Enable Javscript for better performance
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 8- Dinamani

சுடச்சுட

  

  141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 8

  By என். வெங்கடேஸ்வரன்  |   Published on : 10th October 2019 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேவாரம்


  பாடல் 8:

      உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
      விலகு பூதக்கணம் வெருட்டும் வேடத்தின்
      திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி
      அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
   

  விளக்கம்:

  உட்கும்=அஞ்சத்தக்க. பெருமானின் அருகில் இருக்கும் பூதகணங்கள் அனைத்தும் பெருமானின் அடையாளங்களாகிய உருத்திராக்கம், சடைமுடி மற்றும் திருநீறு ஆகிய மூன்று சாதனங்களையும் அணிந்துள்ளன. அந்த சாதனங்களை அணிந்தமையால் அந்த பூதகணங்கள் அரக்கன் இராவணனை விரட்டும் வல்லமை கொண்டவையாக விளங்கின என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். இந்த குறிப்பு நமக்கு, வால்மீகி இராமயணத்தில் உள்ள சில சுலோகங்களை நினைவூட்டுகின்றன. அரக்கன் இராவணன் முதல் முறையாக இராமனுடன் போருக்கு சென்ற போது, போரில் தோல்வியடைந்தான். களைப்படைந்திருந்த அரக்கனை, இராமபிரான், இன்று போய் நாளை வா என்று சொல்லி அனுப்பியபோது மிகவும் அவமானம் அடைந்து இராவணன் தனது அரண்மனைக்கு திரும்புகின்றான். அந்நாள் வரை தோல்வி கண்டிராத தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தனக்குள் சிந்தித்த அரக்கன், முன்னாளில் உமையம்மை, நந்திதேவர், நளகூபரனின் மனைவி ரம்யா மற்றும் வருணனின் மகள் ஆகியோரின் சாபத்தின் விளைவாக தனக்கு இந்த இழிந்த நிலை ஏற்பட்டதோ என்று நினைத்து மனம் கலங்குகின்றான். நந்திதேவர் அளித்த சாபத்தின் விவரம் உத்தரகாண்டத்தில் (பதினாறாவது சர்கம்) இராவணன் என்று பெயர் அவனுக்கு வந்த விவரத்தை குறிப்பிடும் வால்மீகி முனிவர், அப்போது நந்திதேவர் அளித்த சாபத்தை குறிப்பிடுகின்றார். குபேரனிடமிருந்து புஷ்பக விமானத்தை கைப்பற்றிக் கொண்டு இலங்கை திரும்பும் போது, அரக்கன் இராவணன் கயிலாய மலையினை நெருங்குகின்றான். கயிலாய மலையின் மீது பறந்து செல்லமுடியாமல் விமானம் தடைப்படுகின்றது. விமானம் தடைப்பட்டதை உணர்ந்த அரக்கன், பெருமானின் இருப்பிடமாகிய புனிதமான கயிலாய மலை தனது பயணத்தை தடுக்கின்றது என்பதை உணர்ந்தான். கோபம் கொண்ட அரக்கன் தேவதேவரான பெருமானை நேரில் சந்தித்து தனது கோபத்தை அவரிடம் வெளிப்படுத்த முடிவு செய்தான். அப்போது பூத  கணங்களின் தலைவரான நந்திதேவர் தனது இருப்பிடத்திலிருந்து வெளியே வந்து அரக்கனை உள்ளே ;புகவிடாமல் தடுத்தார். தன்னை தடுத்த நந்திதேவரை, அவரது வித்தியாசமான முகத்தினை குறிப்பிட்டு, பரிகாசம் செய்ததுமன்றி, குரங்கு முகம் கொண்டவனே, எனக்கு வழிவிடுவாயாக என்று அரக்கன் கூறினான். அதற்கு நந்திதேவர், குரங்கு முகம் என்று என்னை பழித்த்தமையால், குரங்குகளின் கூட்டத்தால் உனது தலைநகரம் அழியும் என்றும், தன்னை ஒத்த வல்லமை படைத்த அந்த குரங்குகளால் அவனது சுற்றத்தாரும் கொல்லப்படுவார்கள் என்றும் சாபமிட்டார். மேலும்  கயிலை மலையின் புனிதத்தன்மை கருதி, தான் அரக்கனுடன் சண்டையிட தயாராக இல்லை என்றும் கூறினார். நந்திதேவரை கடந்து உள்ளே செல்ல முடியாமல் திணறிய அரக்கன், தனது பயணத்தை தடுத்த கயிலை மலையினை பேர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டு தனது பயணத்தை தொடர்வேன் என்று கூக்குரலிட்டு, கயிலை மலையினை பேர்த்தேடுக்கும் முயற்சியில் இறங்கினான் என்று வால்மீகி முனிவர் கூறுகின்றார். இந்த நிகழ்ச்சி, பெருமானின் அடையாளங்களைத் தரித்திருந்த நந்திதேவரை கடந்து கயிலாயத்தின் உள்ளே செல்ல முடியாமல் அச்சத்துடன் அரக்கன் திரும்பினான் என்பதை நமக்கு  உணர்த்துகின்றது. பூத கணங்களின் இந்த தன்மை தான் சம்பந்தரால் இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது போலும்.  

  பொதுவாக ஞானசம்பந்தர் தான் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் இராவணனின் கயிலை நிகழ்ச்சியினை குறிப்பிட்டு, பெருமான் கால் விரலை ஊன்றி அவனை  கயிலை மலையின்  கீழே அடர்த்து நெருக்கியதையும், பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் சாமகானம் பாடி பெருமானை மகிழ்வித்து, பல வரங்கள் பெற்றதையும் குறிப்பிடுவார்.   ஒரு சில பதிகங்களில் பெருமானின் அடியார்களால், இராவணன் தோல்வி அடைய நேர்ந்ததையும் சம்பந்தர் குறிப்பிடுகின்றார். கயிலை நிகழ்ச்சிக்கு பதிலாக, வாலி மற்றும் ஜடாயு அரக்கன் இராவணனை வென்ற செய்தி முறையே வடகுரங்காடுதுறை மற்றும் புள்ளிருக்குவேளூர் பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இந்த பதிகத்திலும், இராவணனுடன் தொடர்பு கொண்ட கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப்படாமல், பூதகணங்கள் இராவணனை அச்சம் கொள்ளச் செய்யும் வல்லமை வாய்ந்தவை என்று உணர்த்தப் படுகின்றது.                                                   

  பொழிப்புரை:

  உலகத்தவர் அனைவரும் அச்சம் கொள்ளும் வண்ணம் வலிமை பெற்றிருந்த அரக்கன் இராவணன் அச்சமடைந்து விலகிச் செல்லும் வண்ணம் வல்லமை உடையவர்களாக பூத கணங்கள் விளங்கியமைக்கு காரணம், அவை சிவபெருமானின் அடையாளச் சின்னங்களை அணிந்திருந்த நிலை தான். இந்த வல்லமையைக் கொண்டு செயல்பட்டு, பெருமானின் அடியார்கள் எதிர்கொள்ளும் தீங்குகளை அவை தடுக்கின்றன. இத்தகைய பெருமை வாய்ந்த அடையாளங்களை உடைய பெருமான், நெற்றிக்கு அழகு சேர்க்கும் திலகம் போன்று, தலத்திற்கு அழகினை சேர்க்கும் சோலைகளை உடைய திருந்துதேவன் குடி தலத்தில், பொருந்தி உறைகின்றான். அவன், இந்த தலத்தில் விளையும் பூக்களை, மிகுந்த விருப்பத்துடன் தனது சடையில் ஏற்றுக்கொள்கின்றான்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai