொடையாளிகள்; கொடையாளிகளுக்கு, அவர்கள் அடுத்தவர்களுக்கு உதவும் வண்ணம், அவர்களுக்கு செல்வம் தந்து அருளுபவர் பெருமான் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் கூறுகின்றார். பொருள் இல்லாதவர்களுக்கு பொருள் உள்ளவர்கள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு ஈந்து உதவுவார்களை உலகம் புகழ்கின்றது.

    ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழியாகித்
    தானவர் தனமுமாகி தனஞ்சயோனோடு எதிர்ந்த
    கானவர் காளகண்டர் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
    ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியானாரே

வறுமையினால் இரந்து வாழும் உயிர்களுக்கு, அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் உதவிகள் கிடைப்பதற்கும், அத்தகையோருக்கு உதவும் வண்ணம் கருணை உள்ளத்தை பொருள் படைத்தோரிடமும் வைத்தவர் பெருமான் ஆவார். அவ்வாறு ஈயாமல் உலோபிகளாக இருக்கும் உயிர்கள் மறுமையில் தகுந்த தண்டனைகள் பெற்று வருந்தும் வண்ணம் கொடிய நரகங்களையும் படைத்தவர் பெருமான் ஆவார். பகீரதனுக்கு உதவி செய்வதற்கு தயக்கம் காட்டி, மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நங்கையை தனது சடையில் அடைத்து வைத்து, அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்க வேண்டும் என்று உணர்த்திய பெருமான், கயிலை மலையினை பேர்க்கத் துணிந்த அரக்கனுக்கு   அருள் புரிந்தவர் ஆவார். இத்தகைய பண்புகளை உடைய பெருமான் திருவையாறு தலத்தில் ஐயாறனாக உறைகின்றார் என்பதே மேற்கண்ட திருவையாறு பதிகத்தின் திரண்ட பொழிப்புரையாகும். 

பொழிப்புரை: 

பொருள் இல்லாது வறுமையில் வாடும் மனிதர்களைத் தங்களது உறவினராக மதித்து, அவர்களுக்கு நிறைய செல்வத்தை அளித்து உதவும் கொடையாளிகள், இந்த நீண்ட உலகத்தில் புகழுடன் விளங்குகின்ற புறவம் என்று அழைக்கப்படும் நகரில் உறையும் இறைவனே என்று பெருமானை போற்றி வழிபட, அவர்களது வினைகள் அவர்களுக்கு துன்பம் ஏதும் செய்யாதவாறு இறைவன் அருள் புரிகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com