130. தண்ணார் திங்கள் - பாடல் 5

மூன்றடி மண்
130. தண்ணார் திங்கள் - பாடல் 5


பாடல் 5:

    மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
    செறு மாவலி பால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
    குறு மாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
    கறு மா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

விளக்கம்:

வாமனர் வணங்கியதால் இந்த தலத்திற்கு குறுமாணிக்குடி என்ற பெயரும் உள்ளது. குறு மாண் உருவன்=குள்ளமான பிரமச்சாரி உருவம் எடுத்த திருமால்; தற்குறி=தன்னால் குறிப்பிட்டு வணங்கப் படும் அடையாளம்; இந்த தலத்தில் உள்ள இலிங்கம் வாமனரால் தாபிக்கப் பட்டதாக கருதப் படுகின்றது. இந்த தலத்தினை அடுத்துள்ள ஊர் குறுமாணிக்குடி என்று இன்றும் அழைக்கப் படுகின்றது. மறு=குற்றம்; உருவத்தில் சிறியவனாக, குள்ளனாக மூன்றடி மண் இரந்த பின்னர், அவ்வாறு பெற்ற மூன்றடிகளை அளக்கும் தருவாயில் நெடுமாலாக வளர்ந்தது குற்றமுடைய  வஞ்சக செயலாக இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு குற்றமுடைய வாமனன் என்று கூறுவது நமக்கு பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

திரிவிக்ரமனாக வளர்ந்து இரண்டு அடிகளால் மூவுலகத்தையும் அளந்து மூன்றாவது அடியினை  மாவலியின் தலை மேல் வைத்து அழுத்தியதை மாயச்செயல் என்று மாவலியின் மகன் நமுசி கூறியதாக பெரியாழ்வார் இந்த பாசுரத்தில் கூறுகின்றார். கடலூர் அருகில் உள்ள திருமாணிக்குழி  தலத்தில் பெருமானின் சன்னதியில் நமக்கு இடது புறம் தோன்றும் சுவற்றில், திருமால் மாவலியிடம் யாசிப்பது, நெடுமாலாக வளர்வது, மூன்றடி அளப்பது, ஒரு அரக்கனுடன் போரிட்டு அவனை வானில் சுழற்றுவது, பெருமானை வழிபடுவது ஆகிய சித்திரங்கள் பொறிக்கப் பட்டுள்ளதை நாம் கண்டு மகிழலாம். முந்தைய வண்ணம், மூன்றடி யாசகம் கேட்டபோது இருந்த குள்ளமான உருவத்துடன் மூன்றடிகளை அளக்காமல், மாயமாக உயர்ந்த திருவிக்ரமன்  உருவத்தால் மூன்றடிகள் அளந்த மாயத்தினை புரிந்து கொள்ளாமல் தனது தந்தை ஏமாந்து விட்டதாக அரக்கன் கூறுவதாக அமைந்த பாசுரம்.

    என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்  
    முந்தைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
    மன்னு நமுசியை வானில் சுழற்றிய
    மின்னு முடியனே அச்சோவச்சோ
    வேங்கடவாணனே அச்சோவச்சோ

அசுரர்களில் சற்று மாறுபட்டவனாக இருந்தவன் மாவலி. வலிமையுடைவனாக இருந்தாலும்   மக்களை அன்பால் அரவணைத்து அறம் தவறாமல் ஆட்சி புரிந்தவன்; வேதங்களை மதித்து  வேள்விகளை வளர்த்து இறையுணர்வுடன் திகழ்ந்தவன். எனவே தான் மற்றிணை இன்றி வாழ்ந்தவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மற்றிணை இன்றி என்ற தொடரினை திருமாலுக்கு அடைமொழியாக கொண்டு, தனது வாமன உருவத்திற்கு இணையான அழகிய உருவம் வேறேதும் இல்லாத வண்ணம் தோன்றிய பெருமாள் என்றும் பொருள் கொள்ளலாம்.  தேவர்களை வென்ற மாவலியின் செயல் இங்கே வானோரைச் செறு மாவலி என்றார் தொடரால் உணர்த்தப் படுகின்றது.  செறு என்ற சொல்லுக்கு வருத்திய என்றும் பொருள் கூறப்படுகின்றது. இந்த பாடலில் கற்றவனாக திகழ்ந்த வாமனன் பெருமானை வணங்கிய செயல் உணர்த்தப் படுகின்றது.             
   
பொழிப்புரை:

தனக்கு இணையாக வேறு எந்த அரக்கரும் இலாத வகையில் அறம் தவறாமல் ஆட்சி நடத்தியும் வானோரை வெற்றி கொண்டு வலிமையுடனும் திகழ்ந்த மாவலியை, வாமனனாக அவதாரம் எடுத்து குற்றமான வஞ்சக முறையில் நெடிது வளர்ந்து இரண்டு அடிகளால் மூன்று உலகினையும் அளந்த பிரம்மச்சாரி சிறுவன் திருமால், தான் பெருமான் பால் கொண்டிருந்த பக்தியின் அடையாளமாக, சிவலிங்கம் தாபித்து வழிபட்ட திருக்கோயில், நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் திகழும் பெரிய கழுத்தினைக் கொண்ட பெருமான் பொருந்தி உறையும்  தலம் கண்ணார் கோயிலாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com