144. அடையார்தம் புரங்கள் - பாடல் 11

சிவனடியார்களிடம் இருக்க
144. அடையார்தம் புரங்கள் - பாடல் 11


பாடல் 11:

    பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்து எம்
    அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
    சித்தம் சேர செப்பு மாந்தர் தீவினை நோய் இலராய்
    ஒத்தமைந்த உம்பர் வானில் உயர்வினொடு ஓங்குவரே  

விளக்கம்:

அத்தன்=தந்தை; ஒத்தமைந்த=தங்களது இயல்புகளுக்கு ஒத்த: அணிகொள்=அழகு நிறைந்த: பத்தர் என்ற சொல்லுக்கு பத்து குணங்களை உடையவர் என்றும் பக்தர் என்றும் இருவிதமாக பொருள் கொள்ளலாம். அடியார்களின் செய்கை பத்து வகைப் பட்டது என்று குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் (4.18.10) நமது நினைவுக்கு வருகின்றது.

    பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
    பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
    பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை
    பத்து கொலாம் அடியார் செய்கை தானே

சிவனடியார்களிடம் இருக்க வேண்டிய குணங்களை அக குணங்கள் என்றும் புறக் குணங்கள் என்றும் பிரிக்கின்றனர்.. பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்துருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.  

பொழிப்புரை:

பத்து சிறந்த குணங்களை உடைய அடியார்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் உறையும் எனது தந்தையாகிய பெருமானை, அழகு நிறைந்த சீர்காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இந்த பத்து பாடல்களை, தங்களது சித்தத்தில் நிறுத்தி பாடும்  அடியார்கள் தங்களது தீவினைகள் முற்றிலும் களையப்பெற்று, தங்களது இயல்புக்கு ஏற்ப அமைந்த தேவர்கள் வாழும் உலகினை அடைந்து உயர்வாக வாழ்வார்கள்.  

முடிவுரை:

சங்கரன் என்ற பெயர் பல தேவாரப் பாடல்களில் குறிப்பிடப் பட்டாலும் ஒரே பதிகத்தின் இரண்டு பாடல்களிலும் அவ்வாறு குறிப்பிடப்படுவது மிகவும் அரியதாக உள்ளது. அத்தகைய குறிப்புக்கு ஏற்ப பெருமானின் அருட்செயல்களால் இன்பம் அடைந்த பல நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடப் படுகின்றன. முதல் பாடலில் முப்புரத்து கோட்டைகளை அழிக்கப் பட்டதால், தேவர்கள் தங்களது துன்பம் தீர்க்கப்பெற்று மகிழ்ந்தனர் என்று கூறுகின்றார். இரண்டாவது பாடலில், பெருமான் கண்ணாக இருந்து உலகத்தை காப்பதால், நாம் அனைவரும் இன்பமடைதல் குறிப்பிடப் படுகின்றது. மூன்றாவது பாடலில், பார்வதி தேவி மற்றும் கங்கை நங்கை பெருமானது உடலில் பங்கேற்று மகிழ்ந்திருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. நான்காவது பாடலில் நின்மலனாக இறைவன் இருக்கும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர், ஐந்தாவது பாடலில் காவிரிப்பூம்பட்டினத்து மகளிர், பெருமான் பால் காதல் கொண்டு அவனைப் போற்றி துதித்து மகிழும் தன்மையை குறிப்பிடுகின்றார். ஆறாவது பாடலில் பல இசைக் கருவிகள் ஒலிக்க இறைவன் நடமாடும் தன்மையும் ஏழாவது பாடலில் தக்கனது வேள்வி அழிக்கப்பட்டதும் குறிப்பிடப் பட்டுள்ளன. எட்டாவது பாடல் இராவணன் மகிழ்ந்த தன்மையும் ஒன்பதாவது பாடல் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் மகிழ்ந்த தன்மையும் குறிப்பிடப்படுகின்றன.   பத்தாவது பாடலில் தன்னைப் போற்றி புகழும் பாடல்களுக்கு ஏற்ப நடமாடும் அடியார்களின்  துன்பங்களை தீர்ப்பவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். கடைப்பாடல், இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் தங்களது தீவினைகள் தீரப்பெற்று மகிழ்வார்கள் என்று குறிப்பிடுகின்றார். நாமும்  இந்த பதிகத்தை முறையாக ஓதி, இறைவனது அருளினால் நமது தீவினைகள் தீர்க்கப் பெற்று  இன்பமான வாழ்க்கை நடத்துவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com