141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 11

பெருமை உடைய சான்றோர்கள்
141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 11

பாடல் 11:

    சேடர் தேவன்குடி தேவர் தேவன் தனை
    மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
    நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
    பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே

விளக்கம்:

சேடர்=பெருமை உடையவர்கள்; நாட=விரும்பி;

பொழிப்புரை:

பெருமை உடைய சான்றோர்கள் வாழும் திருந்துதேவன் குடி தலத்தில் வாழும் தேவதேவனை புகழ்ந்து, ஓங்கிய மாடங்கள் மற்றும் குளிர்ந்த சோலைகள் நிறைந்த சீர்காழி  நகரத்தினைச் சார்ந்த திருஞானசம்பந்தன் விருப்பத்துடன் பாடிய இந்த பத்து பாடல்களை ஓதும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு பாவங்கள் ஏதும் வந்து சேரா.  

முடிவுரை:

இந்த பதிகத்தின் பாடல்கள் அனைத்திலும் அடிகள் என்று பெருமானை திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு அப்பர் பிரான் அருளிய நின்ற திருத்தாண்டகத்தினை (6.94) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் எம்மடிகள் நின்றவாறே என்று குறிப்பிட்டு, பெருமான் எவ்வாறு அனைத்துப் பொருட்களிலும் கலந்து, பல தன்மைகள் உடையவராக உயிர்களுக்கு கருணை புரிகின்றார்  என்பதை குறிப்பிடுகின்றார்.
   
பெருமானை தரிசனம் செய்து அவரது திருவுருவத்தினை மனதினில் தியானம் செய்து கற்பனையில் அவரது திருவுருவத்தினை கண்டு களிக்கும் அடியார்கள், மேற்குறித்த அடையாளங்கள் பெருமானுக்கு தனி பொலிவினைத் தருவதை உணர்வார்கள். அவ்வாறு தங்களது மனக்கண்ணினால் பெருமானது அடையாளங்களை உணரும் அடியார்களுக்கு ஏற்படும் விளைவுகளை இந்த பதிகம் எடுத்துரைக்கின்றது என்று சில அறிஞர்கள் விளக்கம்  அளிக்கின்றனர்.

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானின் அடையாளங்கள் மருந்தாகவும், மந்திரமாகவும்,  புண்ணியங்களாகவும் தன்னைப் போற்றும் அடியார்களுக்கு செயல்படும் தன்மையையும்  குறிப்பிடும் ஞானசம்பந்தர், அந்த அடையாளங்கள் தவம் புரியும் முனிவர்களால் தியானிக்கப் படுகின்றன என்று அடையாளங்களின் பெருமையை உணர்த்துகின்றார்.  அடுத்த பாடலில், பெருமானின் அடையாளங்கள் தன்னை வழிபடும் அடியார்களுக்கு பதிஞானத்தை உணர்த்தியும் அவர்களது வினைகளை முற்றிலும் அழித்தும் கருணை புரிகின்றது என்று கூறுகின்றார். வினைகள் முற்றிலும் அழிக்கப்பட்டால் உயிர்கள்  அடைவது முக்திநெறியைத் தானே. இவ்வாறு வினைகள் அழிக்கப்பட்டு வீடுபேறு அடைவதற்கான வழியினை பெருமானின் அடையாளங்கள் காட்டுகின்றன என்று  பதிகத்தின் மூன்றாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் நான்காவது பாடலில்  புலன்களுக்கு இன்பம் விளைவிக்கும் தன்மையை குறிப்பிடும் சம்பந்தர் அதே பாடலில்   இந்த அடையாளங்களின் பெருமை கற்றோர்களால் உணரப்பட்டு கவிதைகள் இயற்றும் வண்ணம் அவர்களைத் தூண்டுகின்றன என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில்  இம்மையில் சிறப்புடன் மறுமையில் முக்தி நெறியினை அடையவும்  உதவும்  என்று கூறுகின்றார். பெருமானின் அடையாளங்களுக்கு மதிப்பு கொடுத்து செய்யப்படும் செயல்களை, மேலெழுந்தவாரியாக கருதி அவற்றை பழிக்காமல், அந்த செயல்களின் பின்னணியில் வெளிப்படும் அன்பினை, பெருமான் பால் அத்தகைய அடியார்கள் வைத்துள்ள அன்பினை உணார்ந்து அவற்றை புகழவேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் ஏழாவது பாடலில், பெருமானின் திருவேடங்களை தியானிக்கும் அடியார்கள் சிறந்த புகழுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார். பதிகத்தின் எட்டாவது பாடலில், சிவச்சின்னங்களைத் தரித்த பூத கணங்கள், பெருமானின் அடியார்கள் எதிர்கொள்ளும் தீங்கினை நீக்கவல்லவை என்று கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில்,   பெருமானின் அடையாளச் சின்னங்கள் அணிந்த அடியார்கள் நடுக்கம் ஏதும் இல்லாதவர்களாய் எதற்கும் அஞ்சாத தன்மையராய் இருப்பார்கள் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில் வீடுபேறு அடையும் வழியை, பெருமானின் சின்னங்கள் உணர்த்துகின்றன என்று கூறிய சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் பிறவிப் பிணியினை தீர்க்கும் மருந்தாக விளங்குகின்றன என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் தங்களது பாவங்கள் தீர்க்கப்பெற்று விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஓதியும், பெருமானின்  சின்னங்களாய் சிந்தனை செய்து தியானித்து பணிந்து  வணங்கி பிறவிப் பிணியினை தீர்த்துக்கொண்டு அழிவில்லாத ஆனந்தத்தை மறுமையில் அடைவோமாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com