125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 2

பெருமானின் திருவடிகள்
125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 2

பாடல் 2:

    புள்ளினம் புகழ் போற்றிய பூந்தராய்
    வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ
    ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்னெறி
    மூலம் ஆய முதலவன் தானே

விளக்கம்:

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் திருவடிகளை தொழுதால் பல நன்மைகள் நமக்கு விளையும் என்று கூறிய ஞானசம்பந்தர், இந்த காரணம் பற்றியே தங்களது ஞானத்தை பெருகிக் கொள்ள விரும்புவோர் பெருமானின் திருவடிகளைத் தொழுகின்றனர் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் பெருமானின் திருவடிகளைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பயன்களை எடுத்துக் கூறுகின்றார். வெள்ளம்=கங்கை 

இந்த தலத்திற்கு தோணிபுரம் என்ற பெயர் உள்ளது. ஒரு சமயம் பிரளய வெள்ளம் எங்கும் பொங்கி உலகினை மூட முயற்சி செய்த போது, பெருமான் உமையம்மையுடன் ஒரு படகினில் ஏறி, வெள்ளத்தில் மூழ்காமல் சற்று மேடாக இருந்த இந்த தலம் வந்தார் என்று தலபுராணம் கூறுகின்றது. பிரணவ மந்திரத்தை தோணியாக மாற்றி, அதனில் வந்த பெருமான் அறுபத்து நான்கு கலைகளையும் தனது ஆடையாக உடுத்தி வந்தார் என்று கூறுவார்கள். அந்த சமயத்தில், தேவர்கள் பலரும் பறவையின் வடிவத்தில் இந்த தோணியை தாங்கி வந்தனர் என்று கூறுவார்கள். இந்த தகவலை திருஞானசம்பந்தர் தோணிபுரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.100.9) கூறுகின்றார். தொல்பறவை என்ற தொடர் மூலம் பண்டைய நாளில் நடந்த நிகழ்ச்சி என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வெல் பறவை=வெல்லும் தன்மை உடைய கருடன்; விரை மலர்= நறுமணம் மிகுந்த தாமரை மலர்;. பல் பறவைப் படியாய்=பல பறவைகள் ஒன்று சேர்ந்து பறந்தது போன்று மிகுந்த வலிமையுடன் உயரமாக பறந்த அன்னப் பறவை; செல்வற= பிரமன் திருமால் ஆகிய இருவரும் தாங்கள் உயரப் பறந்தும் கீழே அகழ்ந்தும் சென்றதை நிறுத்தாமல் தொடர்ந்த போதிலும்;   

    வெல் பறவைக் கொடி மாலு மற்றை விரைமலர் மேல் அயனும்
    பல் பறவைப் படியாய் உயர்ந்தும் பன்றியதாய் பணிந்தும்
    செல்வற நீண்ட எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்
    தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மைத் தொணிபுரமாமே   

இதே தகவல் அப்பர் பிரான் இந்த தலத்தின் மீது அருளிய பாடலிலும் (4.82.1) குறிப்பிடப் பட்டுள்ளது. நளிர்=குளிர்ந்த; ஞான்று=நாள்; கால்=வலிமை,வலிமையுடன் வேகமாக இறங்கி வந்த கங்கை நதி; வண்கை=வலிமை வாய்ந்த திரண்ட தோள்கள்; வண்கைச் சடை=திரண்ட தோள்களின் மீது படர்ந்து விரிந்த சடை

    பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
    நாலஞ்சு புள்ளினம் ஏத்தின என்பர் நளிர் மதியம்
    கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
    ஆள் அன்றி மற்றும் உண்டோ அந்தண் ஆழி அகலிடமே 

புள்ளினம் என்ற சொல்லினை புகழ் போற்றிய என்ற தொடருடன் இணைத்து பெருமானின் புகழ் பாடிய புள்ளினங்கள் என்றும் ஒரு விளக்கம் சொல்லப் படுகின்றது. இந்த தலத்தில் சான்றோர்கள் வேத கீதங்களையும் கீதங்களையும் பாடுவதைக் கேட்ட பறவைகள் (கிளி, பூவை--நாகணவாய்ப் பறவைகள்) தாங்களும் பெருமானைப் புகழ்ந்து பாடுகின்றன என்று சம்பந்தர் கூறியதாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. இந்த விளக்கம் கிளிகள் வேதங்கள் பொருள் சொல்வதாகவும், அடுத்தவர் ஓதும் வேதங்களில் உள்ள பிழைகளை திருத்துவதாகவும், பெருமானின் திருநாமத்தை சொல்வதாகவும் குறிப்பிடும் பாடல்களை நமக்கு நினைவூட்டுகின்றன. 

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (2.113) ஒன்றினில் ஞானசம்பந்தர் சீர்காழி தலத்தில் அந்நாளில் வாழ்ந்து வந்த கிளிகள் பற்றி சுவையான செய்தியை கூறுகின்றார். வேதங்களை அடிக்கடி அந்தணர்கள் ஓதக் கேட்ட இந்த கிளிகள் இளையவர்கள் வேதம் ஓதும் போது செய்யும் தவறுகளை திருத்தும் வல்லமை படைத்தவை என சம்பந்தர் சிறப்பித்து கூறுகிறார். இதிலிருந்து அந்த நாளில் அந்தணர்கள் தங்களது தொழில்களில் இரண்டான வேதம் ஒதுதல், வேதம் ஓதுவித்தல் இவற்றை முறையாக செய்து கொண்டு இருந்தனர் என்று தெளிவாகின்றது. சரிதை=ஒழுக்கம்; விருது இலங்கும்=பெருமானின் வெற்றியை பறை சாற்றும்; வெற்றியை பறை சாற்றும் பல புராண நிகழ்ச்சிகளை உடையவர் பெருமான்.  

    விருது இலங்கும் சரிதைத் தொழிலார் விரி சடையினார்
    எருது இலங்கப் பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது
    பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓதப் பிழை கேட்டலாற்
    கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே

கிளிகள் வேதம் ஒதுவதைப் பற்றி சம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு சங்கரவிஜயம் நூலில் வரும் மண்டனமிச்ரரை நினைவுபடுத்தும். மாஹிஷ்மதி நகரில் உள்ள மண்டனமிச்ரரை பார்க்கச் சென்ற ஆதி சங்கரர், அந்த நகரை அடைந்த பின்னர், வீதிகளில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுவர்களிடம் மண்டனமிச்ரரின் வீடு எது எனக் கேட்டார். அதற்கு அந்த சிறுவர்கள், ஒரு வீட்டினை சுட்டிக் காட்டி அடையாளம் கூறி வழி காட்டினர். அவர்கள் காட்டிய அடையாளம் என்னவென்றால், எந்த வீட்டின் வாசலில் கிளிகள் வேதம் சொல்கின்றனவோ அந்த வீடு தான் மண்டனமிச்ரரின் வீடாகும் என்பது தான். மேலும் அங்கு வேதம் கற்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் வேதத்தின் ஒரு சொல்லை தவறாக உச்சரித்தபோது ஒரு கிளி அந்த தவறினை திருத்தியதாகவும் அந்த நூலில் கூறப்படுகின்றது.

வீழிமிழலை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.132.1) ஞானசம்பந்தர், கிளிகள் வேதத்தின் பொருளை சொல்லியதாக கூறுகின்றார். வேரி=தேன்; ஏர்=அழகு;

    ஏரிசையும் வட ஆலின் கீழ் இருந்து அங்கு ஈரிருவர்க்கு இரங்கி நின்று   
    நேரிய நான்மறைப் பொருள் உரைத்து ஒளி சேர் நெறி அளித்தோன் நின்ற            கோயில்
    பாரிசையும் பண்டிதர்கள் பந்நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு
    வேரிமலி பொழில் கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலையாமே

‘விடை அது ஏறி எனத் தொடங்கும் பதிகத்திலும் (2.122) இந்த தலத்தில் வாழும் கிளிகள் பேசக் கற்றுக்கொள்வதே மறையோர்கள் ஓதும் வேதத்தில் இருந்து என்று கூறி அங்கே வேதம் ஓதப்பட்ட சிறப்பினை சம்பந்தர் கூறுகிறார். 

    வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார்
    ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது
    சால நல்லார் பயிலும் மறை கேட்டுப் பதங்களை
    சோலை மேவும் கிளி தான் சொற் பயிலும் புகலியே 

பெருமானுடன் சேர வேண்டும் தீராத ஏக்கத்துடன் இருக்கும் தலைவி பெருமானுக்கு தூதுவர்கள் பலரை அனுப்பி தூது விடுத்தும் பெருமான் வாராத நிலையில், அரனின் நாமத்தினை எவராவது சொல்லக் கேட்டால் தனது வருத்தம் சிறிதாவது குறையும் என்ற நம்பிக்கையில் தான் வளர்த்த கிளியை அரனது நாமம் கூறுமாறு வேண்டுகிறாள். இறைவனின் திருநாமம் சொன்னால் கிளிக்கு தேனும் பாலும் தருவதாக ஆசை காட்டுகின்றாள். இறைவனின் பேரில் கொண்ட தலைவி கொண்டிருந்த காதலின் சக்தி தான் என்னே. தலைவியாக தன்னை உருவகித்து, இறைவனுடன் தான் சென்று சேர வேண்டும் என்ற விருப்பத்தை சம்பந்தர் வெளிப்படுத்தும் பாடல்.   

    சிறை ஆரும் மடக் கிளியே இங்கே வா தேனொடு பால் 
    முறையாலே உணத் தருவன் மொய் பவளத்தொடு தரளம்
    துறை ஆரும் கடல் தோணிபுரத்து ஈசன் துளங்கும் இளம்
    பிறை ஆளன் திரு நாமம் எனக்கு ஒரு கால் பேசாயே 

மணிவாசகரும் தனது திருத்தசாங்கம் பதிகத்தில், கிளியை நோக்கி, இறைவனை குறிக்கும் சொற்களாகிய, செம்பெருமான், ஆரூரன், எம்பெருமான், தேவர் பிரான் என்ற சொற்களை கூறுமாறு வேண்டுவதை நாம் காணலாம். தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவிக்கு, தலைவனது பெயரை கேட்ட மாத்திரத்திலே. அவனுடன் கூடி இணைந்தது போன்ற மகிழ்ச்சி தோன்றுவது இயற்கை தானே. அதனால் தான் இறைவனின் பேரில் காதல் கொண்ட அருளாளர்கள், இறைவனின் நாமத்தை தாங்கள் கேட்க கூறுமாறு மற்றவரை வேண்டுகின்றனர்.

    ஏரார் இளம் கிளியே எங்கள் பெருந்துறைக் கோன்
    சீரார் திருநாமம் தேர்ந்து உரையாய் – ஆரூரன்
    செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவ போல்
    எம்பெருமான் தேவர்பிரான் என்று

திருமங்கை மன்னனும் ஒரு தலைவி தான் வளர்க்கும் கிளி அரியின் நாமம் சொல்லக் கேட்டு அந்த கிளியை கை கூப்பி வணங்கியதாக திரு நெடுந்தாண்டகம் பிரபந்தத்தில் பாடுகிறார். இறைவனனின் நாமம் சொல்லுவதிலும் கேட்பதிலும் தான் அருளாளர்களுக்கு எத்தனை இன்பம்?.

    முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலுகும் கடந்து அப்பால்
            முதலாய் நின்ற
    அளப்பு அரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்
            தம் சிந்தையானை
    விளக்கொளியை மரகதத்தை திரு தண்காவில் வெக்காவில்
            திருமாலை பாடக்             கேட்டு 
    வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியை கை கூப்பி                          வணங்கினாளே 

பெரியபுராணத்தில் திருவாரூர் தலத்தின் சிறப்பினை குறிப்பிடும் சேக்கிழார், திருவாரூரின் அருகே உள்ள வயல்களில் உள்ள கிளிகள் தேவாரத் திருப்பதிகங்களை பாடுவதை கேட்டு மகிழும் பூவைகள் (நாகணவாய்ப் பறவைகள்) என்று கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. தெள்ளும் ஓசை=இனிய ஓசை; வள்ளலார்=வேண்டுவார் வேண்டுவன எல்லாம் அருளும் பெருமான்; தெள்ளுதல் என்ற சொல்லுக்கு அகழ்ந்து என்று பொருள் கொண்டு நமது வினைகளைத் தோண்டி வெளியே எடுத்து அறுக்கும் தேவாரப் பதிகங்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. பறவைகளும் தேவாரப் பதிகங்களை கேட்டு மகிழும் தலத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் தேவாரப் பதிகங்களை ஓதியும் கேட்டும் உருகி நிற்பார்கள் என்பதை உணர்த்தும் வண்ணம், உள்ளம் ஆர் உருகாதார் என்று பாடலின் முதல் அடியில் சேக்கிழார் கேட்கின்றார்.      

    உள்ளம் ஆர் உருகாதவர் ஊர் விடை
    வள்ளலார் திருவாரூர் மருங்கெலாம்
    தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்
    கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்          

பொழிப்புரை:

அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து பேசுவதைக் கேட்ட பறவை இனங்கள், பூந்தராய் தலத்தில் உறையும் பெருமானைப் புகழ்ந்து பாடுகின்றன. கங்கை நதி வெள்ளத்தினைத் தனது சடையில் தாங்கி, ஏனைய தெய்வங்களிலிருந்து தான் மாறுபட்டவன் என்று உணர்த்தும் பெருமானின் திருவடிகளைத் தொழுவதே, தங்களது வாழ்வினில் உய்வினை அடைய விரும்பும் உலகத்தவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும். அத்தகைய அடியார்கள் தங்களது வாழ்வினில் பெறுகின்ற நன்மைகள் அனைத்திற்கும் மூல காரணமாக விளங்குபவன் சிவபெருமான் ஆவான்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com