Enable Javscript for better performance
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 6- Dinamani

சுடச்சுட

  

  141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 6

  By என். வெங்கடேஸ்வரன்  |   Published on : 08th October 2019 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேவாரம்


  பாடல் 6:

      பங்கம் என்னப் படர் பழிகள் என்னப்படா
      புங்கம் என்னப் படர் புகழ்கள் என்னப்படும்
      திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
      அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
   

  விளக்கம்:

  பங்கம்=இழிவு; புங்கம்=உயர்வு; பெருமானின் திருவேடத்தின் பொலிவினை உணர்ந்து,  அந்த திருவுருவத்து அடையாளங்களின் பெருமையை உணர்ந்து, பெருமான் பால் அன்பு கொண்டு வழிபடும் அடியார்களின் செயல்கள் எவ்வாறு கருதப்படுகின்றன என்பதை சம்பந்தர் இந்த பாடலில் விளக்குகின்றார். இறைவனின் அடையாளங்களின் பெருமையை உணர்ந்து தகுந்த மதிப்பினை அளித்த அடியார்களின் செய்கை, எத்தகைய தன்மையதாக இருந்தாலும், அந்த செயல்களால் அவர்களுக்கு இழிவு ஏற்படாது என்று அத்தகைய செயல்களால் அவர்களுக்கு பழியேதும் ஏற்படாது என்றும் சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்களின் அத்தகைய செயல்களின் உயர்ந்த தன்மையை உணர்த்த, உயர்வு என்ற சொல் பொருத்தமற்றது என்பதால், உயர்வு என்று சொல்லமாட்டார்கள் என்று சம்பந்தர் மிகவும் நயமாக கூறுகின்றார்.  

  மெய்ப்பொருள் நாயனார், ஏனாதிநாதநாயனார், சேரமான் பெருமாள் நாயனார், புகழ்ச்சோழ நாயனார், கலிக்கம்ப நாயனார் ஆகியோரின் சரித்திரங்கள், அவர்களது செயல்கள் இயற்கைக்கு மாறாக இருந்தாலும் அந்த செயல்களால் அவர்களுக்கு பழியேதும்  வாராமல் புகழினையே தேடித்தந்தது என்பதை உணர்கின்றோம். இந்த செயல்களின்  விவரங்கள் இந்த பதிகத்து முதல் பாடலின் விளக்கத்தில் விவரமாக சொல்லப்பட்டுள்ளன. தன்னெதிரே இருந்தவன் வண்ணன் என்பதையும் தனது குடிமகன் என்பதையும் புறக்கணித்து, அவனது வேடம், திருநீற்றினை நினைவூட்டியது என்று, தான் பவனி வந்த யானையிலிருந்து கீழே இறங்கி, வண்ணானை வணங்கிய சேரமான் பெருமாள் நாயனாரின் செயல் எவராலும் இகழப்படவில்லை.

  வஞ்சகமாக தன்னை கத்தியால் குத்தியவன் முத்தநாதன் என்பதை பொருட்படுத்தாமல் சேதி நாட்டு அரசர் மெய்ப்பொருள் நாயனார்,  எதிரி நாட்டானை, நண்பனாக கருதி, எந்த தீங்கும் விளைவிக்காமல் தனது நாட்டெல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று தனது மெய்க்காப்பாளனுக்கு ஆணையிட்டார்; திருநீறு தரித்திருந்ததால் தனது எதிரியையும் பாதுகாத்த அந்த அடியாரை அனைவரும் போற்றுகின்றோம் அல்லவா.

  தங்களது இல்லத்தில் பலநாட்கள் முன்னர் பணி செய்தவன் தான் அமுதுண்ண வந்த   சிவனடியார் என்பதை உணர்ந்த களிக்கம்பரின் மனைவி, அந்த அடியாருக்கு உரிய முறையில் மரியாதை செய்ய மறுத்தபோது, மனைவியைக் கடிந்த கலிக்கம்பர் தானே முன்வந்து அந்த அடியாருக்கு உரிய மரியாதை செய்ததுமன்றி, மனைவியின் கையையும்  வாளால் வெட்டினார். மனைவியின் கையை வெட்டிய கலிக்கம்பரின் செயல் பழிக்கப் படவில்லை; அதனால் அவருக்கு எந்த பாவமும் சேரவில்லை.

  தன்னிடம் தனியாக போரிட்ட அதிசூரன் தோற்றுப்போகும் நிலையில் இருந்த தருணத்தில்  அந்த சமயம் வரை தனது முகத்தை மறைத்திருந்த கேடயத்தை நீக்கவே, அவனது முகத்தில் இருந்த திருநீற்றின் பொலிவினை கண்ட ஏனாதிநாதர், அதிசூரனை கொல்லாமல் விட்டார்; மேலும் அதிசூரன் கொண்டிருந்த சிவக்கோலத்திற்கு மதிப்பளித்து அவனிடம் தோற்றுப் போகவும் முடிவு செய்தார். எனினும் நிராயுதபாணியை கொன்றான் என்ற பழி அதிசூரனுக்கு வருவதை தடுக்க, தான் போரிடுவதைப் போன்று பாவனையும் செய்தார். வேண்டுமென்றே தோற்றதற்காக ஏனாதினாதரை எவரும் பழிக்கவில்லை; மாறாக அவர் சிவவேடத்திற்கு கொடுத்த மதிப்பினை கருதி அவரை அனைவரும் புகழ்ந்தனர்.

  தான் வெற்றி கொண்ட மாற்றானின் படையின் இடையே திருநீறு அணிந்த ஒரு சடைத்தலை இருந்ததை அறிந்த புகழ்ச்சோழர், சிவவேடத்திற்கு தான் கொடுக்க வேண்டிய மதிப்பினை அளிக்கத் தவறிய குற்றத்திற்காக தான் தற்கொலை புரிந்து கொள்வதன் மூலம் தனக்கு தண்டனை அளித்துக்கொண்ட விவரம், பெருமானின் சின்னங்களை அவர் மிகவும் உயர்வாக  மதித்தமையை நமக்கு உணர்த்துகின்றது.  

  தன்னை அணுகிய சிவனடியாரின் தோற்றத்திற்கு மதிப்பளித்து, தனது மனைவியையும்  அவருக்கு அளித்த இயற்பகை நாயானாரின் செய்கை, முதலில் அவரது  உறவினர்களால் பழித்து கூறப்பட்டாலும், பின்னர் அவருக்கு எத்தகைய  உயர்வினை தேடித் தந்தது என்பதையும் நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம். ஆதிரைத் திருநாளில் தன்னிடமிருந்து பொற்காசுகள் பெறுவதற்காக வந்த ஒரு சிவனடியார் காமக்குறி கலந்த உடலுடன் அனைவரும் இகழத்தக்க கோலத்தில் வந்த போதிலும், மற்றவர்கள் அவரை இகழ்ந்து பரிகசித்த போதிலும்,  தான் அவரை இகழாது அவருக்கு இரட்டிப்பு பொன் கொடுத்து, பெருமானின் அடையாளங்களுக்கு உரிய மதிப்பு அளித்தவர் நரசிங்க முனையரையர். மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும், பெருமானின் அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்த அடியார்களின் செய்கைகள் புகழப்பட்டன என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

  பொழிப்புரை:

  சிவ வேடத்திற்கு மதிப்பு கொடுத்த அடியார்களது செயல்கள் பல பொதுவான இயல்புக்கு மாறுபட்டு இருந்தாலும், அந்த செயல்களை எவரும் பழிப்பதில்லை; மேலும் அந்த செயல்களால் அவர்களுக்கு எந்தவிதமான பாவமும் சேர்வதில்லை; உயர்வு என்ற சொல்  அவர்கள் புரிந்த செய்கையின் மிகவும் உயர்ந்த தன்மையை முற்றிலும் உணர்த்த போதாது என்பதால், உயர்வு என்ற சொல்லை பயன்படுத்தி அத்தகைய செய்கைகளை எவரும் குறிப்பிடுவதில்லை; மேலும் அத்தகைய செயல்கள் புகழுக்கு உரிய செயல்களாக கருதப் படுகின்றன. சந்திரன் தவழும் வண்ணம் உயர்ந்த மரங்கள் கொண்ட சோலைகள் நிறைந்த  திருந்துதேவன்குடி தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் வேதங்களையும், வேதங்களுக்கு பாதுக்காப்பான அரணாக விளங்கும் ஆறு அங்கங்களையும் உலகுக்கு அறிவித்தவர் ஆவார். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai