141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 1

பெருமானை தரிசித்து
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 1

பின்னணி:

திருவியலூர் தலம் சென்று, பெருமானை தரிசித்து, குரவம் கமழ் என்று தொடங்கும் பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் அங்கிருந்து புறப்பட்டு திருந்துதேவன்குடி என்று அந்நாளில் அழைக்கப்பட்ட தலம் வந்தடைகின்றார். இந்த தலம் வந்ததை குறிப்பிடும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    திருந்து தேவன்குடி மன்னும் சிவபெருமான் கோயில் எய்திப்
    பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார்
    மருந்தொடு மந்திரமாகி மற்று இவர் வேடமாம் என்று
    அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்

வேடம் என்பதற்கு பெருமானின் திருவடையாளங்கள் என்று விளக்கம் அளித்து, சிவக்கவிமணியார் பெருமானின் அடையாளங்களாகிய சடைமுடி, உருத்திராக்கம், திருநீறு  ஆகியவற்றின் தன்மைகளையும் அவை அளிக்கும் நன்மைகளையும் சம்பந்தர் இந்த பதிகத்து பாடல்களில் குறிப்பிடுவதாக கூறுகின்றார். ஞானசம்பந்தரின் சரித்திரத்தில் நாம்,  திருநீற்றினை பாண்டிய மன்னனின் உடலில் தடவி அவனது வெப்பு நோயினைத் தீர்த்து திருஞானசம்பந்தர் நிகழ்த்திய அதிசயத்தின் விவரங்களை காண்கின்றோம். அப்போது அருளிய பதிகத்தின் (2.66) பாடல்களில், திருநீற்றின் தன்மையை, மந்திரமாக, தந்திரமாக, புண்ணியமாக, உடலின் இடர் தீர்க்கும் மருந்தாக விளங்கும் தன்மை குறிப்பிடப்படுகின்றது. அதே போன்று இந்த பதிகத்திலும் திருநீறு உள்ளிட்ட பெருமானின் அடையாளங்களின் பெருமை குறிப்பிடப்படுகின்றது.

மதுரையில் வாழ்ந்து வந்த மூர்த்தி நாயனார், சோமசுந்தரப் பெருமானுக்கு இடுவதற்காக தினமும் சந்தனம் அரைத்துக் கொடுத்து வந்தார். அந்நாளில் மதுரையை ஆண்டு வந்த மன்னன் திடீரென்று இறந்து விடவே, வாரிசு ஏதுமின்றி இறந்த மன்னனுக்கு பதிலாக ஆட்சி செய்வதற்கு அடுத்தவரை தேர்வு செய்யும் பொருட்டு பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து நகரை வலம் வரச் செய்தனர். அந்த யானை மூர்த்தி நாயனார் கழுத்தில் மாலையை அணிவித்தது. ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள சம்மதித்த நாயனார் மூன்று நிபந்தனைகளை விதித்தார். தனக்கு விபூதியே அபிடேகப் பொருளாக இருக்கவேண்டும் என்றும் உருத்திராக்கமே அணிகலனாக இருக்கவேண்டும் என்றும், சடைமுடியே கிரீடமாக இருக்கவேண்டும் என்றும் கூறினார். அவ்வாறு இருப்பதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொள்ள, எப்போதும் திருநீற்று கோலத்துடன் திகழும் மூர்த்தியாரும் சடைமுடி மற்றும் உருத்திராக்கம் அணிந்த கோலத்துடன் அரசாட்சி செய்தார். திருநீற்றால் அவருக்கு அபிடேகமும் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மும்மையால் உலகாண்ட மூர்த்தியார் என்ற பெயரும் ஏற்பட்டது. திருநீற்றின் பெருமையை விளக்கும் வண்ணம், திருநீற்றினால் அபிடேகம் செய்து கொண்ட மூர்த்தியாரின் செயலை குறிக்கும் சேக்கிழாரின் பாடலை இங்கே காண்போம். வயங்கு நீறு=பெருமானின் திருமேனியில் விளங்கும் திருநீறு; செழும் கலன்=சிறந்த ஆபரணம்;

    வையம் முறை செய்குவன் ஆகில் வயங்கு நீறே
    செய்யும் அபிடேகமுமாக செழும் கலன்கள்
     ஐயன் அடையாளமுமாக அணிந்து தாங்கும்
    மொய்புன் சடைமுடியே முடியாவது என்றார்.  

இந்த தலம் தற்போது நண்டார்கோயில் என்று அழைக்கப்படுகின்றது. தேவன்குடி என்பது ஞானசம்பந்தர் வாழ்ந்த நாளில் இந்த தலத்தின் பெயராக இருந்தது என்று கூறுவார்கள். பெருமானை வழிபட்டு உயிர்கள் திருந்தி வாழ்வினில் உய்வினை அடைய உதவும் கோயில் என்பதால் திருந்து என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருந்துதேவன்குடி என்று அழைக்கப் பட்டது போலும். ஆனால் தற்போது கோயிலைச்சுற்றி ஊர் ஏதும் இல்லை. வயல்வெளியின் நடுவே இந்த கோயில் அமைந்துள்ளது. திருவியலூர் தலத்திற்கு வடக்கே ஒரு கி.மீ. தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து எட்டு கி.மீ, தூரத்தில் உள்ளது. கோயிலைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் ஒரு மாலையாக அமைந்தது போன்று அகழி காணப்படுகின்றது. நண்டு பூஜை செய்து வழிபட்டதால் நண்டார்கோயில் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இலிங்கத்தின் மீது பசும்பால் அபிடேகம் செய்தால் நண்டு ஊர்வது போன்ற தோற்றம் தெரிகின்றது. தூர்வாச முனிவரின் சாபத்தால் ஒரு யக்ஷன் ஒரு நண்டாக பிறந்து, இங்குள்ள அகழியில் பூத்த தாமரை மலர்களை தனது கொடுக்கால் கவ்விக்கொண்டு, அகழியின் அடியில் வளை தோண்டிக்கொண்டு சென்று  சிவலிங்கத்திற்கு தாமரை மலரால் அர்ச்சனை செய்து சுயவுருவம் பெற்றதாக கூறுவார்கள். பிறவியில் கால்கள் மற்றும் வளைந்து இருந்த முனிவர் தாமரை மலர் கொண்டு வழிபட்டமையால் இறைவனுக்கு கற்கடேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். பல அரிய மூலிகைகளின் நடுவே சுயம்பு இலிங்கம் இருப்பதைக் கண்டு வழிபட்ட தன்வந்த்ரிக்கு, பல அபூர்வ மூலிகைகளை காட்டி, இறைவன் அவற்றின் பயனை குறிப்பிட்டதாக கூறுவார்கள். தலத்து இறைவனுக்கு அருமருந்து என்று ஒரு திருநாமம் உள்ளது. தலத்து இறைவனுக்கு தேவதேவேசர் என்ற திருநாமமும் உள்ளது. தலத்து அம்பிகைக்கு அருமருந்து நாயகி என்று ஒரு பெயர்.  

அரக்கர்களின் தாக்குதலால் வலிமை இழந்த இந்திரன், குரு பகவானின் ஆலோசனையின் பேரில், தலத்து இறைவனை தாமரை மலர்கள் கொண்டு வழிபாட்டு பயன் அடைந்ததாக தலபுராணம் கூறுகின்றது. இலிங்கத்தின் முன்பகுதியில் ஒரு வெட்டு காணப்படுகின்றது.  எந்த ஒரு மருந்தாலும் தீர்க்கப்படாத நோயுடன் இருந்த மன்னன் ஒருவன், எப்போதும்  சிவநாமத்தை தியானம் செய்தவாறு இருந்தான். ஒரு நாள் அவன் முன்னர் ஒரு முதியவர் தோன்றி, இந்த தலத்திற்கு அழைத்து வந்து, தலத்து இலிங்கத்தை வெட்டும் படி கூறியதாகவும், மன்னனும் அவ்வாறு செய்த போது வெட்டுபட்ட இடத்திலிருந்து பெருகிய இரத்தம், மன்னனின் மேனி மீது பட்டு பிணி தீர்ந்தது என்றும், அதுவரை உடனிருந்த முதியவர் மறைந்தார் என்றும், அப்போது அம்மன் சிலை கிடைக்காததால் புதியதாக ஒரு சிலை செய்து அருமருந்து அம்மை என்று மன்னன் வழிபட்டான் என்றும் கூறுவார்கள். பிற்காலத்தில் விக்கிரம சோழன் காலத்தில் தோண்டிய போது கிடைத்த பழைய அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவே இரண்டு அம்மன் சன்னதிகள் இங்கே உள்ளன. பழைய அம்மன் சிலையின் திருநாமம் அபூர்வநாயகி என்பதாகும்.    

பாடல் 1:

    மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
    புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
    திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய
    அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே

விளக்கம்:

இந்த பதிகத்தின் மற்ற பாடல்களில் தேவன்குடி என்று தலத்தின் பெயரை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் திருந்துதேவன் குடி என்று குறிப்பிடுவது நாம் உணரத்தக்கது. தன்னை வணங்கும் மனிதர்களின் சிந்தனைகளில் உள்ள மாசுகளை அகற்றி திருத்தி அமைக்கும் தன்மை கொண்டவன் இறைவன் என்பதை உணர்த்தும் வகையில் திருந்துதேவன்குடி என்று தலத்து இறைவனின் பெயரை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பெருமானைத் தொழுவதால் நமது சிந்தை திருந்தும் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரான் மருகல் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலை (5.1.88) நினைவூட்டுகின்றது. தவம் என்ற சொல் இங்கே தவத்தால் ஏற்படும் நற்பயன்களைக் குறிக்கும். பேதைமை=அறியாமை; திருகல்=மாறுபட்ட எண்ணம்:

    பெருகலாம் தவம் பேதமை தீரலாம்
    திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
    பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
    மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து. உடல் நோயினைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்த பெருமான், உள்ளத்தை திருத்தி  உள்ளத்தின் நோயினையும் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவராக விளங்கும் தன்மை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.  

பெருமானின் வேடங்களைத் தரித்தோரை வணங்குதலும், பெருமானின் வேடங்களை வணங்குதலும் ஒரே பயனைப் பெற்றுத் தரும் என்பது இந்த பாடலில் மூலம் உணர்த்தப் படுகின்றது. இந்த தகவல் நமக்கு அப்பர் பெருமான் அருளிய கன்றாப்பூர் தலத்து பாடலை  (6.61.3) நினைவூட்டுகின்றது.

எவரேனும் தாமாக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி   உவராதே அவரவரைக் கண்ட போதே உகந்து அடிமைத் திறம் நினைந்து அங்கு  உவந்து நோக்கி
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்த ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே

இலாடம்=நெற்றி; சாதனம்=துணைப்பொருள்; கவராதே=மனம் ஒன்றி, மனதினில் எந்த விதமான தயக்கம் சந்தேகமும் இல்லாமல்; இரண்டு ஆட்டாது=இரண்டு விதமான எண்ணங்களை மனதினில் கொள்ளாது; இந்த பாடலில் இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டாது ஒழிந்து என்ற தொடரின் மூலம் ஒரு முக்கியமான செய்தியை அப்பர் பிரான் கூறுகின்றார். இவர் என்பது பெருமானின் அடியார்களையும் அவர் என்பது பெருமானையும் குறிக்கும். பெருமானின் அடியார்களும் நாம் தொழத்தக்க தேவர், பெருமானும் நாம் தொழத் தக்க தேவர் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது.  சிவபெருமானுக்கும் அடியார்களுக்கும் எந்த விதமான வேற்றுமை இல்லை என்பதும், பெருமானை மதித்து வழிபடுவது போன்று பெருமானின் அடியார்களையும் மதித்து வழிபடவேண்டும் என்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. நாம் பெருமானை நோக்கும் கண்ணோட்டத்தில் எள்ளளவும் குறையாது பிறழாது, பெருமானின் அடியார்களையும் நோக்க வேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்து.

அரசனின் முத்திரை மோதிரத்தினைத் தாங்கி வருபவர் எவராக இருந்தாலும், அவரது குணம் குற்றம் ஆகியவற்றைக் கருதாமல், அரசனே நேரில் வந்ததைப் போன்று பாவித்து, அவரின் சொற்படி நடப்பது போன்று, பெருமானின் அடையாளங்கள் ஆகிய திருநீறு உருத்திராக்கம் ஆகியவற்றை அணிந்தவர்களை, பெருமான் போல் பாவித்து அவர்களை மதித்து நடக்க வேண்டும் என்பதே இந்த பாடல் மூலம் அப்பர் பிரான் நமக்கு உணர்த்தும் அறிவுரை.

திருநீறும் உருத்திராக்கமும் அணிந்தவர்களை கண்டால் உள்ளம் உருகும் அடியார்கள் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். அவ்வாறு இருந்த இரண்டு நாயன்மார்களை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். திருநீறு அணிந்திருந்த அவர்களின் திருவேடத்திற்கு மதிப்பு கொடுத்து, தன்னைக் கொல்ல வந்த எதிரியையும் கொல்லாமல் விட்டவர்கள், மெய்ப்பொருள் நாயனார் மற்றும் ஏனாதிநாத நாயனார். அவர்களது சரித்திரத்தினை நாம் இங்கே சுருக்கமாக காண்போம்.

திருக்கோவலூரை தலைநகராகக் கொண்டு சேதி நாட்டினை ஆண்டு வந்த ஒரு மன்னர் சிவபெருமானின் அடியார்களின் திருவேடத்தை மெய்ப்பொருளாக கருதி வாழ்ந்தமையால் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார். அவரது பகை மன்னன் முத்தநாதன் என்பவன் பலமுறை அவரை வெற்றி கொள்ள முயற்சி செய்தும் தோல்வியுற்றான்.  எனவே ஒரு சூழ்ச்சியால் அவரை வெற்றி கொள்ள நினைத்தான். சிவனடியார் போல் வேடம் தரித்து, புத்தக கட்டினுள்ளே குறுவாளை மறைத்து வைத்து, நாயனாரை அவரது அரண்மனையில் சந்தித்த முத்த நாதன், அந்நாள் வரையில் வெளிவராததும் சிவபெருமானே அருளியதும் ஆகிய ஞான நூல் தன்னிடம் இருப்பதாக கூறி, மன்னரை தனியே சந்திக்க வேண்டும் என்று கூறினான். தனியாக மன்னரை சந்தித்த போது, புத்தகக் கட்டினை அவிழ்ப்பது போல் நடித்து மறைத்து வைத்திருந்த குறுவாளினை எடுத்து மன்னரை கொன்றான். அரசனின் மெய்க்காப்பாளன் உள்ளே வந்து, நடந்ததைக் கண்ணுற்று, முத்தநாதனை வெட்டுவதற்கு பாய்ந்தான். அப்போது இறக்கும் தருவாயில் இருந்த அரசன், மெய்காப்பாளனிடம், சிவவேடம் தரித்த இவர் நம்மவர்; எனவே அவருக்கு எந்த ஆபத்தும் நேராமல் பத்திரமாக வெளியே அழைத்துச் செல்வாயாக என்று கட்டளையிட்டான். வஞ்சகன் முத்தநாதன் சிவவேடம் தரித்ததால் ஆபத்து ஏதும் இன்றி தப்பினான். அரசனின் ஆணைக்கு இணங்க, நாயனாரின் கட்டளையை நிறைவேற்றிய காவலாளன், ஆபத்து ஏதுமின்றி, பகைவனை நகருக்கு வெளியே அனுப்பியதை எடுத்துரைத்தான். அது கேட்ட நாயனார், இறைவனின் கருணையினால் சிவவேடம் தாங்கிய முத்தநாதனுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சியுடன் உயர் துறந்தார். திருநீறு அணிந்திருந்த தனது  எதிரியை, தன்னை வாளால் அவன் குத்திய போதும், எதிரியாக கருதமால் நண்பனாக கருதி  அவனது உயிருக்கு தனது படைவீரர்களால் எந்த ஆபத்தும் ஏற்படலாகாது என்ற நோக்கத்துடன் தனது மெய்கப்பாலனுக்கு கட்டளை இட்டவர் மெய்ப்பொருள் நாயனார்.  தான் இறக்கும் முன்பு மந்திரிமார்களுக்கும் மற்றவர்களுக்கும் திருநீற்றினையும் திருநீறு அணிந்தவர்களையும் போற்றி பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். இதனை உணர்த்தும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. ஆயத்தார்=மந்திரிகள்; அழிவுறும் காதலார்=தமது பிரிவால் வருந்தும் மனைவியர் மற்றும் சுற்றத்தார்;

    அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
    விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
    பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று
    புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார்

 
எயினனூர் என்ற தலத்தில் வாழ்ந்து வந்த ஏனாதிநாதர் அரசகுலத்திற்கு வாட்பயிற்சி அளித்து அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு சிவனடியார்களை ஆதரித்து வந்தார். இதே தொழிலில் ஈடுபட்டிருந்த அதிசூரன் என்பவருக்கும் நாயனாருக்கும் இடையே தொழிற்போட்டி இருந்து வந்தது. தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள தங்கள் இருவரில் யார் சிறந்தவர் என்பதை அறியும் வண்ணம் வாட்போரில் ஈடுபடுவது என்று இருவரும் முடிவுக்கு வந்தனர். நாயனார் அதிசூரனைக் கொல்லவிருந்த தருணத்தில், அதிசூரன் தனது முகத்தை மறைத்திருந்த கேடயத்தினை நீக்கினான். அப்போது அவன் முகத்தில் திருநீற்றின் பொலிவினைக் கண்ட நாயனார், இதற்கு முன்னம் இவரது முகத்தில் கண்டிராத திருநீற்றினை யான் இப்போது கண்டேன்; எனவே இவரது உள்ளக் கருத்தின் வழியே நடப்பேன் என்ற முடிவுக்கு வந்தவராய், அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டார். மேலும் அதிசூரனுக்கு வெற்றி வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, தனது கேடயத்தையும் வாளினையும் கீழே போட நாயனார் முதலில் நினைத்தபோதிலும், நிராயுதபாணியைக் கொன்ற பழி, சிவச்சின்னம் தரித்த அதிசூரனுக்கு ஏற்படலாகாது என்ற நோக்கத்துடன், தனது வாளினையும், கேடயத்தையும் கையில் எடுத்துக் கொண்டு போரிடுவது போன்று நடித்தார். அந்த சந்தர்ப்பத்தை அதிசூரன் பயன்படுத்திக் கொண்டு ஏனாதிநாத நாயனாரைக் கொன்றான். அதிசூரனின் முகத்தில் திருநீற்றுப் பொலிவினைக் கண்ட நாயானரின் மனநிலையை உணர்த்தும் சேக்கிழாரின் பாடலை நாம் இங்கே காண்போம்.

    கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத
    வெண் திருநீற்றின் பொலிவு மேற்கண்டேன் வேறினியென்
    அண்டர்பிரான் சீரடியார் ஆயினார் என்று மனம்
    கொண்டு இவர்தம் கொள்கைக் குறி வழி நிற்பேன்

    கைவாளுடன் பலகை நீக்கக் கருதியது
    செய்யார் நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
    எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும்பலகை
    நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்

பாண்டிய மன்னன் நெடுமாறனிடம் மந்திரியாக இருந்தவர் குலச்சிறை நாயனார். மதுரை நகரில் பெரும்பாலோர் அரசனை பின்பற்றி சமண சமயத்தைச் சார்ந்து வாழ்ந்த போதும், சைவ நெறியினை பின்பற்றி வாழ்ந்தவர். திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து சமண சமயத்தை வேரறுக்க உதவி செய்தவர். இவரை, கோவணம் திருநீறு உருத்திராக்கம் ஆகிய நலந்தரும் அடையாளங்களை அணிந்த அடியார்கள் எவரேனும் கண்டால் அவரைத் தொழுது போற்றி வணங்கும் தன்மை உடையவர் என்று திருஞானசம்பந்தர் தனது தேவாரப் பாடலில் (3.120.8) இவரை குறிப்பிடுகின்றார். நாவினுக்கு அழகு செய்யும் நமச்சிவாய மந்திரம் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஏ=அம்பு; பகைவரது அம்புகள் வணங்கி அப்பால் செல்லும் வலிமை படைத்தவன் அரக்கன் இராவணன் என்று குறிப்பிடும் சம்பந்தர், அத்தகைய வலிமை படைத்த அரக்கன் தன்னை அடிமையாகக் கொண்ட பெருமான் என்று இறைவனை உணர்த்துவதை நாம் உணரலாம்.

    நா அணங்கு இயல்பாம் அஞ்செழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பாகும்
    கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
    ஏ வணங்கு இயல்பாம் இராவணன் திண்தோள் இருபது நெரிதர ஊன்றி
    ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாயதும் இதுவே

திருநீறு, கோவணம், சிவசாதனமாகிய உருத்திராக்கம் ஆகியவை அணிந்த அடியார்களின் பாதம் பணிந்து வழிபடும் பண்பினர் என்று சேக்கிழார் இவரை குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
    ஆதி தேவர் தம் அஞ்செழுத்தாம் அவை
    ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
    பாதம் நாளும் பரவிய பண்பினர்

தினமும் திருக்கோயில் சென்று இறைவனை வழிபடும் பழக்கம் கொண்டிருந்த சேரமான் பெருமாள் நாயனார், ஒரு நாள் அவ்வாறு கோயிலை வலம் வந்து இறைவனைத் தொழுத பின்னர் தனது அரண்மனைக்கு திரும்பி வரும் வழியில், ஒரு வண்ணான் தனது தலையில் உவர்மண் மூட்டையை சுமந்து கொண்டு வருவதை பார்த்தார். மழையில் நனைந்து கரைந்த உவர் மண் வண்ணானின் உடலெங்கும் பரவி வெண்மை நிறத்துடன் அவனது உடல் காணப்பட்டது. இவ்வாறு வண்ணான் இருந்த கோலம், சிவபிரானின் அடியார்களின் திருக்கோலம் என்ற உணர்வுடன் யானையின் மீதிருந்த மன்னர் கீழே இறங்கி வண்ணானை கைகூப்பி வணங்கினார். மன்னர் வணங்குவதைக் கண்டு பதற்றம் அடைந்த வண்ணான், அரசே நீங்கள் என்னை தவறாக நினைத்து வணங்குகின்றீர். நான் தங்களுக்கு அடிமைத் தொண்டு புரியும் வண்ணான் என பொருள் பட அடி வண்ணான் என்று கூறினான். அதற்கு நாயனாரும் நான் அடிச்சேரன் என்று பதிலளித்து, நீங்கள் எனக்கு பெருமான் விரும்பும் அன்பான திருவேடத்தினை நினைவூட்டினீர், ஏதும் வருத்தம் அடையாமல் உங்கள் வழியே செல்லுங்கள் என்று கூறினார். இதன் மூலம் திருநீறு அணிந்த வேடத்திற்கு சேரமான் பெருமான் நாயனார் அளித்த மதிப்பு உணர்த்தப் படுகின்றது.  இதனைக் குறிப்பிடும் சேக்கிழாரின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    சேரமான் தொழக் கண்டு சிந்தை கலங்கி முன் வணங்கி
    யார் என்று அடியேனைக் கொண்டது அடியேன் அடி வண்ணான் என்னச்
    சேரர் பிரானும் அடிச்சேரன் அடியேன் என்று திருநீற்றின்
    வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாதே ஏகும் என மொழிந்தார்

புகழ்ச்சோழ நாயனார் கருவூரைத் தனது  தலைநகராக கொண்டு ஆண்டு வந்தார். அவரது மேலாண்மையை ஏற்றுக்கொண்டு பல மன்னர்கள் அவருக்கு கப்பம் செலுத்தி வந்தனர்.  ஒரு முறை மலைநாட்டு மன்னன் கப்பம் செலுத்துவதை நிறுத்தியதால், அந்த நாட்டின் மீது புகழ்ச்சோழர் போர் தொடுத்து வெற்றி கண்டார். போரில் இறந்து கீழே விழுந்த தலைகளில், சடைமுடி கொண்டு திருநீறு அணிந்த தலை ஒன்று இருந்ததை கண்டார். சடைமுடியுடன் திருநீறு அணிந்த தலையைக் கண்டதும், நடுநடுங்கி, திருநீற்று நெறியை பாதுகாப்பதில் நான் முறைதவறி விட்டேன்; எனது வீரர்கள் சடைமுடி அணிந்து திருநீறு பூசி சிவவேடத்துடன் இருந்த ஒருவரை கொல்வதற்கு தான் காரணமாகி விட்டேன் என்று வருந்தினார். இவ்வாறு தீராத பழிக்கு ஆளான தான் உயிர் துறப்பதே சிறந்த நீதிமுறை என்ற முடிவுக்கு வந்தார். சடைமுடியுடன் இருந்த தலையை பொன் தட்டில் ஏந்தியவாறு தீயினை மூன்று முறை வலம் வந்து, ஐந்தெழுத்தினை ஓதியவாறு மகிழ்ச்சியுடன் தீயில் விழுந்து தனது உயிரை போக்கிக் கொண்டார். சடைத் தலையைக் கண்டவுடன் நடுங்கிய மன்னரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சேக்கிழாரின் பாடல் இங்கே உள்ளது.

    கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கை தொழுது
    கொண்ட பெரும் பயத்துடன் குறித்து எதிர்சென்று அது கொணர்ந்த
    திண்திறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்து அருளிப்
    புண்டரீகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்   

திருமுனைப்பாடி நாட்டினை ஆண்டு வந்தவர் நரசிங்க முனையரையர். திருவாதிரைத் திருநாளில் பெருமானின் அடியார்களுக்கு பொற்காசுகள் கொடுக்கும் பழக்கம் உடையவர். ஒருமுறை அவர் பொற்காசுகள் கொடுத்த போது, காமத்தின் பால் வயப்பட்டு மயங்கிக் கிடந்து காமக்குறிகள் வெளிப்பட தோன்றிய நிலையில் இருந்த மனிதர் ஒருவர், திருநீறு அணிந்தவராக, பொற்காசுகள் வாங்குவற்கு வந்தார். அவரது நிலையைக் கண்டு மற்றவர்கள் எள்ளி நகையாடி, அருவருத்து ஒதுங்கினார்கள். ஆனால் நரசிங்க முனையரையர் அவருக்கு இரண்டு மடங்கு பொற்காசுகள் கொடுத்தார். நல்லொழுக்கம் இல்லாதவராக திகழ்ந்த அவரை, திருநீறு அணிந்த தன்மையை பொருட்படுத்தாமல் இகழ்ந்த மற்றவர்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக இரண்டு மடங்கு பொன் கொடுத்தார் என்று சேக்கிழார் கூறுகின்றார்.

    சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
    ஞாலம் இகழ்ந்து அருநரகம் நண்ணாமல் எண்ணுவார்
    பால் அணைந்தார் தமக்கு அளித்த படியிரட்டிப் பொன் கொடுத்து
    மேல் அவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார்

பெண்ணாகடம் நகரத்தில் வாழ்ந்து வந்த கலிக்கம்பர் தினமும், தனது இல்லத்திற்கு வரும் அடியார்களின் திருவடிகளை தூய்மை செய்து, நிதி அளித்து, அவர்களுக்கு அன்னம் அளிக்கும் பழக்கம் கொண்டவர். பல நாட்களுக்கு முன்னர் அவரிடம் வேலைக்காரராக பணி செய்த ஒருவர் சிவனடியார் வேடத்தில் ஒரு நாள் கலிக்கம்ப நாயனார் இல்லத்திற்கு வந்தார். அவர் பழைய வேலையாள் என்பதை உணர்ந்த அவரது மனைவியார், தனது கணவர் அவரது பாதங்களை கழுவதற்கு ஏதுவாக நீர் விடுவதற்கு தயங்கினார். மனைவி தயங்கியதை உணர்ந்த கலிக்கம்பர், மனைவியிடம் இருந்த நீர்ச் சொம்பினை தான் வாங்கி அடியாரின் கால்களை கழுவினார். பின்னர் தயங்கிய மனைவியின் கைகளை வெட்டினார். சிவ வேடத்திற்கு உரிய மதிப்பு அளிக்காத மனைவிக்கு தண்டனை அளித்தமை சேக்கிழாரால் பெரிய புராணத்தில் குறிப்பிடபடுகின்றது.

    வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை
    குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
     மறித்து நோக்கார் வடிவாளை வாங்கி கரகம் வாங்கிக் கை
    தறித்து கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்

மேற்குறித்த வரலாறுகள் மூலம் திருநீறு, உருத்திராக்கம்,  கோவணம், சடைமுடி ஆகிய  பெருமானின் அடியாளங்களுக்கு அடியார்கள் அளித்த மதிப்பினை நாம் உணர்ந்து கொள்ள முடியும். புரிந்து=அன்பு செய்து; அடிகள்=சிவபெருமான்; தேவர் தேவன்=தேவர்களுக்கும் மேலான தேவனாக விளங்குபவன், மகாதேவன்; அருமருந்து மற்றும் தேவதேவேசர் ஆகிய தலத்து இறைவனின் திருநாமங்கள் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. புண்ணியங்கள்= சிவ புண்ணியங்கள்; சிவாலய வழிபாடு, சிவாலயத் தொண்டு, சிவ வழிபாடு, சிவனடியார் வழிபாடு, சிவச்சரிதங்களை கேட்டல், சிவச்சரிதங்களை சொல்லுதல் ஆகிய சிவ புண்ணியங்களாக கருதப்படுகின்றன. பெருமானின் அடையாளங்களை போற்றுதல், சிவபுண்ணியங்கள் செய்வதால் வரும் பயனை அளிக்கும் என்று சம்பந்தர் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார். மந்திரங்கள் என்று பொதுவாக சம்பந்தர் இங்கே கூறுகின்றார். எனவே அஞ்செழுத்து மந்திரம், வேத மந்திரம் மற்றும் திருமுறை பதிகங்கள் ஆகியவற்றை குறிப்பதாக நாம் கொள்ளலாம். பிணிகளைத் தீர்க்கும் மந்திரங்களாக மூவர் பெருமானார்கள்  அருளிய பாடல்கள் விளங்கிய தன்மையை நாம் அவர்கள் சரித்திரத்தில் காண்கின்றோம்.   பிறவிப் பிணியினை தீர்க்கும் மருந்தாக திருவாசகப் பாடல்கள் விளங்குவதை நாம் அனைவரும் அறிவோம். எனவே மந்திரங்கள் என்ற சொல் திருமுறை பாடல்களையும் குறிக்கும்.         
 
பொழிப்புரை:

திருந்துதேவன்குடி தலத்து பெருமானது அடையாளங்களாகிய திருநீறு உருத்திராக்கம் மற்றும் சடைமுடி ஆகியவற்ற கண்ணால் கண்டாலும் அல்லது மனதினால் நினைத்தாலும் ஏற்படும் பயன் யாதென்பதை இங்கே கூறுகின்றேன்; இந்த அடையாளங்கள், தங்களது நோய்களை தீர்த்துக் கொள்ள விரும்பும் அடியார்களுக்கு மருந்தாகவும், ஐந்தெழுத்து மந்திரம், வேத மந்திரங்கள் மற்றும் திருமுறை பாடல்கள் ஆகியவற்றை சொல்ல விரும்பும் அடியார்களுக்கு அத்தகைய மந்திரங்களாகவும், சிவ புண்ணியங்கள் செய்ய விரும்பும் அடியார்களுக்கு, அத்தகைய புண்ணியங்கள் அளிக்கும் பயன்களாகவும் விளங்குகின்றன, இத்தகைய வேடங்களை தனது அடையாளமாகக் கொண்டுள்ள இறைவன், தேவதேவன் என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் தலம் திருந்துதேவன்குடி என்பதாகும். இந்த பெருமானின் திருவேடங்களை, அரிய தவம் புரியும் முனிவர்கள் தியானித்து தொழுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com