144. அடையார்தம் புரங்கள் - பாடல் 1

பெரிய புராணம்
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 1


முன்னுரை:

தனது இரண்டாவது தலையாத்திரையை நனிபள்ளி தலத்தில் தொடங்கிய ஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு, தலைச்சங்கை மற்றும் வலம்புரம் ஆகிய தலங்கள் சென்ற பின்னர் பூம்புகார் சென்றார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. பன்னகம்=பாம்பு; பூண்=ஆபரணம். பல்லவனீச்சரம், சாய்க்காடு ஆகிய இரண்டு தலங்களும் பூம்புகார் நகரத்தில் உள்ளவை. முதலில் பல்லவனீச்சரம் சென்றதாக கூறுவதால் நாம் முதலில் பல்லவனீச்சரத்து பதிகங்களை சிந்தித்த பின்னர் சாய்க்காடு தலத்தின் மீது அருளிய பதிகங்களை சிந்திப்போம். இந்த தலத்தின் மீது ஞானசம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்களே கிடைத்துள்ளன.

பன்னகப் பூணினாரைப் பல்லவனீச்சரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர் தம் திருச்சாய்க்காட்டு
மன்னு சீர் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்

இந்த தலம் சீர்காழியிலிருந்து பதினாறு கி.மீ, தொலைவில் உள்ள தலம். காவிரி நதி கடலில் இடத்திற்கு மிகவும் அருகில் உள்ள திருக்கோயில். சங்க காலச் சோழர்களின் தலைநகரமாக மற்றும் முக்கிய துறைமுகமாக விளங்கிய நகரம். பகைவர்கள் புகுவதற்கு அச்சம் கொண்டு இந்த நகரினில் புகுவதைத் தவிர்ப்பார்கள் என்று பொருள் பட புகார் என்ற பெயர் எழுந்தது. பல்லவ மன்னன் ஒருவனால் கட்டப்பட்டமையால் பல்லவனீச்சரம் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். எந்த மன்னனால் கட்டப்பட்டது என்பதை அறிவதற்கு சரித்திரச் சான்றுகள் ஏதும் இல்லை. பட்டினத்தார் மற்றும் இயற்பகை நாயனார் வாழ்ந்த தலம். கம்பீரமாக காட்சி தரும் மூலவர் இலிங்கம் பல்லவனீச்வரர் என்றும் சங்கமுகேஸ்வரர் என்றும் அழைக்கப் படுகின்றார். இறைவியின் திருநாமம், சௌந்தரநாயகி. நடராஜர் சன்னதி தில்லையில் உள்ள அமைப்பில் காணப் படுகின்றது.

சிவநேயர் என்ற வணிகரின் மகனாக பிறந்த வெண்காடர் என்பவர், ஞானம் பெற்ற பின்னர், காதற்ற ஊசியும் வாராது காண கடை வழிக்கே என்று எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி பல தலங்களுக்கும் சென்றவர் இறுதியில் திருவொற்றியூர் நகரினை வந்தடைந்து அங்கே முக்தி அடைந்தார். காவிரிப்பூம்்பட்டினத்தில் இருந்து வந்தமையால், இவருக்கு பட்டினத்து அடிகள் என்ற பெயர் ஏற்பட்டது. இவர் அருளிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் வைக்கப் பட்டுள்ளன.

இயற்பகை நாயனார் என்பவர் இந்த ஊரில் வாழ்ந்து வந்த சிவனடியார். அடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் இயல்பினை கொண்டவராக வாழ்ந்து வந்ததால் இவரை இயற்பகை நாயனார் என்ற பெயர் வந்தது. மனித இயல்புக்கு மாறுபட்டு வாழ்ந்தவர் என்று பொருள். ஒரு நாள் ஒரு அடியவர் இவர் முன் தோன்றி, இவரது மனைவியை தனக்கு கொடையாக அளிக்குமாறு கேட்டார். தன்னிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் சிவபெருமான் அளித்தது என்ற சிந்தனையுடன் வாழ்ந்து வந்த நாயனார், தயக்கம் ஏதுமின்றி வந்த அடியாரிடம் மனைவியை ஒப்படைத்து விடுகின்றார். அவரது மனைவியும் தனது கணவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு அடியாருடன் செல்லத் தொடங்குகின்றார். இந்த நிலையில் நாயனாரது தகாத செய்கை தங்கள் குலத்திற்கு இழுக்கினைத் தேடித் தந்துள்ளது என்று சொல்லியவாறு அவரது உறவினர்களும் நண்பர்களும், இயற்பகை நாயனாரின் மனைவியை வந்த அடியாருடன் செல்ல விடாமல் தடுத்தனர். ஆனால் நாயனாரோ, தனது செய்கையை எதிர்த்த அனைவரையும் வெட்டி வீழ்த்தினார். பின்னர் முதியவரையும் தனது மனைவியையும் ஊரெல்லை வரை பத்திரமாக அழைத்துச் சென்று, மூவருமாக சாய்க்காடு எல்லை அடைந்த பின்னர், முனிவர் இயற்பகையாரை உமது இருப்பிடம் செல்லலாம் என்று கூறினார். வந்த முதியவரையும், அந்நாள் வரை தமது மனைவியாக இருந்த பெண்மணியையும் வணங்கி அவர்களிடமிருந்து இயற்பகை அடிகள் விடைபெற்றார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்ற பின்னர், வந்த முதியவர், அபயம் அபயம் என்று ஓலமிட்டார். அவரது ஓலக் குரலை கேட்ட, உம்மை தடுப்பவர் வேறு எவரேனும் உளரோ என்று கேட்டவாறு, அவ்வாறு எவரேனும் இருந்தால் அவர்களையும் வெட்டி வீழ்த்துவேன் என்று சொல்லியவாறு தனது உடைவாளினை உருவிக் கொண்டு திரும்பினார். அப்போது அவரால் முதியவரை காணமுடியவில்லை. முதியவர் மறைய தனது மனைவி மட்டும் தனியாக இருந்ததைக் கண்டார். மேலும் சிவபெருமான், இடப வாகனத்தில் அன்னையுடன் அமர்ந்தவாறு வானில் காட்சி அளித்தார். என் பால் இத்தகைய அன்பு வைத்த பழுதிலா அன்பரே என்று அழைத்து நீரும் உமது மனைவியும் சிவலோகம் வந்து அடைவீர்களாக என்று அருள் புரிந்தார். இந்த அடியார் இவ்வாறு அருள் பெற்றதை குறிப்பிடும் பெரிய புராணத்து பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்
பொன் திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்னத்
தன் துணையுடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்

விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம் பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக என்று

பாடல் 1:

அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடியார் மாட நீடி எங்கும் கங்குல் புறம் தடவப்
படையார் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சரமே

விளக்கம்:

அடையார்=வேதநெறியிலிருந்து தவறி அனைவர்க்கும் பகைவர்களாக விளங்கி துன்பம் இழைத்து வந்த திரிபுரத்து அரக்கர்கள்; ஆரழல்=தாங்க முடியாத தீ; திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போருக்கு சென்ற போது, சிவபெருமான் ஏறிச் செல்லவிருந்த தேரினில், தேவர்கள் பலவிதமாக பங்கேற்றனர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. நான்கு வேதங்களும் நான்கு குதிரைகளாகவும் பிரமன் தேரினை ஓட்டும் சாரதியாகவும் பிரவண மந்திரம் குதிரைகளை ஓட்ட உதவும் சாட்டையாகவும் சூரிய சந்திரர்கள் தேரின் சக்கரமாகவும், விந்திய மலை அச்சாகவும் பூமி தேரின் தட்டாகவும் ஆகாயம் தேரின் மேற்கூரையாகவும் பங்கேற்க, மந்திர மலை வில்லாகவும், வாசுகி பாம்பு வில்லின் நாணாகவும், அக்னி அம்பின் கூரிய நுனியாகவும், திருமால் அம்பின் தண்டாகவும் வாய் அம்பின் இறக்கைகளாகவும் பங்கேற்றன. தங்களின் உதவியுடன் பெருமான் போரிடச் செல்கின்றார் என்று அவர்களில் சிலர் நினைத்து இறுமாப்பு அடைந்தனர். அவர்களின் இறுமாப்பு தவறு என்பதை அவர்களுக்கு உணர்த்த பெருமான் எண்ணம் கொண்டார். அவர் தனது திருவடியை தேர்த்தட்டின் மீது வைத்த போது, அவரது உடலின் எடையைத் தாங்க உடியாமல் தேரின் அச்சு முறிந்தது. அப்போது திருமால் உடனே காளையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக்கொண்டு போர் புரியுமாறு வேண்டினார். பெருமானும் அருள் கூர்ந்து அவரை தனது காளை வாகனமாக ஏற்று அதன் மீது அமர்ந்து சென்றார் என்று புராணம் கூறுகின்றது. இதுதான் விடை மீது அமர்ந்த வண்ணம் திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற வரலாறு. இந்த செய்தியை விடையார் மேனியராய் சீறிய வித்தகர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வித்தகர்=திறமை மிகுந்த செயலைச் செய்தவர்; மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று நெருப்பினை ஊட்ட வல்ல அம்பினை செலுத்தும் திறன் மிகவும் அரியது அல்லவா. கடையார்=கடைகள் மிகுந்த கடை=சாளரங்கள்; கங்குல்=ஆகாயம்; புரிசை=மதிற்சுவர்கள்; படையார்=படைகள் பொருந்திய; அடையார் என்ற சொல்லுக்கு, தங்களது செய்கைகளால் கோபம் கொண்ட சிவபெருமான் தங்கள் மீது படையெடுத்து வருவதை அறிந்த பின்னரும், பெருமானிடம் சரணடைந்து உய்வினை தேடிக் கொள்ளாமல் இருந்த அரக்கர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பொழிப்புரை:

வேதநெறியை சென்று அடைந்து வாழாமல், பலருக்கும் துன்பம் அளித்து பகைவர்களாய் வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், தாங்குதற்கு அரிய நெருப்பினில் மூழ்கடிக்கும் வண்ணம், இடபத்தினைத் தனது வாகனமாக ஏற்ற பெருமான் சீற்றம் அடைந்தவராக, அம்பினை எய்த திறமையாளர் ஆவார். அத்தகைய ஆற்றலை உடைய பெருமான் பொருந்தி அமர்ந்துள்ள இடம் யாதெனின், சாளரங்கள் நிறைந்து ஆகாயத்தை தொடும் வண்ணம் உயர்ந்த மதில்கள் படைகளுடன் பொருத்தப்பட்டு நீண்ட மதில் சுவர்களால் சூழப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com