141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 5
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 07th October 2019 12:00 AM | Last Updated : 07th October 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 5:
விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி
மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி
அண்ணலான் ஏறு உடை அடிகள் வேடங்களே
விளக்கம்:
விண்=தேவலோகம்; அண்ணல்=தெய்வம்; தெண்ணிலா=தெளிந்த ஒளியினை உடைய நிலவு; பண்டைய நாளில் உயர்ந்த மாடங்கள் உடைய தலமாக இந்த தலம் இருந்தது போலும். ஆனால் தற்போது திருக்கோயிலைச் சுற்றி வயல்கள் மட்டுமே காணப்படுகின்றன. திருக்கோயிலும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. பெருமானின் அடையாளங்களை போற்றும் அடியார்கள் சிந்தனை, முதல் பாடலில் கூறிய வண்ணம் திருத்தப் படுவதால், அவர்கள் தீய செயல்கள் புரிவதில்லை. அவர்கள் புரியும் நல்ல செயல்களின் பயனாக அவர்கள் சொர்க்கத்தில் (விண்ணுலகில்) இன்பம் அனுபவிக்க நேரிடுகின்றது. எனவே தான் பெருமானின் அடையாளங்கள் அடியார்களை நற்செயல்களை புரிய வைத்து அதன் பயனாக விண்ணுலக இன்பத்தை அனுபவிக்க வழி வகுக்கின்றது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். மயக்கம்=தவறு எது சரி எது என்று புரியாத நிலை.
பொழிப்புரை:
பெருமானின் அடையாளங்கள் அடியார்களை நற்செயல்கள் புரிய வைத்து அதன் பயனாக விண்ணுலக இன்ப வாழ்க்கைக்கு வழி வகுக்கின்றன; வினைகளை முற்றிலும் அறுத்து பிறவிப் பிணியிலிருந்து விடுதலை அளித்து முக்தி உலகம் செல்ல வழி வகுக்கின்றன; இம்மையில் அனைவரும் பாராட்டும் வண்ணம் வாழ்க்கை நடத்தும் நல்ல நெறியினை காட்டுகின்றன; பெருமானைத் தொழும் அடியார்கள் தங்களது அறியாமை காரணமாக பெருமான் குறித்த விஷயங்களில் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தால் அந்த மயக்கத்தைத் தீர்க்கின்றன. இவ்வாறு செயல்படும் அடையாளங்களைக் கொண்டுள்ள பெருமான், தெளிந்த ஒளியுடன் விண்ணில் உலவும் சந்திரனைத் தீண்டும் வண்ணம் உயர்ந்த மாடங்கள் உடைய திருந்துதேவன்குடி தலத்தில் உறைகின்றான். நம் அனைவருக்கு உயர்ந்த தெய்வமாக விளங்கும் அந்த இறைவன், எருதினைத் தனது வாகனமாகக் கொண்டுள்ளான்.