124. வரமதே கொளா - பாடல் 10

பெருமானை வழிபடுதல்
124. வரமதே கொளா - பாடல் 10

பாடல் 10:

    ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவொணாததோர் வடிவு
            கொண்டவன்
    காழி மாநகரக் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே

 
விளக்கம்:

ஆழி=சக்கரப்படை; அங்கை=அழகிய கை; இந்த பாடலில் பெருமானின் திருநாமங்களைக் கற்றல் தவமாக சம்பந்தரால் கருதப் படுகின்றது. இந்த கருத்தை பின்பற்றியே பின்னாளில் அபிராமிபட்டரும் கற்பது உன்னாமம் என்று பாடினார் போலும். காழி என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ழி, பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக் வருகின்றது.  தேவாரப் பாடல்கள் பாடுவதும், தேவாரப் பாடல்கள் பாடும் அடியார்களைப் போற்றுவதும், பெருமானை வழிபடுதலும் அவனது திருநாமங்களைச் சொல்வதும், அவனது புகழினைப் பாடி ஆடுதலும், தவமாக திருமுறை ஆசிரியர்களால் கருதப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருவண்ணாமலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலில் (1.10.11) ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலகளைப் பாடும் அடியார்களின் திருவடிகளை போற்றுவதே தவம் என்று சொல்லப் படுகின்றது. அடியார்கள் கொம்பு வாத்தியத்தை முழக்குவதைக் கேட்கும் குயில்கள் கூவும் சீர்காழி என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் 
    அம்புந்திய எயில் எய்தவன் அண்ணாமலை அதனை 
    கொம்பு உந்துவ குயில் ஆலுவ குளிர் காழியுள் ஞான
    சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே

புளமங்கை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப்பாடலிலும் (1.16.11) சந்தங்கள் பொருந்திய ஞானசம்பந்தரின் பாடல்களை சொல்லி ஆடுதல் தவம் என்று கூறப்படுகின்றது.

பொந்து=மரப் பொந்து; புளமங்கை தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெயர் ஆலந்துறை 

    பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
    அந்தண் புனல் வரு காவிரி ஆலந்துறையானைக்
    கந்தம் மலி கமழ காழியுள் கலை ஞானசம்பந்தன்
    சந்தம் மலி பாடல் சொலி ஆடைத் தவமாமே

பருப்பதம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலிலும் தேவாரப் பாடல்களை மீண்டும் மீண்டும் நினைத்து பெருமானை வழிபடுதல் தவம் என்று சொல்லப் படுகின்றது

    வெண் செநெல் விளை கழனி விழவொலி கழுமலத்தான்
    பண் செலப் பல பாடல் இசை முரல் பருப்பதத்தை
    நன் சொலினால் பரவு ஞானசம்பந்தன் நல்ல
    ஒண்சொலின் இவை மாலை உருவெணத் தவமாமே 

வெங்குரு (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களின் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.94.5) ஞானசம்பந்தர் பெருமானின் திருவடிகளைப் போற்றும் அடியார்கள் தவத்தின் பயனை பெறுகின்றனர் என்று கூறுகின்றார். மிக்கவர்=பெருமான் பால் அன்பு மிக்க அடியார்கள்; மேவிய=பொருந்தி வீற்றிருக்கும்; அக்கு=பாசி மணிமாலை; தக்கவர்=தகுதி பெற்ற அடியார்கள்.  

    மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய 
    அக்கினொடு அரவு அசைத்தீரே
    அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடியிணை
    தக்கவர் உறுவது தவமே 

சிறுகுடி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (3.97.6) சம்பந்தர் பெருமானை வாழ்த்தும் அடியார்கள் அச்சமில்லாதவர்களாகவும், நலம் மிக்கவர்களாகவும், தவப்பேறு உடையவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகின்றார்.

    செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
    மங்கையை இடம் உடையீரே
    மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்
    சங்கை அது இலர் நலர் தவமே

நறையூர் சித்தீச்சரம் தலத்தில் இறைவனை குறித்து செய்யப்படும் வழிபாடு தவமாகும் என்று சம்பந்தர் கூறும் பாடல் (1.29.10) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உலகத்தவரை நோக்கி கூறும் அறிவுரையாக இந்த பாடல் அமைந்துள்ளது. உலகத்தவரே நீங்கள் உய்வினை அடையவேண்டும் என்று விரும்பினால் பெருமானை வழிபடுவதன் மூலம் தவத்தின் பயனைப் பெற்று உய்வினை அடைவீர்களாக என்று கூறுகின்றார். புத்தர் மற்றும் சமணர் ஆகிய வேற்று மதத்தவர்களின் சொற்களைக் கேட்பதால் வாழ்வினில் உய்வினை அடைய முடியாது என்ற செய்தியும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. கழறும்=சொல்லும்

    மெய்யின் மாசர் விரி நுண் துகிலார்
    கையில் உண்டு கழறும் உரை கொள்ளேல் 
    உய்ய வேண்டில் இறைவன் நறையூரில் 
    செய்யும் சித்தீச்சரமே தவமாமே

   
இறைவனின் திருநாமத்தை சொல்வதே தவம் என்று சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் (1.102.8) ஒன்றில் சம்பந்தர் கூறுகின்றார். சலம்=கங்கை நதி; கடலலைகளால் தள்ளப்பட்டு மரக்கலங்கள் கரை வந்து சேரும் சீர்காழி நகரமென்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

    உலம் கொள் சங்கத்தார் கலி ஓதத்து உதையுண்டு
    கலங்கள் வந்து கார்வயல் ஏறும் கலிக்காழி
    இலங்கை மன்னன் தன்னை இடர் கண்டு அருள் செய்த
    சலம் கொள் சென்னி மன்னா என்னத் தவமாமே 
 

பொழிப்புரை: 

சக்கரப் படையினைத் தனது அழகிய கையில் கொண்டுள்ள திருமாலும் பிரமனும் தனது அடியையும் முடியையும் அறியமுடியாத வண்ணம் நீண்ட நெருப்புப் பிழம்பாக அவர்களின் எதிரே தோன்றியவன் சிவபெருமான். சீர்காழி நகரில் உறையும் பெருமானின் திருநாமத்தைக் கற்றுக்கொள்வதே நல்ல தவமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com