141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 2

ஞானத்தாலும் பாச ஞானத்தாலும்
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 2


பாடல் 2:

    வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவ்வன
    ஓதி ஓர்க்கப்படாப் பொருளை ஓர்விப்பன
    தீதில் தேவன்குடித் தேவர் தேவு எய்திய
    ஆதி அந்தம் இல்லா அடிகள் வேடங்களே

விளக்கம்:

தீதில்=அடியார்களின் தீமைகளை அகற்றும்; வீதி=அச்சம்; வீடுதல்=அழித்தல்; ஓர்தல்= ஆராய்தல், தெளிதல்; ஓதி ஓர்க்கப்படா=பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் ஆராய்ந்து உணரமுடியாத; உலகத்து உயிர்களைப் பற்றிய அறிவும் உலகத்து பொருட்கள் பற்றிய அறிவும் பெரிய அறிவாக கருதப்பட்டு இந்நாளில் போற்றபட்டாலும், அத்தகைய அறிவு இறைவனின் அடையாளங்களின் பெருமையை உணர்வதற்கு உதவாது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். அடியார்களின் அச்சத்தை போக்கும் வல்லமை வாய்ந்தவை என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பிறப்பிறப்புச் சுழலில் அகப்பட்டு பிறவிப்பிணியை தீர்க்க முடியவில்லையே என்பதே அடியார்களின் அச்சமாக இருக்கும் நிலையினை பெரும்பாலான அப்பர் பிரானின் தேவாரப் பாடல்களிலும், மணிவாசகரின் திருவாசகப் பாடல்களிலும் காண்கின்றோம். அத்தகைய அச்சமே இங்கே சம்பந்தராலும் குறிப்பிடப் படுகின்றது. வீதிபோக்கு என்பதற்கு அடியார்கள் வீதிகளில் செல்லும் தன்மை என்று பொருள் கொண்டு, தங்களது இல்லத்திலிருந்து திருக்கோயிலுக்கு செல்லும் அடியார்கள் தூய்மையான ஆடைகளுடன் சிவச் சின்னங்களை அணிந்து சென்றால் அவர்களுக்கு தனி பொலிவு ஏற்படுவதாக சம்பந்தர் கூறுகின்றார் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.        

பொழிப்புரை:

திருந்துதேவன்குடி தலத்து பெருமானின் திருவேடத்து அடையாளங்கள், அடியார்கள் பிறவிப்பிணியால் வருந்தும் தன்மை விளைவிக்கும் அச்சத்தை போக்கி, அவர்களை பிணைத்துள்ள வினைகளை முற்றிலும் அழித்து, அடியார்கள் வீடுபேறு நிலையை அடைய உதவுகின்றன. இத்தகைய அடையாளங்களின் பெருமையை பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் அரிய முடியாது. ஆனால் பெருமானின் திருவேடத்து அடையாளங்கள், தனது பெருமையை அடியார்களுக்கு உணர்த்தும் தன்மை உடையன. இத்தகைய அடையாளங்களை உடைய திருந்துதேவன்குடி  தலத்து இறைவன், தேவர் தேவன் என்ற திருநாமம் உடைய இறைவன், ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளாக விளங்கும் இறைவன், அடியார்களுக்கு வரவிருக்கும் தீமைகளை அகற்றுகின்றான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com