129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 1

சக்கர பந்தம்
129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 1

பின்னணி:

தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தல யாத்திரைகளுக்கு இடையே பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலத்தின் மீது பல வகையான பாடல்களை பாடுகின்றார். அத்தகைய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கின என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வடமொழியில் சக்கர பந்தம் என்று அழைக்கப்படும் வகையைச் சார்ந்த பதிகம். தமிழ் மொழியில் சக்கரமாற்று என்றும் சக்கர பந்தம் என்றும் அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தினை சக்கரம் என்று அழைப்பதை நாம் பதிகத்தின் கடைக் காப்பினில் காணலாம். இந்த பதிகமும் மற்ற மிறைக் கவிகள் போன்று பன்னிரண்டு பாடல்கள் கொண்டது. தலத்தின் பன்னிரண்டு  பெயர்களும் ஒவ்வொரு பாடலிலும் வருகின்றன. சுழலும் வண்டிச் சக்கரத்தின் சட்டங்கள் மாறி மாறி நமது கண்ணின் முன்னே தோன்றுவது  போன்று தலத்தின் பெயர்கள் சுழன்று சுழன்று முன்னும் பின்னுமாக வருதலால் சக்கரம் என்று சம்பந்தரால் அழைக்கப்பட்டது போலும். பிரமனூர் என்று தொடங்கும் பதிகமும் சக்கரமாற்று வகையில் அமைந்துள்ள பதிகமாகும். இந்த பதிகம் (2.70), பாண்டியன் ஞானசம்பந்தரை நோக்கி உமது பதி யாது என்று வினவிய போது, அந்த கேள்விக்கு விடையாக சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிட்டு சீர்காழியின்  சிறப்பினை உணர்த்திய பதிகமாகும்.  

இந்த பதிகத்தினை மற்ற மிறைக் கவிகளுடன் சேர்த்து ஆதி விகற்பம் என்று சேக்கிழார் கூறுகின்றார். விகற்பம் என்றால் மாறுபட்டது என்று பொருள். பெரும்பான்மையான பதிகங்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டதால் சேக்கிழார் இவ்வாறு அழைத்தார் போலும்.  பல்பெயர்ப் பத்து என்று அழைக்கப்படும் எரியார் மழு ஒன்று என்று தொடங்கும் பதிகமும்  பூமகனூர் புத்தேளுக்கு என்று தொடங்கும் கோமுத்திரி அந்தாதி பதிகமும் இந்த ஆதி விகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் அடங்கியவை என்று அறிஞர்கள்  கூறுகின்றனர். பெருமான் உறையும் தலங்களின் பெயர்களும் பெருமானின் திருநாமங்கள் போன்று புனிதமான மந்திரங்கள் என்று கருதப்படுவதால், தலத்தின் பெயர்களை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வது மந்திர ஜெபம் செய்வதற்கு ஒப்பாகும். அதனால் தான் திருஞான சம்பந்தரும் இந்த பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவராவர் என்று பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் கூறுகின்றார்.            

பாடல் 1:

    விளங்கிய சீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை
    வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்
    களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன
    இளம் குமரன் தன்னைப் பெற்று இமையவர் தம் பகை எறிவித்த இறைவன் ஊரே

விளக்கம்:

சீர்=பெருமை; விளங்கிய சீர்=பெருமையுடன் விளங்கும்; மேல் சோலை=உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட சோலை: களங்கமில் ஊர்=உயிரினுக்கு களங்கம் எனப்படும் ஆணவ மலத்தினை இல்லை என்று சொல்லும் வண்ணம் அடக்க உதவும் ஊர்; இளங்குமரன்=முருகப் பெருமான்; பகை=சூரபதுமன்; எறிவித்தல்=எறிதல், அடித்தல், முரித்தல். வீசுதல் என்று பல பொருள்களைத் தரும். இந்த சொல் இங்கே அழித்தல் என்ற பொருளைத் தருகின்றது. வண்=வளமை மிகுந்த; புகலி என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தேவர்கள் இறைவனிடம் புகலடந்தமையால் ஏற்பட்ட பெயர். அவ்வாறு தன்னிடம் புகலடைந்த தேவர்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டு முருகப் பெருமானை தோற்றுவித்த இறைவனின் செயல் இங்கே குறிப்பிடப்படுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. முருகப் பெருமானைத் தோற்றுவித்த காரணத்தை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காணலாம்.

மதுரையில் பாண்டிய மன்னனின் அவையில் அருளிய பதிகத்தின் பாடலில் (2.74.6) முருகப் பெருமானை தோற்றுவித்து தேவர்களின் பகையை (சூரபதுமன் மற்றும் அவனது படை) கெடுத்த இறைவன் என்று சிவபெருமானை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். காய்ந்த= சினத்துடன் வந்த; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமன், சிறுவன் சிவபெருமானை வழபாடு செய்வதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டதை இங்கே குறிப்பிடுகின்றார். இருங் கமலம்=சிறந்த தாமரைப்பூ. சேந்தன்=முருகப் பெருமான்; பயந்து= பெற்றெடுத்து;    

     காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலமாத்
             தோணிபுரம் சீர்
     ஏய்ந்த வெங்குருப் புகலி  இந்திரனூர் இருங் கமலத்து
             அயனூர் இன்பம்
     வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை
             காழி சண்பை
   சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன்
             திகழும் ஊரே

சுரருலகு என்று தொடங்கும் சீர்காழி பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67.3) தேவர்களின் பகையினைக் களையும் வகையில் ஆறுமுகப் பெருமானை தோற்றுவித்து தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னை வழிபடச் செய்த இறைவன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து முகங்களோடு அதோமுகம் என்று மேலும் ஒரு முகத்தினைச் சேர்த்து முருகப் பெருமானை படைத்த தன்மை, மிக அருள என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி; முகை=மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்=திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்;

    பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண
      அகவு முனிவர்க்கு
    அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய
       பகவன் இடமாம்
    பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள
       நிகரில் இமையோர்
    புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு
       புகலி நகரே  

 
அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பாடல் ஒன்றினில், (4.104.5) சூரபதுமனைக் கொன்ற முருகவேளின் தந்தை என்று அப்பர் இறைவனை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமானிடம் தோற்றுக் களைத்த நிலையில், ஏதும் செய்ய இயலாத சூரபதுமன்  மாயமாக மறைந்து போய் கடலின் நடுவே மாமரமாக நின்ற நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. விரிநீர்ப் பரவை சூர் என்ற தொடர் மூலம் இந்த நிலை உணர்த்தப் படுகின்றது.  அதிகை வீரட்டத்துப் பெருமானை வணங்காவிடின் என்ன ஏற்படும் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். வறுமையின் காரணமாக இரந்து வாழ்ந்தாலும்   சிலர் அனைவரையும் அணுகி உதவி கோருவதில்லை. தரம் வாய்ந்து ஒழுக்கத்தில் சிறந்து  விளங்கும் சிலரையே அவர்கள் அணுகுவதை நாம் இன்றும் காண்கின்றோம். ஆனால் வறுமையின் கொடுமையால் தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் உதவி கோராமல் அனைவரிடமும் இரக்கும் நிலை பலருக்கும் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த நிலைக்கு காரணம் யாது என்பதை அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சென்ற பல பிறவிகளில் வீரட்டத்துப் பெருமானை வணங்காமல் இருந்ததே, இந்த பிறவியில் அத்தகையோர், தகுதி படைத்தோர் ஏனையோர் என்று ஆராய்ந்து பார்க்காமல் அனைவரின் இல்லங்களின் முன்னே சென்று வீடு வீடாக திரிந்து இரந்து உண்கின்றனர்; இந்த நிலை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வேரூன்றி நிலையாக அவர்களுடன் நிற்கின்றது; இத்தகைய நிலை, பெருமானைத் தொழாமல் நின்ற பாவத்தால் வரும் வேதனை, மறுமையில் உங்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால் பெருமானைத் தொழுது அந்த நிலையினை தவிர்ப்பீர் என்று அப்பர் பிரான் உலகினுக்கு உணர்த்தும் பதிகம். அகம் அகவன் திரிந்து=பல வீடுகள் முன்னே சென்று நின்று; பரவை=கடல்    

    ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம் அகவன் திரிந்து
    வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர்ப் பரவை
    சூர் அட்ட வேலவன் தாதையைச் சூழ் வயலார் அதிகை
    வீரட்டத்தானை விரும்பா வரும் பாவ வேதனையே   

கோழம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.64.10) அப்பர் பிரான் போரினில் வல்ல சூரபதுமனைக் கொன்ற வேலினை உடைய முருகப்பெருமானின் தந்தை என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சமரன்=போரில் வல்லவன்; தடிந்த= கொன்ற;  

    சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
    குமரன் தாதை நல் கோழம்பம் மேவிய
    அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்
    அமரலோகம் அது ஆளுடையார்களே  

பொன்னும் மெய்ப்பொருளும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.59.10) தேவர்கள் பால் வைத்திருந்த அன்பின் காரணமாக முருகப் பெருமானை தோற்றுவித்து அவனுக்கு தந்தையாக பெருமான் விளங்கினார் என்று சுந்தரர் கூறுகின்றார். ஒட்டி=வழக்கு தொடுத்து; திருமணம் புரிந்து கொள்ளவிருந்த தன்னை அடிமை என்று வழக்கு தொடுத்து ஆட்கொண்ட பெருமான், வழக்கினில் வென்ற பின்னர் எதிரே தோன்றாமல் மறைந்து விட்டார் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். உச்சிப் போதன்=நண்பகல் போன்று ஒளிவீசுபவன்; பட்டியை=பட்டாடை உடையவன்; பெருமான் தான் அணிந்துள்ள பட்டாடையின் மேல் நாகத்தை கச்சாக இறுகக் கட்டியுள்ளார் என்று திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. செட்டி என்பது முருகப் பெருமானை குறிக்கும் செட்டியப்பன்=சிவபெருமான்.

    ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை
        நச்சரவு ஆர்த்த
    பட்டியைப் பகலை இருள் தன்னைப் பாவிப்பார் மனத்து
        ஊறும் அத் தேனை
    கட்டியைக் கரும்பின் தெளி தன்னைக் காதலால் கடற்
        சூர் தடிந்திட்ட
    செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூரானை
        மறக்கலும் ஆமே

பொழிப்புரை

பெருமையுடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்டதும் செழுமை நிறைந்ததும் ஆகிய தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வளமை மிகுந்த புறவம், நிலவுலகத்தில் உயிரினுக்கு களங்கத்தை விளைவிக்கும் ஆணவ மலத்தினை அடக்கி இல்லாதது போன்று செய்யும் சண்பை, நறுமணம் கமழும் காழி, கொச்சைவயம், கழுமலம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைத்த இந்த தலம், முருகப் பெருமானைத் தோற்றுவித்து தேவர்களின் பகையாகிய சூரபதுமன் அவனது தம்பியர்கள் மற்றும் அவனைச் சார்ந்த அரக்கர் கூட்டத்தினை அழித்த இறைவன் உறையும் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com