144. அடையார்தம் புரங்கள் - பாடல் 2

வேதநெறியையும் சிவநெறியையும்
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 2

பாடல் 2:

    எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
    கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
    மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்திப்
    பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

எண்ணார்=வேதநெறியையும் சிவநெறியையும் நினைத்து அதன் வழியே வாழ்க்கையை நடத்தாமல் அந்த வழிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட திரிபுரத்து அரக்கர்கள்; எயில்= கோட்டை; நுதல்=நெற்றி; கண்ணுதல்=தனது நெற்றியில் கண்ணினை உடைய பெருமான்; கோல= அழகிய; மண்ணார்=மண்ணில் பொருந்திய; வைகலும்=நாள்தோறும்; எண்ணார் என்ற சொல்லுக்கு தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தீய செயல்கள் புரிவதையே தனது எண்ணமாகக் கொண்டு வாழ்ந்த அரக்கர்கள் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. ஐந்து பூதங்கள் தாமே உலகின் பல விதமான வளங்களுக்கும் நின்று, உலகினையும் உலகத்தவர்களையும் வாழ வைக்கின்றன. அத்தகைய பூதங்களாகிய தேவர்களுக்கு கண்ணாக இருந்து அவர்களை காப்பதன் மூலம் பெருமான், உலகினையும் உலகில் உள்ள உயிர்களையும் வாழவைக்கின்றான் என்பது இந்த பதிகத்தின் உட்கருத்து.      
 
பொழிப்புரை:

வேதநெறியையும் சிவநெறியையும் நினைத்து அதன் வழியே வாழ்க்கையை நடத்தாமல் அந்த வழிமுறைக்கு புறம்பாக நடந்து கொண்ட திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் சீற்றம் கொண்டு அழித்த பெருமான் எமக்கு தந்தையாவார். தங்களது கண்கள் போன்று மிகவும் அரியவர் என்று இமையோர்களால் பாராட்டப்படும் அவர் உலகத்தினையும் உலகத்தில் உள்ளவர்களையும் காப்பற்றுகின்றவர் ஆவார். அவர் தனது நெற்றியில் கண் உடையவராக விளங்குகின்றார். இவ்வாறு அனைவரையும் காக்கின்ற பெருமான் பொருந்தி உறைகின்ற இடம் யாதெனின், செழித்து வளத்துடன் பூமியில் பொருந்தி விளங்கும் சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனினை உண்ட மகிழ்ச்சியால் பாடல்கள் பாடும் தன்மையை உடைய காவிரிப்பூம்பட்டினத்து  பல்லவனீச்சரம் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com