144. அடையார்தம் புரங்கள் - பாடல் 7

மக்களின் கடமை
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 7

பாடல் 7:

    வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்
    வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
    மந்தலாய மல்லிகையும் புன்னை வளர் குரவின்
    பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே

விளக்கம்:

வெந்தல்=தகுதியற்ற கூட்டம்; தலைவன் தவறு செய்யும் போது, அந்த தவற்றினை சுட்டிக் காட்டி திருத்த வேண்டியது அவனைச் சூழ்ந்திருக்கும் மக்களின் கடமை. தக்கன் தவறான வழியில், சிவபெருமானை புறக்கணித்து வேள்வி செய்ய முடிவு செய்தபோது, தக்கனை சூழ்ந்து இருந்த எவரும் அவ்வாறு சுட்டிக் காட்டமையால், வெந்தல் என்று அந்த கூட்டத்தை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மந்தல்=மென்மை; பந்தல் ஆரும்=பந்தல்கள் படர்ந்துள்ள; மைந்தன்=வல்லமை வாய்ந்தவன்; வெந்தல் என்ற சொல்லுக்கு அழியும் தன்மை என்று பொருள் கொண்டு, வைதீக முறையில் செய்யப்படும் வேள்வி முதலான சடங்குகள் அழியும் வண்ணம் வேள்வி செய்ய முயற்சி செய்தமை குறிப்பிடப்படுகின்றது என்றும் விளக்கம் அளிக்கின்றனர். தலத்து தலமரமாகிய மல்லிகை இங்கே குறிப்பிடப்படுகின்றது.    

பொழிப்புரை:

தான் தவறு செய்த போது அதனை சுட்டிக் காட்டி திருத்தும் வல்லமையின்றி தகுதியற்ற கூட்டத்தால் சூழப்பட்டுள்ள வேந்தன் தக்கன், பெருமானைப் புறக்கணித்து வேதநெறிக்கு புறம்பாக செய்த வேள்வியை வேரோடும் அழித்த வல்லமை வாய்ந்த பெருமானை, தேவர்கள் அனைவரும் அவனது இருப்பிடம் சென்றடைந்து போற்றி வழிபடுகின்றனர். இத்தகைய வீரம் வாய்ந்த பெருமான் மகிழ்ந்து உறையும் இடம் யாதெனின், மென்மையான தன்மை கொண்ட மல்லிகைக் கொடி, புன்னை மற்றும் குராமரம் ஆகியவற்றில் படர்ந்து அமைத்த பந்தல்கள் நிறைந்த காவிரிப்பூம்பட்டினத்து  பல்லவனீச்சரம் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com