142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 3

பெருமானிடம் சங்கினைப் பெற்ற திருமாலுக்கும்
142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 3

பாடல் 3:

    சீர் கொண்ட பாடலீர் செங்கண் வெள்ளேற்று ஊர்தியீர்
    நீர் கொண்டும் பூக் கொண்டு நீங்காத் தொண்டர் நின்று ஏத்தத்
    தார் கொண்ட நூல் மார்பர் தக்கோர் வாழும் தலைச் சங்கை
    ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே

விளக்கம்:

சீர்=சிறப்பு; தக்கோர்=தகுந்த பெருமையினை உடையவர்கள்; ஏர்=அழகு; பெருமானிடம் சங்கினைப் பெற்ற திருமாலுக்கும் இந்த கோயிலில் ஒரு சன்னதி உள்ளது. அந்த சன்னதியைக் கண்ட சம்பந்தருக்கு, திரிபுரத்து அரக்கர்களுடன் போரிட பெருமான் சென்ற போது, திருமால் காளை வாகனமாக மாறி பெருமானை தனது முதுகின் மேல் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுகின்றார். திருமால் சிவந்த கண்களை உடையவர் என்பதால் செங்கண் மால் என்று  பல தேவாரப் பதிகங்களிலும் திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் குறிப்பிடப் படுகின்றார். தார்=மாலை;       

பொழிப்புரை:

சிறப்பு மிகுந்த வேத கீதங்களை பாடுபவரே, திரிபுரத்து அரக்கர்களுடன் போருக்கு சென்ற தருணத்தில் தேரின் அச்சு முறிந்த சமயத்தில் சிவந்த கண்களை உடைய திருமாலைத் தனது எருது வாகனமாக ஏற்றவனே, நீரும் மலரும் ஏந்தி வரும் தொண்டர்களால் இடைவிடாது வழிபடப்படும் பெருமையை உடையவனே, மாலையும் பூணூலையும் அணிந்து சிறந்த தகுதியை உடையவர்களாக அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தினில் உள்ள அழகு பொருந்திய கோயிலை, நீர் உமது கோயிலாகக் கொண்டு எழுந்தருளி உள்ளீர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com