142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 2

தன்னை ஆட்கொண்டவர்
142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 2

பாடல் 2:

    துணி மல்கு கோவணமும் தோலும் காட்டித் தொண்டு ஆண்டீர்
    மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பானீர்
    பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச் சங்கை
    அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே

விளக்கம்:

மல்கு=நிறைந்த; கண்டம்=கழுத்து; அண்டர்=தேவர்கள்; மாண்பு=மாட்சிமை, பெருமை; அணி=அழகு; கோவணத்தையும் தோல் ஆடையினையும் அணிந்த பெருமானின் எளிய திருக்கோலம் மிகவும் கவர்ந்தது போலும். அந்த எளிமையான கோலத்தினை காட்டி, தன்னை ஆட்கொண்டவர் என்று கூறுகின்றார். அந்தணர்கள் சம்பந்தரை இந்த தலத்திற்கு வரவேற்றனர் என்பதையும் தங்களது ஊருக்கு வந்தவரை பூரண கும்பம் கொடுத்து சிறப்பான முறையில் வரவேற்றனர் என்பதையும் நாம் இந்த பதிகத்தின் பின்னணியில் கண்டோம். அத்தகைய அந்தணர்கள் ஒழுக்கத்தில் சிறப்புடன் விளங்கினார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு, பெரியோர் என்று அவர்களை குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

தேவர்களால் பெருமை உடையவனாக கருதப்படும் சிறப்பினை பெற்றிருந்த போதிலும் துணியிலான கோவணத்தையும் தோல் ஆடையினை அணிந்து எளிமையான தோற்றத்துடன் இருக்கும் பெருமானே, உனது இந்த எளிமையான கோலம் அடியேனை மிகவும் கவரவே, அடியேன் உமக்கு அடிமையாக மாறிவிட்டேன்; அவ்வாறு உமக்கு அடிமையாக என்னை மாற்றி ஆட்கொண்ட பெருமானே, சிறப்பு வாய்ந்த நீல மணி பதிக்கப் பட்டது போன்ற, ஆலகால விடத்தை தேக்கியதால் கருமை நிறத்துடன் காணப்படும் கழுத்தினை உடையவனே, பூணூல் பொருந்திய மார்பினை உடையவர்களாக, பெரியோர்களாக, கருதப்படும் அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகு வாய்ந்த கோயிலையே உமது கோயிலாகக் கொண்டு நீர் எழுந்தருளியுள்ளீர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com