146. மண் புகார் வான் - பாடல் 1

திருஞானசம்பந்தர் காவிரிபூம்பட்டினத்தில்
146. மண் புகார் வான் - பாடல் 1

பின்னணி:

பல்லவனீச்சரத்து பரமனாரை பணிந்து பதிகங்கள் பாடிய பின்னர், திருஞானசம்பந்தர் காவிரிபூம்பட்டினத்தில் உள்ள மற்றொரு தலமாகிய சாய்க்காடு சென்றார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம். சாய்க்காடு தலத்து இறைவன் மீது சம்பந்தர் அருளிய இரண்டு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய நேரிசைப் பதிகம் ஒன்றும் (4.65), திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும் (6.82) நமக்கு கிடைத்துள்ளன. இந்த தலம் சென்ற சம்பந்தர், தனது  சிவந்த கைகளை உச்சி மீது கூப்பி, இந்த பதிகத்தை ஓதும் அடியார்கள் உடலும் மனமும் உருகும் வண்ணம் மண்புகார் என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மான் இடம் தரித்தார் என்று தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மானை அடக்கி, தனது இடது கையினில் பெருமான் ஏந்திய வீரச்செயல் இங்கே உணர்த்தப் படுகின்றது.

    வானளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத்
    தேனலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து
    மான் இடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண் புகார் என்று
    ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை

இந்த தலம் புகார் நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. புகார் சாய்க்காடு என்றே இந்த பதிகத்தில் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது. பாய்கள் செய்வதற்கு பயன்படும் சாயா  (கோரைப்புல் போன்று மற்றொரு வகை) எனப்படும் புற்கள் அதிகமாக கிடைப்பதால் சாய்க்காடு என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர். சாயாவனம் என்று அழைக்கப்படும்  இந்த தலம், சிலப்பதிகாரம் இலக்கியத்தில் குறிப்பிடப் படுகின்றது. தற்போது பிடாரியம்மன் என்று அழைக்கப்படும் அம்மன் சிலப்பதிகாரத்தில் சம்பாதி அம்மன் என்று குறிப்பிடப் படுகின்றாள். மேலும் நற்றிணை அகநானூறு ஆகிய சங்க இலக்கியங்களும் இந்த தலத்தினை குறிப்பிடுகின்றன. காசிக்கு சமமாக கருதப்படும் தமிழ் நாட்டுத் தலங்களில் இந்த தலம் ஒன்று. காசியினைப் போன்று இந்த தலத்தில் இறப்பவர்கள் முக்தி அடைவார்கள் என்று நம்பப் படுகின்றது. இதே சிறப்பினைப் பெற்றுள்ள மற்ற தலங்கள், மறைக்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவாஞ்சியம். இறைவன் சுயம்பு மூர்த்தம். இறைவனின் திருநாமம் அமுதேஸ்வரர், இறைவியின் திருநாமம் குயலினும் நன்மொழியம்மை. வில்லேந்திய வேலவர் மூர்த்தம் (உற்சவர்) மிகவும் அழகானது. இந்த சிலை கடலிலிருந்து கண்டெடுக்கப் பட்டதாக கூறுவார்கள். நான்கு கைகள் உடையதாக, வில்லினை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கும் முருகப் பெருமானின் உருவத்தினை நாம் வேறெங்கும் காணமுடியாது. மாடக்கோயில் அமைப்பில் உள்ளதால் கோச்செங்கட் சோழன் கட்டியதாக கருதப் படுகின்றது.

இந்திரனின் தாயார் இந்த தலம் வந்து இறைவனை அனுதினமும் வணங்கி வந்தார் என்றும், தனது தாயாருக்கு உதவி புரியும் பொருட்டு, இந்த தலத்து இறைவனின் மூர்த்தத்தை தேவலோகம் எடுத்துச் செல்ல இந்திரன் முயற்சி செய்தான் என்றும், அவ்வாறு அவன் முயற்சி செய்தபோது பாதாளம் வரை அகழ்ந்து சென்றும் பெருமானின் திருமேனி மேலும் ஊடுருவிச் சென்றது என்றும், அப்போது  பாதாளத்தில் நாகராஜனின் தலையில் இருந்த மணியின் ஒளி எங்கும் வீசியதால், தான் பெருமானை எடுத்துச் செல்வதை மற்றவர் அறிந்து தன்னை இகழ்வார்கள் என்ற  பயத்தினால் தனது முயற்சியை இந்திரன் கைவிட்டான் என்றும் தலபுராணம் கூறுகின்றது. சாயா என்றால் ஒளி என்று பொருள். நாகராஜனின் ஒளி படர்ந்தமையால் சாயாவனம் என்ற பெயர் வந்தது என்று கூறுவார்கள். உபமன்யு முனிவர் மற்றும் ஐராவத யானை வழிபட்ட தலம். இந்திரன் ஐராவத யானையினை தேரில் பூட்டி, இந்த கோயிலை இழுத்துச் செல்வதற்கு முயற்சி செய்தான் என்றும், அதனைக் கண்ட  அம்பிகை  குயில் வடிவம் கொண்டு குரல் கொடுத்து பெருமானுக்கு உணர்த்தியதால், குயிலினும் நன்மொழியம்மை என்ற ;பெயர் இறைவிக்கு ஏற்பட்டது என்றும் கூறுவார்கள்.                 

பாடல் 1:

    மண் புகார் வான் புகுவர் மனமிளையார் பசியாலும்
    கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும்
    விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி
    தண் புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே
  

விளக்கம்:

உயிர்கள் தாம் செய்த தீயவினைகளின் பயனை நரகத்தில் அனுபவித்தும் நல்வினைகளின் பயனை சொர்கத்தில் அனுபவித்தும் கழிக்க வேண்டிய நிலையில் உள்ளன. எனவே தூல உடலிலிருந்து  உயிர் பிரிந்த பின்னர், சூக்கும உடல், தங்களின் வினைகளின் தகுதிக்கு ஏற்ப சொர்கத்திற்கும் நரகத்திற்கும் இழுத்துச் செல்லப்பட்டு இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. ஆனால் இறைவனின் அருளினால் தங்களது வினைகள் முற்றிலும் கழிக்கப்பட்டு வினைகள் ஏதும் இல்லாத நிலையில், பக்குவமடைந்த அடியார்களின் உயிர் முக்தி உலகம் சென்று அடைவதால், அந்த வினைகள் சொர்கத்திற்கு செல்வதும் தவிர்க்கப் படுகின்றது. இந்த நிலையினைத் தான், விண்ணுலகம் செல்ல மாட்டார் என்று சொல்ல வேண்டாம், அதனினும் உயர்ந்த  இடமாகிய சிவலோகம் செல்வார்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மண் புகார்=மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகம் வரமாட்டார்கள்.
     
வான்=உயர்ந்த; வானுலகம்=விண்ணுலகினும் உயர்ந்த சிவனுலகம்; மனம் இளைத்தல்= மனம் வருந்துதல்; கண்=இடுக்கண், துன்பங்கள்; தாள்=திருப்பாதங்கள்; சாய்க்காட்டுத் தலைவனின் திருப்பாதங்களைச் சாரும் அடியார்கள் இம்மையில் துன்பங்கள் ஏதும் இன்றி மறுமையில் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று கூறுகின்றார். இம்மையிலும் மறுமையிலும் பெருமானின் அடியார்கள் அடைய இருக்கும் பலன்கள் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றன. கற்றாரும் கேட்டாரும் என்று பெருமானின் திருப்பாதங்களை வணங்கும் அடியார்கள் குறிப்பிடப்படுகின்றனர்.  

இந்த பாடலில் நான்கு அடிகளிலும் புகார் என்ற பெயர் குறிப்பிடப்பட்டு நயமாக அமைந்து உள்ளது. இந்த நயம், நமக்கு ஆலவாய் தலத்தின் மீது அருளப்பட்ட, பாடலை (3.52.1) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. வீடுபேறு பெறுவதைத் தவிர வேறு எந்த அவாவும் இல்லாத ஞானிகள் பெருமானின் திருப்பாதங்களை போற்றிப் பாட, அத்தகைய  பாடல்களைத் தவிர வேறு எதனையும் விரும்பாதவனாக, ஆலவாய் அண்ணல் அனைவரும் புகழும் வண்ணம் வீற்றிருக்கின்றான். காட்டினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது இருப்பிடமாக கொள்வதற்கு விரும்பாத கபாலியாகிய பெருமான், வலிமை வாய்ந்த நீண்ட மதில்களால் சூழப்பட்ட மதுரை   நகரில் குலாவி விளையாடும் கொள்கை உடையவனாக இருக்கின்றான்.

    வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின் கழல்
    பாடலால வாயிலாய் பரவ நின்ற பண்பனே
    காடலால வாயிலாய் கபாலி நீள் கடிம்மதில்
    கூடலால வாயிலாய் குலாயது என்ன கொள்கையே
   

பொழிப்புரை:

வெண்மை நிறத்து மாடங்களையும் நீண்ட வீதிகளையும் குளிர்ந்த தன்மையையும் கொண்டுள்ள புகார் நகரின் சாய்க்காடு திருக்கோயிலில் உள்ள தலைவனாகிய பெருமானின் திருப்பாதங்களைச் சாரும் அடியார்கள், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும்  நிலவுலகில் புகவேண்டிய அவசியம் இல்லாதவர்களாக விளங்குவார்கள்; மேலும் அவர்கள் உயர்ந்த சிறப்பினை உடைய பெருமானின் முக்தி உலகம் சென்றடைவார்கள்; அத்தகைய அடியார்கள், இம்மையில் பசி பிணி முதலான துன்பங்களிலிருந்து விடுபட்டு மனவருத்தம் ஏதும் இன்றி வாழ்வார்கள். இவ்வாறு பெருமானது திருப்பாதங்களை பணிந்து வழிபடும் அடியார்கள், பெருமானின் புகழினை கற்றும் கேட்டும் மகிழ்வார்கள். அவர்கள் இந்த நிலவுலக வாழ்க்கையினை முடித்த பின்னர், மீண்டும் பிறப்பினுக்கு வழி வகுக்கும் போகவுலகத்திற்கு, சொர்க்க லோகத்திற்கு செல்ல மாட்டார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ; அதனிலும் உயர்ந்த சிவலோகம் சென்று என்றும் அழியாத பேரானந்தத்தில் திளைத்து வாழ்வார்கள் என்பதை நாம் எவரும் சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com