146. மண் புகார் வான் - பாடல் 2

பெருமான் நடமாடுவதை
146. மண் புகார் வான் - பாடல் 2

பாடல் 2:

பேய்க்காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்
வாய்க்காடு முது மரமே இடமாக வந்தடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே


விளக்கம்:

பேய்கள் உலவும் இடம் என்பதால், சுடுகட்டினை பேய்க்காடு என்று குறிப்பிடுகின்றார். விடையான்=இடபத்தை வாகனமாகக் கொண்டவன்; புகார் நகரத்தின் ஒரு பகுதியாக சாய்க்காடு தலம் விளங்கும் நிலை இங்கே புகார்ச் சாய்க்காடு என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது. வாய்க்காடு=அகன்ற இடத்தினைக் கொண்டுள்ள காடு; முதுமரம்=பழமையான கல்லால மரம். பெருமானே என்ற சொல்லினை மூன்றாவது அடி மற்றும் நான்காவது அடிக்கு பொதுவான சொல்லாக கருதி பொருள் கொள்ள வேண்டும்.

பேய்களின் பாடலுக்கு ஏற்ப பெருமான் நடமாடுவதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரானின் இன்னம்பர் தலத்து பாடலை (4.100.3) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தாம் செய்வது இன்னதென்று அறியாத நிலையில், தங்களுக்குள்ளே மாறுபட்டு நடனம் ஆடும் பேய்களுடன் இணைந்து நடனம் ஆடும் பெருமானின் திறமையை இங்கே குறிப்பிடுகின்றார். நடனக்கலை என்றால் என்ன என்று அறியாதன பேய்கள். எனவே எப்படி ஆடுவது என்பது குறித்து அவைகளின் இடையே ஒத்த கருத்து எழவில்லை. அதனால் ஒருவர் ஆட்டத்திற்கும் மற்றொருவர் ஆட்டத்திற்கும் இடையே ஒற்றுமை ஏதும் இல்லாமல் நெறிமுறை தவறி ஆடிய ஆட்டம். இத்தகையவர்களுடன் கூடி ஆடுவதே கடினம்; அதிலும் அவர்களின் நடனத்துடன் இணைந்து ஆடுவது என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனாலும் சிவபிரான் பேய்களுடன் இணைந்து சாமர்த்தியமாக ஆடியதாக அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூமலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னு மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன என்று அறியாதன பேய் கணத்தோடு
இணங்கி நின்று ஆடின இன்னம்பரான் தன் இணை அடியே

பேய்கள் பாட பெருமான் பெருநடனம் ஆடுகின்றான் என்று பல திருமுறைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். நெய்த்தானம் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (1.13.3) பேய்கள் பாட நடமாடிய பெருமான் என்று குறிப்பிடுகின்றார். நெய் என்ற சொல் எதுகை கருதி நேய் என்று நான்காவது அடியில் வந்துள்ளது. நே என்ற சொல் நேயம் என்ற சொல்லின் சுருக்கமாக கருதி அடியார்கள் தங்களது நீராட்ட மகிழ்ந்து உறையும் இறைவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.

பேயாயின பாடப் பெருநடம் ஆடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம் மிக உடையான்
தாயாகிய உலகங்களை நிலைபேறு செய்த பெருமான்
நேயாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே

அடியார்களின் அன்பினால் நீராட்டப்படும் இறைவன் என்று சம்பந்தர் இங்கே கூறுவது அப்பர் அருளிய பாவனாசத் திருப்பதிகத்தின் பாடலை (4.15.11) நமது நினைவுக்கு, கொண்டு வருகின்றது. நமது சிந்தனையில் தோன்றும் அன்பு வெள்ளத்தில் பெருமானை நீராட்டி, அழகிய தமிழ் பாடல்களை அவனது திருவடியில் சேர்த்து, எமது தந்தையே பெருமானே என்று வழிபடும் அடியார்களின் பாவங்கள் முற்றிலும் நாசமாகிவிடும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் இறை வழிபாட்டில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதை, இறைவனை நமது சிந்தையில் இருத்தி சிந்தையின் எண்ணங்களால் அவனை நீராட்டி, சொல்மாலைகளால் அவனைப் புகழ்ந்து பாடி, மலர்களை அவனது திருவடியில் சேர்த்து வழிபடவேண்டும் என்று கூறுகின்றார். மூரி=வலிமை மிகுந்த

முந்தி தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை
சிந்தை வெள்ளப் புனலாட்டி செஞ்சொல் மாலை அடி சேர்த்தி
ஏந்தைப் பெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே

இடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.56.3) பூதங்களின் பாடலுக்கு ஏற்ப பெருமான் சுழன்று சுழன்று, தனது கையினில் தீச்சுடரினை ஏந்தியவாறு நடமாடுவதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

அழல் மல்கும் அங்கையில் ஏந்திப் பூதம் அவை பாடச்
சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
எழில் மல்கு நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில்
பொழில் மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே

நெய்த்தானம் தலத்தின் மீது அருளிய பாடலில் (4.37.5) தன்னைச் சூழ்ந்து நிற்கும் பூதங்கள் பாடல் நடனம் ஆடும் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். அந்தண்=அம்+தண்= அழகும் குளிர்ச்சியும் உடைய; காட்டினைத் தான் நடனமாடும் அரங்காகக் கொண்டு, கனன்று எரியும் தீப்பிழம்பினை கையில் ஏந்தியவாறு, பாடுகின்ற பூதங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்க, பண்ணுடன் இசைந்த பல பாடல்கள் பாடியவாறு நடனமாடும் சிறப்பினை உடைய பெருமான், அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நெய்த்தானம் தலத்தில் என்றும் உறைகின்றார். அத்தகைய பெருமானை, அழகும் இளமையும் பொருந்தி விளங்கும் பெருமானைச் சென்று அடையும் சிவயோக நெறியினை தான் அந்நாள் வரை அறியாமல் பரிதாபமான நிலையில் இருந்ததாக அப்பர் பிரான் வருத்தம் அடையும் பாடல்.

காடு இடமாக நின்று கனலெரி கையில் ஏந்தி
பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர் சீரார் அந்தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரை கூடுமாறு அறிகிலேனே

எங்களது துன்பங்களைத் தீர்க்கும் இடைமருதனே என்று அழைத்து அவனது திருப்பாதங்களைத் தொழுதால் நமது பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் என்று சொல்லும் பாடலில் (5.13.9) பூதங்கள் பாட அதற்கு ஏற்ப நின்றாடும் புனிதன் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். ஏதம்=துன்பம்: பறையும்=நீங்கும்: பரமேட்டி=பல தெய்வங்களாலும் விரும்பப் படுபவன்;

வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்
பூதம் பாட நின்றாடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
பாதம் ஏத்தப் பறையும் நம் பாவமே

திருவெண்காடு தலத்தின் மீது அருளிய பாடலில் (7.6.7) தன் பால் அன்பு கொண்டுள்ள அடியார்கள் மகிழும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான், பூதங்களின் பாடலுக்கு ஏற்ப விருப்பத்துடன் நடனம் ஆடுகின்றார் என்று சுந்தரர் கூறுகின்றார். அவரது ஆடலை உலகமே புகழ்வதாக இந்த பாடலில் கூறுகின்றார்.

காதலாலே கருதும் தொண்டர் காரணத்தர் ஆகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்
நீதியாக ஏழில் ஓசை நித்தராகி சித்தர் சூழ
வேதம் ஓதித் திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே

பொழிப்புரை:

பேய்கள் உலவும் சுடுகாட்டில் மறைந்து வாழ்வதை தனது வழக்கமாக உடைய பெருமான், பூம்புகார் நகரத்தில் உள்ள சாய்க்காடு தலத்தினைத் தனது இருப்பிடமாகக் கொண்டு உறைகின்றான். அவன் இடபத்தினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான். அகன்ற காட்டினில் உள்ள கல்லால மரம் வந்தடைந்து, அதன் கீழே அமர்ந்து நான்கு முனிவர்களுக்கும் அறம் உரைத்த பெருமான், பேய்களின் பாடல்களூக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றான். அத்தகைய பெருமானை, பெருமைக்கு உரியவனாக கருதி சான்றோர்கள் புகழ்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com