142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 11
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 24th October 2019 12:00 AM | Last Updated : 24th October 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 11;
நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன்
குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை
ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார்
மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே
விளக்கம்:
நளிரும்=குளிர்ந்த;
பொழிப்புரை:
குளிர்ந்த நீரால் வளம் பெறும் சீர்காழி நகரில் தோன்றியவனும் நல்லறிவு உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன், குளிர்ந்து காணப்படும் தலைச்சங்கு தலத்தில் அமைந்துள்ள உயர்ந்த மாடக் கோயிலில் பொருந்தி உறையும் பெருமானை, சடையினில் ஒளிவீசும் ஒற்றைப் பிறைச்சந்திரனை அணிந்த பெருமானை, புகழ்ந்து உரைத்த இந்த பாடல்களை ஓத வல்லவர்கள், அலைகள் விளங்கும் கடல் சூழ்ந்த உலகத்தவரினும் மேம்பட்டவராக வானவர்க்கு ஒப்பாக கருதப்படுவார்கள்.
முடிவுரை:
சுடுகாட்டினைத் தவிர்த்து வேறு எதனையும் தனது இருப்பிடமாக கருதாத பெருமான் நிலவுலக மக்களுக்கு அருள் புரியும் நோக்கத்துடன் தலைச்சங்காடு தலத்தில் கோயில் கொண்டிருக்கின்றார் என்று முதல் பாடலில் உணர்த்தும் ஞானசம்பந்தர், இரண்டாவது பாடலில் மிகவும் எளிமையான கோலத்தில், கோவணமும் தோலாடையும் கொண்டு பெருமான் காட்சி தருவது, தனது மனதினை பெரிதும் கவர்ந்தது என்றும், அவரது அடியானாக தான் மாறியதற்கு அதுவே காரணம் என்றும் கூறுகின்றார். அவரது எளிமை அழகால் கவரப்பட்டு தான் அவருக்கு அடிமையாக மாறியது போன்று பல தொண்டர்கள் அவருக்கு அடிமையாக மாறி பூவும் நீரும் கொண்டு அவரை வழிபட்டு போற்ற திருக்கோயில் செல்கின்றனர் என்று பதிகத்து மூன்றாவது பாடலில் கூறுகின்றார். அடியார்களின் தன்மைக்கும் அந்தந்த நிலைக்கும் ஏற்றவாறு பலவிதமான வேடங்கள் கொண்டு அவர்களை சந்தித்து அருள் புரிவது பெருமானின் கொள்கை என்று நான்காவது பாடலில் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் திருக்கோலம் உணர்த்தப் படுகின்றது. ஆறாவது பாடலில் பெருமான் ஐந்து புலன்களையும் வென்ற தன்மை குறிப்பிடப் படுகின்றது. ஏழாவது பாடலில் அனல் ஏந்தி அவர் ஆடும் அழகும் எட்டாவது பாடலில் மாதொரு பாகனாக விளங்கும் தன்மையும் ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் தலத்து அந்தணர்களின் தன்மையும் உணர்த்தப் படுகின்றன. இந்த பெருமானை போற்றி வழிபடும் அடியார்கள் தேவர்களினும் மிகுந்த சிறப்பினை பெறுவார்கள் என்று கூறுகின்றார். சம்பந்தரின் இந்த பதிகம் மூலம் பெருமானின் தன்மையையும் தலத்தின் சிறப்பையும் உணர்ந்து கொண்ட நாம், இந்த பதிகத்தினை நன்கு கற்றுணர்ந்து மனம் ஒன்றி ஓதி பல நன்மைகளையும் அடைவோமாக.