Enable Javscript for better performance
145. பரசு பாணியர் பாடல் - பாடல் 1- Dinamani

சுடச்சுட

  
  தேவாரம்

                                   
  பின்னணி:

  அடையார் தம் புரங்கள் என்று தொடங்கும் காவிரிப்பூம்பட்டினத்து பதிகத்தை இதன் முன்னர் சிந்தித்த நாம் இப்போது அதே தலத்தின் மீது அருளிய மற்றொரு பதிகத்தை சிந்திக்கின்றோம். பெரும்பாலான தேவாரப் பாடல்கள் நான்கு அடிகள் கொண்டவையாக அமைந்துள்ளன. ஒரு சில பாடல்கள் ஈரடிப் பாடல்களாக விளங்குகின்றன. பழம்பஞ்சுரம் பண்ணில் அமைந்துள்ள மூன்று பாடல்களும் (3.110, 3.111, 3.112,) யாமாமா என்று தொடங்கும் மாலைமாற்றுப் பதிகமும் (3.117), அப்பர் பிரான் அருளிய அங்கமாலை பதிகமும் (4.9) ஈரடி கொண்ட பாடல்களாக விளங்குகின்றன. இங்கே விளக்கம் அளிக்கப்படும் பதிகமும் அத்தகைய பதிகங்களில் ஒன்றாகும். இன்ன தன்மை என்று அறிய முடியாத வண்ணம் விளங்குபவன் இறைவன் என்று இந்த பதிகத்தின் பாடல் தோறும் ஞானசம்பந்தர் குறிப்பிட்டாலும், பெருமானது ஒரு சில தன்மைகளை ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார்.      

  பாடல் 1:

      பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
      அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவாரார்

  விளக்கம்:

  பாணி=கை; பாணியர்=கையில் ஏந்தியவர்; பரசு=மழுப்படை; வீணையில் பாட்டு இசைத்தல்  பெருமானுக்கு மிகவும் விருப்பமான செயல் என்பதால் பெருமான் வீணை வாசிப்பதாக பல தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருக்கானூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.73.8) சம்பந்தர் தாளத்தோடு பொருந்தும் வண்ணம் வீணையினை பெருமான் இசைக்கின்றார் என்று கூறுகின்றார். நீர்மை=இனிமை; குமிழின் மேனி=குமிழ்ப் பூவினைப் போன்ற நிறம்; பசலை நிறம்; தனது இல்லம் தேடி வந்த பெருமான், இனிக்கும் தமிழ் சொற்களைப் பேசிய வண்ணம் தாளத்துடன் பொருந்தும் வகையில் வீணை, முழவம் மொந்தை ஆகிய இசைக்கருவிகளை இயக்கிய வண்ணம் வந்த பெருமான், தனது இல்லத்தை விட்டு பெயராது இருந்தார் என்றும், அந்த தன்மையால் தனது உள்ளத்தைப் பெருமான் கவர்ந்தார் என்றும், அவ்வாறு தனது உள்ளத்தைக் கவர்ந்த பெருமானுடன் இணைய முடியாமல் வருந்தும் தனது உடலை, பிரிவாற்றாமையால், பசலை நோய் பற்றிக் கொண்டது என்றும் சம்பந்த நாயகி கூறுவதாக அமைந்த அகத்துறை பாடல் இது. இதன் விளைவாக் தனது அழகு கெட்டு விட்டதற்கு காரணம் பெருமான் என்று சுட்டிக் காட்டும் வகையில், பெருமான் தனது அழகினைக் கொண்டு சென்று விட்டார் என்றும் சம்பந்த நாயகி இங்கே கூறுகின்றாள்.

      தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல
      முழவம் மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஓவார்
      குமிழின் மேனி தனது கோல நீர்மை அது கொண்டார்
      கமழும் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே

  பாச்சிலாச்சிராமம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.44.5) ஞானசம்பந்தர் வீணை முழங்க  இசை பாடும் பெருமான் ஒரு பெண்ணை வாடும் வண்ணம் செய்தல் அவருக்கு அழகோ என்று கேட்கின்றார். இந்த பாடல் முயலகன் எனப்படும் ஒருவகை வலிப்பு நோயினால் வாடிய மழவன் மகள் உடல் நலம் பெறவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் ஞானசம்பந்தர்  பாடிய பதிகம்.  

     மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்தாடி வளர்சடை மேல் புனல் வைத்து
     மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி
     ஆந்தை விழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
     சாந்து அணி மார்பரோ தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே
    

  பொதுப் பதிகம் ஒன்றினில் (4.112.7) அப்பர் பிரான்  பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்த பின்னர், பெருமான் கங்காள வேடத்தராய், பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் உயிரற்ற உடல்களை சுமந்தவாறு, மீண்டும் உலகத்தைப் படைப்பதை தனது கடமையாக எண்ணிய வண்ணம், வீணை வாசித்தவாறு இருப்பார் என்று கூறுகின்றார்.

      பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
      இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
      கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
      வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே

  திருவதிகை வீரட்டானம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.10.1) மழலை மொழி போன்று இனிய இசையினை எழுப்பும் வீணையைக் கையில் ஏந்திய பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். முளைக்கதிர்=பெருமானின் திருமுடி மேல் வைக்கப்பட்ட பின்னர், முளைக்கத் தொடங்கிய பிறைகளைக் கொண்ட சந்திரன்: தக்கனின் சாபத்தால், ஒவ்வொரு கலைகளாக தேய்ந்து அழிந்து போகும் நிலையில் இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரன் காப்பாற்றப் பட்ட நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது. உழி=இடம்: மண்ணினைத் தோண்ட நமக்கு செம்பொன் கிடைப்பது போன்று, நம்மைப் பற்றியிருக்கும் பாசம் மாயை ஆகியவற்றைத் தோண்டி எடுத்து வீசி எறிந்தால், ஆங்கே பெருமான் தோன்றுவார் என்பதை, கிளைத்து உழித் தோன்றிடும் கெடில வாணர் என்ற தொடர் உணர்த்துகின்றது. திளைத்ததோர் மான்மழுக் கையர் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மான் கன்றுக்கு உரிய குணம், அங்குமிங்கும் துள்ளித் திரிந்து மகிழ்ந்து விளையாடுதல். அந்த குணத்தினை மாற்றி, கொலை வெறி கொண்ட மானாக மாற்றப்பட்ட ஒரு மான் கன்று, தாருகவனத்து முனிவர்களால் சிவபெருமான் மீது ஏவப்பட்டது. மானின் கொடிய குணத்தினை மாற்றிய பெருமான், அந்த கன்றினை தனது கைகளில் ஏற்றிக் கொண்டார். மானும் மகிழ்ச்சியுடன் அவரது கரங்களில் அமர்ந்தது. அவ்வாறு மான் கன்று மகிழ்ச்சியில் திளைத்த செய்கை, இங்கே திளைத்ததொரு மான் என்று குறிப்பிடப் படுகின்றது.    

      முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
      வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
      திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்ய பொன்
      கிளைத்து உழித் தோன்றிடும் கெடில வாணரே

  சுந்தரர் ஒரு பொது பதிகத்தின் பாடலில் (7.33.5) வீணை தான் பெருமானின் திருக்கரத்தில் இருக்கும் இசைக் கருவி என்று கூறுகின்றார். கொடுகொட்டி=பெருமான் ஆடும் ஒரு வகைக் கூத்தின் பெயர்.

      கோணல் மாமதி சூடரோ கொடுகொட்டி காலோர் கழலரோ
      வீணை தான் அவர் கருவியோ விடையேறு வேத முதல்வரோ
      நாணதாக ஓர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ  நலமார் தர
      ஆணையாக நம் அடிகளோ நமக்கு அடிகளாகிய அடிகளே  

  பைஞ்ஞீலி தலத்தின் மீது பாடிய பாடல் ஒன்றினில் (7.36.9), சுந்தரர் பல இசைக்கருவிகளை குறிப்பிட்டு, அவற்றை இயக்கும் திறமை உடையவர் பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பல இசைக் கருவிகளை இசைக்க வல்லவராக இருக்கும் பெருமான், நாட்டியம் ஆடிக்கொண்டு பலியேற்கும் நோக்கத்துடன் பல இல்லங்கள் செல்லும் போது, நல்ல ஆடையையும் அணிகலனையும் அணியாது எலும்பு மாலையையும் ஆமை ஓட்டினையும் அணிந்து செல்வது பொருத்தாமா என்று கேட்கும் பாடல்.

      தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சங்கிணை சல்லரி
      கொக்கரை குடமுழவின் ஓசை கூடி பாடி நின்று ஆடுவீர்
      பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிறால்
      அக்கும் அமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே     

  பொழிப்புரை:

  சிவபெருமான் மழுப்படையை கையில் ஏந்தியவர்; அவர் வீணையினையும் தனது கையில் ஏந்தியவராக தான் பாடும் வேத கீதத்திற்கு ஏற்ப வீணையை இசைக்கின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அரசு புரிந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.    

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai