128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 10

நன்மை விளைவிக்கும் முக்தி
128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 10


பாடல் 10:

    போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய்
    ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றுமிலை நன்றது உணர்வீர் உரைமினோ
    ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதி தான்
    சாதி மணி தெண்டிரை கொணர்ந்து வயல் புக எறி கொள் சண்பை நகரே

விளக்கம்:

பொய்=நிலையற்ற உலகப் பொருட்களை நிலையாக கருதி உரைக்கும் சொற்கள் என்பதால் பொய்மொழி என்று கூறுகின்றார். நிலையான மெய்ப்பொருளாகிய சிவபெருமானின் தன்மையை உணர்ந்து அவனை வழிபடுவதால் உயிருக்கு நன்மை விளைவிக்கும் முக்தி உலகுக்கு செல்லும் வழியினை நாம் வகுத்துக் கொள்ளமுடியும். இதனை விட்டுவிட்டு, நிலையற்ற உலகப் பொருட்களின் மீது பற்று கொண்டு வாழ்ந்தால் நம்மால் உயிரினுக்கு நன்மை விளைவிக்கும் செயல் எதையும் செய்ய முடியாது அல்லவா. எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை பின்பற்றி நாம் செய்யும் செயல்கள் உயிரினுக்கு நன்மை விளைவிக்காத செயல்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சாதி=உயர்ந்த; எறிகொள்=வீசி எறியும் தன்மை; தெண்டிரை=தெளிந்த நீர்;  போதியர்கள்= போதி மரத்தின் அடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றமையால், போதி மரத்தினை புனிதமாக கருதும் புத்தர்கள்; பிண்டி=அசோகமரம்; பிண்டியர்கள்=அசோக மரத்தினை புனிதமாக கருதும் சமணர்கள்;  போது வழுவா வகை=நேரம் தவறாமல்; நன்றது=உயிருக்கு நன்மை பயக்கும் சிவநெறி; புத்தர்கள் சமணர்கள் குறித்து உலகத்தவர்க்கு அறிவுரை கூறிய பாடல் இது.

பொழிப்புரை:

போதி மரத்தினை புனிதமாக கருதி பாராட்டும் புத்தர்களும், அசோக மரத்தினை புனிதமாக கருதி பாராட்டும் சமணர்களும், காலம் தவறாமல் உணவினை உட்கொண்டு, பொய்யான பல சொற்களை வாழ்வினை உய்விக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களது சொற்கள் எவையும்,  நிலையான முக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் வழி கோலா. எனவே அந்த சொற்களைத் தவிர்த்து நன்மை அளிக்கும் நெறியாகிய சிவநெறியைச் சார்ந்து பெருமானின் திருநாமங்களை உரைப்பீர்களாக. அனைத்து உயிர்களுக்கும் முதன்மையாக திகழ்பவனும் எம்மை ஆள்பவனும் பார்வதி தேவியைப் பிரியாது என்றும் சேர்ந்து இருப்பவனும் ஆகிய பெருமான்  உறையும் தலம்,  சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். கடலில் உள்ள தெளிந்த நீரலைகள், தேர்ந்த முத்துக்களை கொணர்ந்து வயல்கள் மீது வீசி எறியும் சிறப்பினை உடைய தலம் சண்பை நகராகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com