144. அடையார்தம் புரங்கள் - பாடல் 4

ஆர்கின்ற என்ற
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 4

பாடல் 4:

    தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
    நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
    போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால்
    பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

தயங்க=போல் விளங்க; தார்=மாலை; ஆர்கின்ற என்ற சொல்லுக்கு உலகம் இன்பமடைதல் என்று பொருள் கொண்டு, அடியார்கள் பாடும் இசைப் பாடலினை கேட்கும் உலகத்தவர்கள் இன்பம் அடைகின்றனர் என்று சொல்வதும் பொருத்தமே. மைந்தர்=வலிமை வாய்ந்தவர்கள்; புகார் என்ற பெயருக்கு ஏற்ப வலிமை மிகுந்த வீரர்கள் வாழ்ந்த தலமாக காவிரிப்பூம்பட்டினம் இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.    

பொழிப்புரை:

பொன் போன்று காணப்படும் கொன்றை மலர்களால் தொடுத்த மாலையினை உடைய பெருமானின் பரந்த மார்பு நீரினில் குழைத்த திருநீறு சந்தனம் போல் பூசப்பெற்று பொலிவுடன் விளங்குகின்றது. இயற்கையாகவே மலங்களின் சேர்க்கையிலிருந்து நீங்கிய பரமன் உறையும்  இடம் யாதெனின், போருக்கு மிகவும் அவசியமான வேற்படை போன்று கண்களை கொண்டுள்ள மாதர்களும் அவர்களின் துணையாக விளங்கும் வல்லமை வாய்ந்த இளைஞர்களும் கோயிலில் புகுந்து ஒன்று கூடி இசையுடன் பொருந்திய பாடல்களை உலகம் அதிரும் வண்ணம் பாட,  அத்தகைய பாடல்களைக் கேட்பதற்காக உலகத்து மக்கள் திரளும் காவிரிப்பூம்பட்டினத்து  பல்லவனீச்சரம் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com