144. அடையார்தம் புரங்கள் - பாடல் 9

பெருமானை மனதினில் தியானித்து
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 9

பாடல் 9:

    அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயனொடு மால்
    தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
    வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடலைப்ப
    பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சரமே

விளக்கம்:

பெருமானை மனதினில் தியானித்து கருத்தினால் உணர்ந்து தேடாமல் தங்களது கண்களால் தேடிய தன்மையை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். வங்கம்=கப்பல்கள்; சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் என்பன வேதங்களை பாதுகாக்கும் ஆறு அரண்களாக விளங்குகின்றன. வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாக கற்கப் பட்டு வந்த வேதங்களை தவறுகள் ஏதும் இன்றி சொல்லும் வண்ணம் இந்த அங்கங்கள் உதவுகின்றன. வேதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களைப் பற்றி கூறுவது சிக்ஷை எனப்படும் பகுதி. எழுத்துக்கள் ஒலிக்கப்பட வேண்டிய முறை, மாத்திரை அளவுகள், மற்றும் அந்தந்த எழுத்துக்களுக்கு உரிய தேவதைகள் முதலிய பல விவரங்கள் அடங்கிய பகுதிகள் சிக்ஷை என்று அழைக்கப்படும்.

பல எழுத்துக்களால் உருவான சொற்களைப் பற்றி கூறுவது வியாகரணம். சந்தஸ் என்பது வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மந்திரங்களின் எழுத்து எண்ணிக்கையை குறிக்கும் பகுதியாகும். நிருக்தம் என்றால் விளக்கிச் சொல்லுதல் என்று பொருள். வேதங்களில் வரும் சொற்றொடர்களுக்கும், சொற்களுக்கும் விளக்கம் அளிக்கும் வேதத்தின் பகுதிகள் நிருக்தம் என்று அழைக்கப்படுகின்றன. ஜோதிடம் என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியான கணிதத்தில், கால தத்துவங்கள், வருடம், அயனம், திதி, வாரம், மாதம், வளர்பிறை/தேய்பிறை விவரங்கள் மற்றும் அந்தந்த காலங்களில் செய்யக்கூடிய காரியங்கள் விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பகுதியான ஹோரையில், இதுவரை நடந்த சம்பவங்கள், தற்போது நடக்கும் சம்பவங்கள், இனி நடக்க இருக்கும் சம்பவங்கள் என்பவை கோள்களின் பயணத்தின் அடிப்படையில் கணித்து சொல்லப்படுகின்றன. கல்பம் என்றால் பிரயோகம் என்று பொருள்; வேதங்களில் சொல்லப் பட்டுள்ள கர்மாக்களை செய்யவேண்டிய வழிமுறைகள் அடங்கிய பகுதிகள் கல்பம் என்று அழைக்கப்படுகின்றன.  

இந்த பாடலிலும் சங்கரன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருமாலும் பிரமனும் அடிமுடி தேட முயற்சி செய்த போது அவர்களால் காண முடியாமல் நின்ற பெருமான், அவர்கள் இருவரும் இறைஞ்சிய போது அவர்கள் இருவரும் இன்புறும் வண்ணம் அவர்களுக்கு காட்சி அளித்தவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம், சங்கரன் என்ற சொல் இங்கே கையாளப் பட்டுள்ளது.     

பொழிப்புரை:

ஆறு அங்கங்களையும் வேதங்களையும் ஓதும் பிரமனும் திருமாலும், பெருமானை தியானித்து கருத்தாலும் கண்களாலும் தேடுவதை விடுத்து, தங்களது புறக் கண்களால் பெருமானது அடியையும் முடியையும் தேடிய போது அவர்களால் காண முடியாத வண்ணம், நீண்ட நெடும் தழலாக நின்றவன் சங்கரன். பின்னர் அவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்து இன்பம் அளித்த பெருமான் உறையும் இடமாவது, மரக்கலங்களையும் முத்து மற்றும் சிப்பி ஆகிய பொருட்களை   தனது அலைக் கரங்களால் அலைக்கழிக்கும் கடலினை உடையதும், குற்றமற்ற வாழ்க்கையை    வாழும் மக்கள் நிறைந்ததும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்து  பல்லவனீச்சரம் தலமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com