Enable Javscript for better performance
143. கொடியுடை மும்மதில் - பாடல் 1- Dinamani

சுடச்சுட

  
  தேவாரம்


  பின்னணி:

  தனது இரண்டாவது தல யாத்திரையை நனிபள்ளி தலத்தில் தொடங்கிய ஞானசம்பந்தர் பின்னர் தலைச்சங்காடு தலம் சென்று இறைவனை பணிந்து வணங்கி, நலச்சங்க வெண் குழையும் என்று தொடங்கும் பதிகத்தினை (2.55) மகிழ்ந்த பின்னர், அருகிலுள்ள வலம்புரம் தலம் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. இந்த பெரிய புராணப் பாடலின் முதலடியில் குறிப்பிடப் படும் தலம் தலைச்சங்காடு. தலைச்சங்காடு தலத்திற்கு வந்த சம்பந்தரை மிகவும் சிறப்பான முறையில் வரவேற்ற தலத்து அந்தணர்கள், திருக்கோயிலிலுருந்து வெளியே வந்த சம்பந்தரை போற்றிப் புகழ்ந்தனர் என்று சேக்கிழார் கூறுகின்றார். மன்னும்=பொருந்தி உறையும்.

      கறையணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி
      மறையவர் போற்ற வந்து திருவலம்புரத்து மன்னும்
      இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏத்திப் போந்து
      நிறைபுனல் திருச்சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்

  இந்த தலம் மேலப்பெரும்பள்ளம் என்று தற்போது அழைக்கப்படுகின்றது. மயிலாடுதுறை  மற்றும் சீர்காழி நகரங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகள் இந்த தலத்திற்கு மிகவும் அருகில் செல்கின்றன. பூம்புகாரிலிருந்து ஐந்து கி,மீ, தூரத்தில் உள்ளது.    பெருமானின் திருமுடியில் ஒரு பள்ளம் இருப்பதால் பெரும்பள்ளம் என்றும் அருகில் உள்ள கீழைப் பெரும்பள்ளம் என்ற தலத்திலிருந்து வேறுபடுத்தி குறிப்பிடும் வண்ணம் மேலைப் பெரும்பள்ளம் என்றும் அழைக்கப்படுகின்றது. மாடக்கோயில் அமைப்பில் உள்ளது. சுயம்பு லிங்கம். இங்கே திருமால் பூசனை செய்து சக்கரமும் கதையும் பெற்றதாக கருதப் படுகின்றது. சம்பந்தர் அருளிய இந்த பதிகத்துடன் திருநாவுக்கரசர் அருளிய இரண்டு பதிகங்களும் சுந்தரர் அருளிய ஒரு பதிகமும் இந்த தலத்திற்கு கிடைத்துள்ளன. இறைவர்--வலம்புர நாதர்; இறைவி--வடுவகிர் கண்ணியம்மை.  

  அப்பர் பெருமானை தாமே வாவா என்றழைத்து பெருமான் அருள் பாலித்த தலம் என்று கூறுவார்கள். இதற்கு அகச்சான்றாக மண்ணளந்த என்று தொடங்கும் பதிகத்தின் ஐந்தாவது பாடலை (6.58.5) குறிப்பிடுகின்றனர். மாயம் பேசி தன்னை வஞ்சித்ததாக இந்த பதிகத்தின்  மற்றொரு பாடலில் குறிப்பிட்ட அப்பர் நாயகி இந்த பாடலில் பெருமான் பேசிய மாய வார்த்தை என்ன என்பதை உணர்த்துகின்றாள். தன்னை வாவா என்று அழைத்த பெருமான் தனக்காக காத்திராமலும், தன்னிடம் சொல்லாமலும் வலம்புரம் சென்று புகுந்ததாக, தனது வருத்தத்தை அப்பர் நாயகி வெளிப்படுத்தும் பாடல். தன்னை வாவா என்று அழைத்த பெருமான், தனக்காக காத்திராமல் தன்னை விட்டுவிட்டு பூத கணங்களைத் தன்னுடன் அழைத்துச் சென்றது அப்பர் நாயகியின் வருத்தத்தை மேலும் அதிகரித்தது போலும்.

  மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர் உருவாய
         முதல்வர் இந்நாள்
  கோவாத எரிகணையைச் சிலை மேல் கோத்த குழகனார் குளிர்
         கொன்றை சூடி இங்கே
  போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்லப் புறக்கணித்துத்
          தம்முடைய பூதம் சூழ
  வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே
          மன்னினாரே

  என்றும் இளமையாக காணப்படுவதும், மூர்க்க குணம் கொண்டதும் ஆகிய பாம்பினைத் தனது இடுப்பினில் கட்டிய பெருமான், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளின் உருவில் இருக்கும் முழுமுதற் கடவுளாவார். வேறு எவரும் கோர்க்க முடியாத அம்பினைத் தனது வில்லினில் கோர்த்து மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த பெருமான் என்றும் இளையவனாகவும் அழகாகவும் விளங்குகின்றார். குளிர்ந்த கொன்றைப் பூவினை தலையில் சூடி நின்ற அழகரைக் கண்டு நான் அவர் பின்னே செல்ல, அவர் என்னை புறக்கணித்து விட்டு, தம்முடன் பூத கணங்களை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். என்னை நேரில் கண்டபோது வாவா என்று அழைத்த பெருமான், எனக்காக காத்திராமலும், என்னை விட்டுவிட்டு வலம்புரம் தலத்தில் புகுந்த பெருமான் அங்கே நிலையாக தங்கிவிட்டார் என்று அப்பர் நாயகி கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
     
  பாடல் 1:

      கொடியுடை மும்மதில் ஊடுருவக் குனி வெஞ்சிலை தாங்கி
      இடி பட எய்த அமரர் பிரான் அடியார் இசைந்து ஏத்தத்
      துடி இடையாளை ஒர் பாகமாகத் துதைந்தார் இடம் போலும்
      வடிவுடை மேதி வயல் படியும் வலம்புர நன்னகரே

  விளக்கம்:

  இசைந்து=மனமொன்றி, கூடி; துதைந்து=பிரியாமல் எப்போதும் கூடியே இருத்தல்; வடிவு= அழகு; இடிபட=பேரொலி எழும் வண்ணம்; ஊடுருவ=கோட்டைகளை துளைத்துக் கொண்டு;  ஊடுருவிச் சென்ற; ஒரே அம்பினால் மூன்று கோட்டைகளையும் துளைத்து எரித்தால் தான்  கோட்டைகளை அழிக்க முடியும் என்பது திரிபுரத்து அரக்கர்கள் பெற்றிருந்த வரம்; முதலில் தென்படும் கோட்டையை எரித்த அம்பு அங்கேயே தங்கி விட்டால், அடுத்த கோட்டையை அழிக்க முடியாது அல்லவா. எனவே தான் முதல் கோட்டையைத் துளைத்துச் சென்று  இரண்டாவது கோட்டையை அடைந்து அந்த கோட்டையையும் துளைத்து எரித்து மூன்றாவது கோட்டையை அம்பு சென்று அடையும் வண்ணம் வல்லமை படைத்த அம்பினை எய்து மூன்று கோட்டைகளையும் எரிக்க வேண்டிய நிலை பெருமானுக்கு ஏற்பட்டது. எனவே தான் மூன்று கோட்டைகளையும் ஊடுருவிச் சென்று அழிக்கும் வல்லமை படைத்த அம்பினை தேர்ந்தெடுத்து பெருமான் அந்த மூன்று கோட்டைகளையும் அழித்தார் என்பதை இந்த பாடல் உணர்த்துகின்றது. சிலை=வில்;  குனி=வளைத்த, மேரு மலை வில்லாக வளைக்கப்பட்ட நிலையினை குறிப்பிடுகின்றது. வெஞ்சிலை=கொடியவில்; துடி=உடுக்கை; மீதி=எருமைகள்; நீர்வளம் மிகுந்ததால் செழிப்பாக வளர்ந்து எருமைகளும் அழகாக காணப்பட்டன என்று கூறுகின்றார். மதில் என்றால் நகரத்திற்கு அரணாக விளங்கும் மதிற்சுவர் என்று பொருள். ஆனால் மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கொட்டினில் வரும் தருணத்தில் தான் இந்த கோட்டைகளை அழிக்க முடியும் என்பதால், ஒவ்வொரு கோட்டையும் மற்ற இரண்டு கோட்டைகளுக்கு வலிமை வாய்ந்த அரணாக திகழ்ந்த தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.

  பொழிப்புரை:

  கொடிகள் உடைய அழகான மூன்று கோட்டைகளையும், ஒன்றுக்கொன்று அரணாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும், ஊடுருவிச் சென்று அழிக்கும் வண்ணம் ஆற்றல் கொண்ட அம்பினை விடுக்க வல்ல கொடிய வில்லினை, மேரு மலையினை வளைத்து செய்யப்பட வில்லினை ஏந்தி பேரொலியுடன் அம்பினை எய்து  மூன்று கோட்டைகளையும் எரித்தவர் தேவர்களின் தலைவராகிய சிவபெருமான். அவரை  அடியார்கள் மனம் ஒன்றி இசைப் பாடல்கள் பாடி புகழ்கின்றனர். உடுக்கை எனப்படும்  இசைக்கருவி போன்று குறுகிய இடையினை உடைய உமை அம்மையை தனது உடலினொரு பாகத்தில் ஏற்றுக்கொண்டு என்றும் பிரியாது இணைந்திருக்கும் பெருமானின் இடம் யாதெனில், அழகான எருமை மாடுகள் படியும் நிலங்கள் கொண்ட வலம்புரம் நன்னகரமாகும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai