143. கொடியுடை மும்மதில் - பாடல் 9

மூன்றடி மண் தானமாக பெற்ற திருமால்
143. கொடியுடை மும்மதில் - பாடல் 9

பாடல் 9:

    தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளிந்தானும்
    தேர்வு அறியா வகையால் இகலித் திகைத்துத் திரிந்து ஏத்தப்
    பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும்
    வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன்னகரே

விளக்கம்:

தாருறு=மாலையாக அமைவதற்கு உரிய தகுதி படைத்த; தரணி=பூமி; தரணி அளந்தான்=வாமனனாக வந்து மூன்றடி மண் தானமாக பெற்ற திருமால் திருவிக்ரமனாக மாறி விண்ணையும் மண்ணையும் இரண்டு அடியால் அளந்தமை இங்கே குறிப்பிடப் படுகின்றது. மூவுலகினையும் இரண்டடியால் அளந்தவனாயினும், திருமாலின் அந்த ஆற்றல் சிவபெருமானை அளப்பதற்கு பயனற்றதாக அமைந்தது என்ற செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது. இகலி=தம்முள் மாறுபட்டு; தேர்வு=அடிமுடி தெரியும் நிலை; பேர்வு=அசைவு; வாருறு=நீண்ட;    

பொழிப்புரை:

மாலையாக அமைவதற்கு உரிய தகுதி படைத்த தாமரை மேல் அமர்ந்திருக்கும் பிரமனும், தனது ஈரடிகளால் மூவுலகினையும் அளக்கும் பெருமை படைத்த திருமாலும், தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற வாதத்தில் மாறுபட்டு, தங்களது ஆற்றலை வெளிப்படுத்தும் வண்ணம், தங்கள் முன்னே தோன்றிய நீண்ட தீப்பிழம்பின்  அடியையும் முடியையும் காணவேண்டும் என்று முயற்சி செய்து அந்த முயற்சியில் தோல்வி அடைந்து திகைத்து திரிந்தனர். பின்னர் தமது தவறினை உணர்ந்தவர்களாக அவர்கள் இருவரும் பெருமானை போற்றி வணங்க, அசைக்க முடியாமல் நீண்ட நெடுந்தழலாக நின்றது தானே என்பதை பெருமான் உணர்த்துகின்றார். அவ்வாறு நீண்டு நிமர்ந்த பெருமான் உறையும் இடம் யாதெனின், நீண்ட சோலைகள் நறுமணம் கமழும் வலம்புர நன்னகரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com