முகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 3
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 07th November 2019 12:00 AM | Last Updated : 07th November 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 3:
மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவு வார் சடை மேல்
கங்கை அங்கே வாழ வைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
விளக்கம்:
வாள்நிலவு=ஒளி பொருந்திய பிறைச் சந்திரன்; வார் சடை=நீண்ட சடை; இந்த பாடலில் சம்பந்தர் இறைவனை கள்வன் என்று கூறுகின்றார். தான் திருடிய பொருளினை மற்றவர் அறியாத வண்ணம் ஒளித்து வைப்பது கள்வனின் செயல் என்பதை நாம் தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தின் விளக்கத்தில் கண்டோம். அந்த பாடலில் தனது உள்ளத்தை கொள்ளை கொண்டதால் கள்வன் என்று கூறிய சம்பந்தர், கங்கை நதியினை தனது சடையினில் மறைத்து தேக்கி வைத்ததால் இறைவனை கள்வன் என்று நயமாக கூறுகின்றார். அயம்=பள்ளம்; புணரி= கடல்; பங்கயம்=தாமரை மலர்கள்; உயர் பொய்கை=கடலில் நீர் மிகுந்த காணப்படுவதால் நீர்நிலைகளிலும் தண்ணீர் மேல் உயர்ந்து காணப் படுகின்றது என்று கூறுகின்றார்.
கங்கையை வாழவைத்த கள்வன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வால்மீகி இராமயணத்தில் கங்கை நதி பூமிக்கு வந்த வரலாற்றினை விஸ்வாமித்திரர் இராமபிரானுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. அயோத்தி நகரை ஆண்டு வந்த சகரன் என்ற மன்னன் அஸ்வமேத யாகம் செய்ய நினைத்து, தனது பட்டத்து குதிரையை பல நாடுகளுக்கும் அனுப்பினான். பல நாட்கள் சென்ற பின்னரும் பட்டத்து குதிரை திரும்பி வராததைக் கண்ட சகரன் தனது அறுபதினாயிரம் மகன்களை குதிரையைத் தேடிக் கொண்டு வருமாறு பணித்தான். அஸ்வமேத யாகம் தடையேதும் இன்றி முடிந்தால், தன்னை விடவும் சகரன் மிகுந்த புகழினை அடைந்துவிடுவான் என்று எண்ணிய இந்திரன், குதிரையை திருடிக்கொண்டு போய், பாதாள உலகினில் மறைத்து வைத்தான். குதிரையை தேடிக் கொண்டு பாதாள உலகம் சென்ற சகரனின் மைந்தர்கள், குதிரை பாதாளத்தில் திரிந்து கொண்டிருப்பதையும் அதன் அருகினில் நாராயணனின் அம்சமாகிய கபில முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதையும் கண்டனர். கபில முனிவர் தான், குதிரையை கடத்திக் கொண்டு சென்று, பாதாளத்தில் ஒளித்து வைத்த பின்னர், தவம் செய்வது போன்று நடிக்கின்றார் என்று தவறாக நினைத்த அவர்கள், முனிவரை தாக்க நினைத்தனர். தனது தவம் கலைந்ததால் கோபத்துடன் விழித்த முனிவரின் கண்களிலிருந்து பொங்கி வந்த கோபம், அறுபதினாயிரம் பேரையும் சுட்டெரித்து சாம்பலாக மாற்றியது. தனது புத்திரர்கள் வராததைக் கண்ட சகர மன்னன், தனது பேரன் அம்சுமானை குதிரையை தேடி மீட்டு வர அனுப்பினான். அறுபதினாயிரம் பேர் சென்ற வழியில் சென்ற அம்சுமான் பாதாளத்தில் அறுபதினாயிரம் பேரும் சாம்பலாக இருப்பதையும் அந்த சாம்பல் குவியலின் அருகே குதிரை திரிந்து கொண்டு இருப்பதையும் கண்டான். அப்போது அங்கே தோன்றிய கருடன், நடந்ததை விவரித்ததும் அன்றி, தேவலோகத்தில் இருக்கும் கங்கை நீரினால் இறந்தவர்களின் சாம்பல் கரைக்கப்பட்டால் அவர்கள் நற்கதி அடைவாரகள் என்றும் கூறியது. குதிரையை மீட்டுச் சென்ற அம்சுமான், அனைத்து விவரங்களையும் தனது பாட்டனாராகிய மன்னனிடம் கூறினான். சகரன், அம்சுமான், அவனது மகன் திலீபன் ஆகியோர் எத்தனை கடுந்தவம் செய்தும் அவர்களால் கங்கையை கீழே கொண்டு வர முடியவில்லை. திலீபனின் மகன் பகீரதன்.
பகீரதன் பிரமனை நோக்கி தவம் செய்து, கங்கை நதியினை வானிலிருந்து கீழே வரவழைத்து, சாம்பல் குவியலாக மாறி இருக்கும் தனது மூதாதையரின் மீது பாயவைத்து அவர்கள் நற்கதி அடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினான். கங்கை நதிக்கு பூலோகம் இறங்கி வர விருப்பம் இல்லாததால், வேகத்துடன் கீழே இறங்கி வரும் தன்னைத் தாங்கும் வல்லமை படைத்தவர் வேண்டும் என்ற சாக்கு சொல்லவே, பகீரதன் பெருமானை நோக்கி தவமியற்றி, பெருமான் கங்கை நதியைத் தாங்குவதற்கு ஏற்பாடு செய்தான். இதனால் கங்கையின் கோபம் மேலும் பெருகியது; சிவபெருமானையும் அடித்துக் கொண்டு, பூவுலகினையும் அடித்துக் கொண்டு பாதாளத்தில் சென்று சேர்க்கும் நோக்கத்துடன் மிகவும் வேகமாக கீழே இறங்கியது. அவ்வாறு இறங்கிய கங்கையை பெருமான் தனது சடையினில் தாங்கி அடக்கியது பல தேவாரப் பாடல்களில் கூறப் படுகின்றது. மிகவும் வேகமாக இறங்கிய கங்கை நதியினை, அப்பர் பிரான் குறிப்பிடும் பாடலை (4.65.7) நாம் இங்கே காண்போம். மையறு மனத்தன்=குற்றமில்லாத மனத்தை உடையவன்; பகீரதன் இழிதல்=இறங்குதல்; இவ்வாறு வேகமாக இறங்கிய கங்கை நதியை கட்டுப்படுத்தும் ஆற்றல் சிவபிரான் ஒருவருக்கே இருந்தமையால், பகீரதன் சிவபிரானை வேண்ட, சிவபிரானும் கங்கையைத் தனது சடையில் ஏற்றுக்கொண்டு பின்னர் மெதுவாக கங்கை நதியை விடுவதற்கு சம்மதித்தார். சிவபிரான் ஏற்றக்கொள்ள இசைந்ததால், தேவர்கள் பயம் ஏதுமின்றி கங்கை நதி கீழே இறங்குவதை வேடிக்கை பார்த்தனர் என்று அப்பர் பிரான் இந்த நேரிசைப் பதிகத்தில் கூறுகின்றார். .
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி
வையகம் நெளியப் பாய்வான் வந்து இழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
இவ்வாறு கங்கை நதியினை பெருமான் தனது சடையினில் தாங்கிய பின்னர் சிறிது சிறிதாக வெளியேற்றினார் என்று புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு பெருமான் கங்கை நதியைத் தாங்காது இருந்தால், கங்கை நதி பூமியையும் புரட்டிக் கொண்டு பாதாளத்தில் சேர்த்து தானும் பாதாளத்தில் கலந்திருக்கும். அவ்வாறு நேரிடுவதை பெருமான் தவிர்த்தார் என்பதை குறிப்பிடும் வண்ணம் கங்கை வாழவைத்த கள்வன் என்று சம்பந்தர் கூறுகின்றார் போலும்.
பொழிப்புரை:
பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக வைத்துள்ள பெருமான், பிறைச் சந்திரனையும் ஏற்றுள்ள தனது நீண்ட சடையினில் கங்கை நதியினை ஒளித்து வைத்து, கங்கை நதியை வாழவைத்த கள்வனாக காணப்படுகின்றான். இத்தகைய பெருமான் உறையும் இடம் யாதெனின், ஆழம் மிகுந்த கடல் நீரின் வெள்ளத்தால், உயர்ந்த நீர் மட்டம் கொண்டவையாக விளங்கும் குளங்களும் மற்ற நீர் நிலைகளும் விளங்க, அந்த நீர் நிலைகளில் தாமரை மலர்கள் பூத்துப் பொழியும் காட்சியினை உடைய காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலமாகும்.