124. வரமதே கொளா - பாடல் 12

இன்பமே தருவான்
124. வரமதே கொளா - பாடல் 12

பாடல் 12:

    கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ்
    முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே

விளக்கம்

கழுமலம் என்ற பெயரின் இரண்டாவது எழுத்தாகிய ழு, பாடலின் இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது. தான் பாடிய பாடல்களை தமிழ் என்று சம்பந்தர் பல இடங்களில் கூறுகின்றார். அவரது தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் பல மிறைக் கவிதைகள சிந்தித்த நாம், சிறந்த தரம் வாய்ந்த அவரது இனிய தமிழின் சிறப்பினை உணர்கின்றோம். தேவாரப் பாடல்களின் இனிய தமிழினை அனுபவித்த ஔவையார், நல்வழி நீதிநூல் பாடலில் மூவர் தமிழ் என்று தேவாரத்தை குறிப்பிடுகின்றார். ஒத்த கருத்துகள் கொண்ட நூல்கள் எவை எவை இந்த பாடலில் என்று பட்டியல் இடப்படுகின்றது. வடமொழியில் உள்ள நான்மறைகள், திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருக்கோவையார் மற்றும் திருமந்திரம் ஆகிய நூல்கள் அனைத்தும் ஒரே கருத்தையே தெரிவிக்கின்றன என்று இந்த பாடலில் கூறுகின்றார். முனி மொழி என்ற தொடருக்கு வாதவூர் முனி மணிவாசகரின் நூல்கள் என்று சிலரும் வேதவியாசர் அருளிய வேதங்களுக்கு வியாக்கியானங்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். 

    தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்
    மூவர் தமிழும் முனி மொழியும் கோவை
    திருவாசகமும் திருமூலர் சொல்லும்
    ஒரு வாசகம் என்று உணர்       

பொழிப்புரை: 

கழுமலம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் கடவுளாகிய பெருமானின் திருப்பாதங்களை எப்போதும் தனது மனதினில் கருதும் ஞானசம்பந்தன் அளித்த இனிய தமிழ் பாடல்களை முழுதும் பாட வல்ல அடியார்களுக்கு மூன்று கண்களை உடைய பெருமான் எப்போதும், இம்மையிலும் மற்றும் மறுமையிலும்  இன்பமே தருவான். 

முடிவுரை: 

இந்த பதிகத்தின் பாடல்களில் சம்பந்தர் சீர்காழி தலத்தின் பன்னிரண்டு வேறுவேறு பெயர்களை ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு, அவ்வாறு அழைக்கப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருநாமத்தை சொல்லி பல பயன்களை அடையும் வண்ணம் நமக்கு ஊக்கம் அளிக்கின்றார். நமக்கு ஊக்கம் அளிவிக்கும் வண்ணம், அவ்வாறு இறைவனின் நாமத்தை சொல்ல வல்லவர்கள் அடையும் பயன்களை குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் புகழுடன் விளங்குவார்கள் என்றும் இரண்டாவது பாடலில் ஆணிப்பொன் போன்று உயர்வானவர்கள் என்றும் நான்காவது பாடலில் வினைகள் அகலும் என்றும் ஐந்தாவது பாடலில் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்றும் ஆறாவது பாடலில் அவர்களின் உடல் மேல் வினைகள் சேராமல் இருக்கும் என்றும் ஏழாவது பாடலில் அட்டமா சித்திகள் பெறுவார்கள் என்றும் எட்டாவது பாடலில் வினைகள் துன்பங்களைத் தாராது என்றும் ஒன்பதாவது பாடலில் தீய வினைகள் செயலற்று விடும் என்றும் சீர்காழி நகரத்தின் பல்வேறு நாமங்களைச் சொல்லி ஆங்கே உறையும் பெருமானே என்று தொழும் அடியார்கள் பெறுகின்ற பலன்களை குறிப்பிடுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில் சிவபெருமானே அகில உலகங்களுக்கும் நாயகன் என்று நமக்கு உணர்த்தி பதினோராம் பாடலில் அவனது குணங்களைப் புகழ்ந்து போற்றுமாறு அறிவுரை கூறுகின்றார். பன்னிரண்டாவது பாடல் இந்த பதிகத்தினை ஓதுவோர் அடையும் பயனை குறிப்பிடும் பாடலாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com