142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 6
By என். வெங்கடேஸ்வரன் | Published on : 19th October 2019 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பாடல் 6:
நில நீரொடு ஆகாசம் அனல் காலாகி நின்று ஐந்து
புலன் நீர்மை புறம் கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார்
சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை
நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே
விளக்கம்:
கால்=காற்று; நீர்மை=தன்மை; புறம் கண்டவர்=போரினால் தோற்கடித்து புறம் கண்டவர், வென்றவர்; பொக்கம்=பொய், வஞ்சகம்; போற்று=புகழ்ந்து பாடுதல்; ஓவார்=நீங்காது தொடர்ந்து செய்வார்; சலம்=மாறுபாடு; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வஞ்சகர்; நீதர்=இழிந்தவர்; நலநீர=அழகிய தன்மை உடைய; நயத்தல்=மனம் நெகிழ்ந்து விரும்புதல்;
பொழிப்புரை:
நிலம் நீர் ஆகாயம் அனல் காற்று ஆகிய ஐந்து பூதங்களும் மேலும் அவற்றுடன் தொடர்பு கொண்டுள்ள ஐந்து புலன்களின் தன்மைகளும் புறமிட்டு ஓடும் வண்ணம் வெற்றி கொண்டவரே, எந்தவிதமான வஞ்சகத்தில் ஈடுபடாமலும் இடைவிடாமல் உன்னைப் போற்றி புகழ்தலைச் செய்வோரும், சஞ்சலம் ஏதுமின்றி எப்போதும் உன்னையே துதித்து வருவோரும், இழிந்த செயல்களை அறவே தவிர்ப்போரும் ஆகிய தகுதி வாய்ந்த சான்றோர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில் உள்ள அழகு வாய்ந்த கோயிலினை, நீர் தங்கும் திருக்கோயிலாக மகிழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளீர்.