125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 1

முன்னோடியாக திகழ்ந்தன
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 1

பின்னணி:

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து, வித்தியாசமான பல பதிகங்கள் பாடினார். அப்போது அவர் பாடிய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன. அத்தகைய பதிகங்களில் சிலவற்றை  மொழிமாற்றுப் பதிகம் (1.117) மாலை மாற்றுப் பதிகம் (3.117) வழிமொழி விராகப் பதிகம் (3.67) ஏகபாதம் (1.127) திருவிருக்குக்குறள் (1.90) திருவெழுகூற்றிருக்கை (1.128) ஈரடி (3.110) ஆகியவற்றை சிந்தித்த நாம் இப்போது ஈரடி மேல் வைப்பு என்ற வகையில் அமைந்துள்ள இந்த திருப்பதிகத்தை சிந்திப்போம். அதற்கு முன்னர் இந்த வகைப் பதிகத்தை குறிப்பிடும் சேக்கிழாரின் பெரியபுராணப் பாடலை நாம் இங்கே காண்போம்.

    செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்களால் மொழி மாற்றும்
    வந்த சீர் மாலைமாற்று வழிமொழி எல்லா மடக்குச்  
    சந்த இயமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக்குறள் சாத்தி
    எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு

மேற்கண்ட பெரிய புராணப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள பதிக வகைகளில், ஈரடிமேல் வைப்பு என்ற வகையினைத் தவிர்த்து மற்ற பதிகங்களை இதுவரை நாம் சிந்தித்தோம். அவை அனைத்தும் பன்னிரண்டு பாடல்கள் கொண்டவையாகவும் சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களையும் கொண்டவையாக விளங்கியதை நாம் கண்டோம். இப்போது இங்கே நாம் சிந்திக்கும் பதிகம், அந்த வகையில் மேலே குறிப்பிட்ட பதிகங்களிலிருந்து சற்று மாறுபட்டது. இந்த பதிகத்தில் பூந்தராய் என்ற பெயரே அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடப் படுகின்றது. மேலும் இந்த பதிகத்தில் பதினோரு பாடல்களே உள்ளன. எனினும் பெரும்பாலான பதிகங்களின் அமைப்பிலிருந்து இந்த பதிகம் மாறுபட்டு இருப்பதால், இந்த பதிகத்தினையும் சேக்கிழார் இங்கே குறிப்பிட்டார் போலும். பொதுவாக ஒரு பதிகத்தின் பாடல்களில் உள்ள நான்கு அடிகளும் ஒரே சந்த வகையைச் சார்ந்ததாக இருக்கும். மாறுபட்டிருக்கும் ஒருசில இடங்களிலும் சிறிய மாறுதல்களே காணப்படும். ஆனால் இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்தும் நான்கு சீர்களைக் கொண்டிருந்தாலும், முதல் இரண்டு அடியில் உள்ள சீர்கள், அடுத்த இரண்டு அடிகளில் உள்ள சீர்களுடன் பெரிதும் மாறுபடுகின்றன. முதல் இரண்டு அடிகளில் உள்ள எதுகை அமைப்பு அடுத்த இரண்டு அடிகளில் காணப்படுவதில்லை. இவ்வாறு மாறுபட்ட அடிகள் ஒன்றன் மேல் ஒன்று வைக்கப்பட்டு இருப்பது போன்று காணப்படுவதால், ஈரடி மேல் வைப்பு என்ற பெயர் வந்தது. இதே வகையில் வேறொரு பதிகமும் காணப்படுகின்றது. அந்த பதிகம் கொள்ளம்புதூர் என்ற தலத்தின் மீது அருளப்பட்ட பதிகம் (3.06) இந்த பதிகத்தின் நான்காவது அடியில் ஒரு சீர் குறைந்து மூன்று சீர்களே காணப்படுகின்றன.  இந்த இரண்டு பதிகங்களும் காந்தாரபஞ்சமம் என்ற பண்ணில் அமைந்துள்ளன.         

பாடல் 1:

    தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
    மிக்க செம்மை விமலன் வியன் கழல்
    சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
    நன்றது ஆகிய நம்பன் தானே

விளக்கம்:

தகர்த்தவன்=முற்றுப் பெறாமல் அழித்தவன்; செம்மை=செம்மையாகிய சிவத்தன்மை; வீடுபேறு; செம்மை என்பதற்கு சிவந்த நிறம் என்று பொருள் கொண்டு சிவந்த மேனியை உடைய பெருமான் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சென்று=உலகத்து உயிர்கள் மற்றும் உலகப் பொருட்களின் மீது வைத்துள்ள பாசங்களிலிருந்து விலகிச் சென்று; விமலன்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன். இந்த குணம் பெருமானின் எட்டு உயர்ந்த குணங்களில் ஒன்றாகும். மெய்க்கதி=உண்மையான புகலிடம்; நம்பன்=உயிர்களால் நம்பிக்கையுடன் விரும்பப் படுபவன்; நன்றது ஆகிய=நன்மையைத் தருகின்ற; வியன்= அகன்ற, இங்கே மிகுந்த பெருமையுடைய என்று பொருள் கொள்ளவேண்டும்.    

பொழிப்புரை:

வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக, சிவபெருமானை ஒதுக்கி வைத்து ஒரு வேள்வி செய்ய, தக்கன் முயற்சி செய்தான். அந்த வேள்வி முற்றுப் பெற்றால் ஒரு தவறான முன்மாதிரியாக மாறிவிடும் என்ற நோக்கத்துடன், அந்த வேள்வி முற்றுப் பெறாமல் அழித்தவன் சிவபெருமான். பூந்தராய் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரத்தில் உறையும் பெருமானின், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய பெருமானின், பெருமை மிகுந்த திருவடிகளை, அணுகிச் சென்று அடைந்து, நமது பல துன்பங்களுக்கு காரணமாக உள்ள உலகப் பொருட்கள் மற்றும் உலகத்து உயிர்கள் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை விட்டு விலகிச் சென்று, பெருமானின் திருவடிகளை உமது சிந்தையில் வைப்பீர்களாக. அவ்வாறு செய்வீராயின், நமக்கு உண்மையான புகலிடமாகத் திகழும் அந்த திருவடிகள், உலகத்து உயிர்கள் பலவும், மிகுந்த நம்பிக்கையுடன் தொழும் அந்த திருவடிகள், நமக்கு பல நன்மைகளை புரியும்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com