124. வரமதே கொளா - பாடல் 11

மூதுரை பாடலை
124. வரமதே கொளா - பாடல் 11

பாடல் 11:

    விச்சை ஒன்றிலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களை கரிசு அறுத்தவன்
    கொச்சை மாநகரக்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறுமினே
  

விளக்கம்:

விச்சை=வித்தை, ஞானம்; பிச்சர்=பித்தர்; கரிசு=குற்றம். கொச்சைவயம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ச், பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது. இறைவனை மீதும் அவன் உறையும் தலத்தின் மீதும் அன்பு கொண்டு  போற்றி புகழ்வது நல்ல குணங்களில் ஒன்று என்பதால் அந்த குணத்தினை குறிப்பிட்டு சொல்லுமாறு சம்பந்தர் இங்கே வலியுறுத்துகின்றார். இவ்வாறு அவர் கூறுவது ஔவையார் அருளிய மூதுரை பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பாடலில் நல்லாரின் குணங்களை கூறுவதும் நன்றே என்று ஔவை பிராட்டி கூறுகின்றார்.

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க
    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே -- நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்றே
 
 
பொழிப்புரை:  

உண்மையான மெய்ப்பொருளை உணர்த்தும் ஞானம் சிறிதும் இல்லாத சமணர்கள் பித்தர்களாகிய புத்தர்களின் குற்றம் உடைய சொற்களை பொருட்படுத்தாது நீக்கும் சிவபெருமான் கொச்சை நகர் என்று அழைக்கப்படும் தலத்தில் வீற்றிருக்கின்றான். அந்த நகரத்தின் மீது அன்பு கொண்டு போற்றும் நல்ல குணத்தினை போற்றுவீர்களாக.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com