Enable Javscript for better performance
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 9- Dinamani

சுடச்சுட

  

  141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 9

  By என். வெங்கடேஸ்வரன்  |   Published on : 11th October 2019 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேவாரம்

   

  பாடல் 9:

      துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன
      விளக்கம் ஆக்குவ்வன வெறி வண்டாரும் பொழில்
      திளைக்கும் தேவன்குடித் திசைமுகனோடு மால்
      அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே

  விளக்கம்:

  துளக்கம்=பயம், நடுக்கம்; விளக்கம் ஆக்குதல்=ஒளியுடன் விளங்கும் வண்ணம் செய்தல்.  பெருமானின் அடையாளங்களை தரித்த அடியார்களுக்கு நடுக்கம் என்பதில்லை என்றும் அவர்கள் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்றும் ஞானசம்பந்தர் இங்கே கூறுவது, நமக்கு திருநாவுக்கரசர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. சமண குருமார்களின் வார்த்தையில் கட்டுண்டு மயங்கிக் கிடந்த பல்லவ மன்னன், மத யானையை அவிழ்த்துவிட்டு திருநாவுக்கரசரின் மீது ஏவி அவரது தலையினை இடறித் தள்ளுவதற்கு ஏற்பாடு செய்கின்றான். வெறி கொண்ட யானை தன்னை நோக்கை ஓடி வருவதைக் கண்ட பின்னரும் சிறிதும் அச்சம் கொள்ளாமல் திருநாவுக்கரசர் நின்றதும் அன்றி, பெருமானின் அடியார்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்ற பொருள் பட சுண்ண வெண்சந்தன என்று தொடங்கும் பதிகத்தினை (4.2) பாடியவாறு சிவபெருமானையே நினைத்தவாறு நிற்கின்றார். அவரது தலையினை இடறித் தள்ள ஏவப்பட்ட மதயானை அவரது அருகில் வந்ததும், அவரை வலம் வந்து திரும்பிச் சென்ற செய்தி, பெரிய புராணத்தில்  மிகவும் விவரமாகவும் கூறப்படுகின்றது. அப்போது நாவுக்கரசர் இருந்த நிலையினை உணர்த்தும் பெரிய புராணத்து பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

      அண்ணல் அருந்தவ வேந்தர் ஆனை தம் மேல் வரக் கண்டு
      விண்ணவர் தம் பெருமானை விடை உகந்தேறும் பிரானைச்
      சுண்ண வெண் சந்தனச் சாந்து தொடுத்த திருப்பதிகத்தை
      மண்ணுலகு உய்ய எடுத்து மகிழ்வுடனே பாடுகின்றார்  

  சிவபிரானின் திருவடிகளையே தியானம் செய்து கொண்டு இருந்த அப்பர் பிரானுக்கு சிவபிரானின் உருவம் அவரது மனதினில் நிறைந்து இருந்தது போலும். சிவபிரானின் அடையாளங்களும், அவர் அணிந்துள்ள பொருட்களும் மிகவும் விவரமாக இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சொல்லப்படுகின்றன. தான் எந்த நிலைமையில் இருந்தாலும் இறைவனை ஏத்துவன் என்று இதற்கு முன்னர் சமணர்களால் வந்த சோதனையை, சுண்ணாம்பு காளவாய் அறையில் அடைத்து வைக்கப்பட்ட போது அந்த தண்டனையை  எதிர் கொண்ட அப்பர் பிரான், அதே நிலையில் தான் யானை தன்னை நோக்கி வந்தபோதும் இருந்தார். சிவபிரானின் அடியார் என்பதால் தான் எவருக்கும் அஞ்ச வேண்டியது இல்லை என்றும், வரும் நாட்களில் தான் அஞ்சும்படியான நிகழ்ச்சி ஏதும் வராது என்றும் மிகவும் நம்பிக்கையுடன் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

      சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
      வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
      அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
      திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
      அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை  
   

  இறைவனின் அருளால், தன் மீது ஏவப்பட்ட மதயானையால் ஆபத்து ஏதும் விளையாமல் தப்பிய திருநாவுக்கரசருக்கு நஞ்சு கலந்த பால் ஊட்டப்படுகின்றது. அதனின்றும் உயிர் பிழைத்த அவரை கல்லுடன் பிணைத்து கடலில் தள்ளுகின்றனர். அப்போது நமச்சிவாயத்  திருப்பதிகத்தை அவர் பாட, கல் தெப்பமாக கடலில் மிதந்து அவரை கரை சேர்க்கின்றது.   இவ்வாறு சமணர்களின் சதியால் தனக்கு ஏற்பட்ட நான்கு ஆபத்துகளிலிருந்தும் தப்பிய திருநாவுக்கரசர், தான் அவ்வாறு தப்பியதற்கு பெருமானின் கருணையே காரணம் என்ற முடிவுக்கு வருகின்றார். தீர்க்கமுடியாத சூலை நோயால் வருந்தியவாறு நள்ளிரவில்  தனது தமக்கை திலகவதியாரை சந்தித்த போது, அவர் தனது நெற்றியில் திருநீறு  இட்டு ஆறுதல் சொல்லிய தருணத்திலிருந்து எப்போதும் திருநீறு தரித்து சிவவேடத்துடன் காணப்பட்ட திருநாவுக்கரசர், தான் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரை ஏறிய பின்னர்,  பாடிய முதல் பதிகத்தில், ஈன்றாளுமாய் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.94.9),   நம்மை காப்பாற்றுவதற்கு சிவபெருமான் இருக்கையில் எந்த இடரினைக் கண்டும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறுகின்றார்.

      மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழுலகும்
      விண் பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சேல் நெஞ்சே
      திண் பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க்
      கண் பாவு நெற்றிக் கடவுள் சுடரான் கழல் இணையே

  இரு சுடர்=தூமகேது என்ற கோளும், மற்ற நட்சத்திரங்களும். திண்=வலிமையான பால்= பற்றுக் கோடு, திண்பால் என்றால் உறுதியான இடம் என்றும் பொருள் கொள்ளலாம். திண் பால் நமக்கு ஒன்று கண்டோம் என்று வலிமையான பற்றுக்கோடு ஒன்றினை தான் கண்டதாக அப்பர் பிரான் கூறுவதன் காரணம், தன்னை பல இடர்களிலிருந்து காத்த  பெருமானின் கருணையை நினைந்து என்று நாம் உணரவேண்டும். பூமி பிளத்தல், பிளவின் வழியே பூமி மண் இறங்குதல், கடல் நீர் பெருக்கெடுத்து உலகினை மூடுதல், தூமகேது என்ற கோளும், மற்ற நட்சத்திரங்களும் கீழே விழுதல் முதலிய நிகழ்ச்சிகள் உலகினில் பெரும்கேடு விளைவிக்கும் என்ற நம்பிக்கை உண்டு.  

  பொழிப்புரை:

  பெருமானின் திருவேடங்களை அணிந்த அடியார்களுக்கு நடுக்கம் என்பதில்லை. அத்தகைய  அடியார்களின் திருமேனி ஒளியுடனும் தூய்மையாகவும் திகழும் வண்ணம் மாற்றும் தன்மை கொண்டவை பெருமானின் திருவேடங்கள். இத்தகைய அடையாளங்களை உடைய பெருமான், நறுமணத்தைத் தேடி வரும் வண்டுகள் நிறைந்த சோலைகள் உடைய திருந்துதேவன்குடி மகிழ்ச்சியில் திளைத்த வண்ணம் உறைகின்றான். இந்த பெருமான், நான்கு திசைகளையும் ஒரே சமயத்தில் நோக்கும் வண்ணம் நான்கு முகங்களைக் கொண்ட பிரமனும், நான்முகனும் மிகுந்த முயற்சி செய்து தனது அடியையும் முடியையும் காண  முயன்றபோது அவர்கள் காணாத வண்ணம், நீண்டு நின்றவராவார்.  

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai