143. கொடியுடை மும்மதில் - பாடல் 10

காவி நிறம் பொருந்தும்
143. கொடியுடை மும்மதில் - பாடல் 10

பாடல் 10:

    காருறு நற்றுவர் ஆடையினார் கடு நோன்பு மேல் கொள்ளும்
    பாவிகள் சொல்லைப் பயின்று அறியாப் பழந்தொண்டர் உள்ளுருக
    ஆவியுள் நின்று அருள் செய்யவல்ல அழகர் இடம் போலும்
    வாவியில் நீர் வயல் வாய்ப்புடைய வலம்புர நன்னகரே

விளக்கம்:

ஆவியுள்=உயிர்க்கு உயிராக நின்று; பயின்றறியா=கேட்டாலும் பொருட்படுத்தாமல் ஒதுக்கும்;  வாவி=குளம்;

பொழிப்புரை:

காவி நிறம் பொருந்தும் வண்ணம் நல்ல தரமான துவர்ச் சாயத்தில் தோய்த்த ஆடைகளை  அணிந்த புத்தர்களும் கடுமையான நோன்புகளை மேற்கொள்ளும் சமணர்களும் பாவிகளாக விளங்கி பெருமானைக் குறித்து பலவகையாக பழிச்சொற்கள் கூறினாலும் அதனை பொருட்படுத்தாது ஒதுக்கித் தள்ளும் பழைய அடியார்கள், வழிவழியாக பெருமானுக்கு தொண்டு செய்யும் அடியார்கள், உள்ளம் உருகி சிவபெருமானை புகழ்ந்து நிற்க, பெருமான் அவர்களது உயிர்க்கு உயிராக நின்று அவர்களுக்கு அருள் புரிகின்றான். அழகராக விளங்கும் பெருமான் வீற்றிருக்கும் இடம் யாதெனின், குளங்களும் வயல்களும் நீர் நிறைந்து நிற்கும் தன்மையுடன் நீர்வளம் மிகுந்த நகரமாக உள்ள வலம்புர நன்னகரமாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com