129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 4
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 16th May 2019 12:00 AM | Last Updated : 16th May 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 4:
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு மாப் புகலி தராய்
தோணிபுரம் வான்
சேமம் மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்
ஊர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம் விரல் சிலம்பனூர்
காழி சண்பை
பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து அவற்றின் பயன்
நுகர்வோர் பரவும் ஊரே
விளக்கம்:
பூமகன்=பிரமன்; பூமகனூர்=பிரமபுரம், மாமலையாள்=இமயமலையில் வளர்ந்த பார்வதி தேவி; சேமம்=காவல்; விறல்=வலிமை; பாமருவு=பாடல்களில் பொருந்திய; உணர்ந்து அவற்றின் பயன் நுகர்வோர்=அறுபத்து நான்கு கலைகள் மூலம் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்து, முக்தி நிலை அளித்து என்றும் அழியாத இன்பம் அளிக்கவல்ல பெருமான் அவன் ஒருவனே என்பதை தெரிந்து கொண்டு, அவனை வழிபட்டு அந்த பயனை நுகர்தல்; மா=பெருமையினை உடைய;
பொழிப்புரை;
மலைகளில் தலை சிறந்த மலையாக கருதப்படும் இமயமலைச் சாரலில் வளர்ந்த பார்வதி தேவியின் கணவனாகிய பெருமான் மகிழ்ந்து உறையும் வெங்குரு, பெருமையினை உடைய புகலி, பூந்தராய், தோணிபுரம், வானளாவ உயர்ந்து நின்று நகரத்திற்கு சிறந்த காவலாக உடைய மதில்கள் கொண்ட கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், தாமரைப் பூவில் உறையும் பிரமன் வழிபட்ட பிரமபுரம், அழகுடன் பொலியும் புறவம், வலிமை உடைய இராகு கோள் வழிபட்ட சிரபுரம், காழி, சண்பை ஆகிய பன்னிரண்டு பெயர்களைக் கொண்ட சீர்காழித் தலம், சிறந்த நூல்கள் எடுத்துரைக்கும் அறுபத்துநான்கு கலைகளையும் நன்கு கற்று அந்த கலைகள் மூலம் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்து, அவனை வழிபட்டு கலைகளின் பயனை நுகரும் சான்றோர்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் ஊராகும்.