143. கொடியுடை மும்மதில் - பாடல் 2

மன்மதன் எரிக்கப்பட்டவுடன்
143. கொடியுடை மும்மதில் - பாடல் 2


பாடல் 2:

    கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கைத்
    தேய்த்து அன்று அனங்கனைத் தேசு அழித்துத் திசையார் தொழுது ஏத்தக்
    காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
    வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன்னகரே

விளக்கம்:

கோத்த கல்லாடை=காவி நிறத்து கற்கள் பண்டைய நாளில் துணிகளில் காவி சாயம் ஏற்றுவதற்கு பயன்பட்டதால், கல் கோத்த ஆடை என்று குறிப்பிடுகின்றார். பொதுவாக பெருமானை கோவணம் மற்றும் புலித்தோல் அணிந்தவர் என்றே பெரும்பாலான  திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. காவி உடையினை அணிந்தவராக பெருமானை குறிப்படும் இந்த பாடல் சற்று வித்தியாமான பாடலாகும். திசையவர்=எல்லா திசைகளிலும் உள்ளவர்கள், உலகத்திலுள்ள அனைவரும் என்று பொருள் கொள்ள வேண்டும்; காய்த்த கல் ஆல்=ஒரு வகை கல்லால மரம்; நூற்றுக்கணக்கான ஆண்டுகள் காய்ந்து பாறை போன்று கெட்டித் தன்மை உள்ளதாக இருக்கும் ஆலமரம்; காய்த்த என்று சொல்லுக்கு காய்கள் நிறைந்த என்று பொருள் கொண்டு, காய்கள் நிறைத்த கல்லால மரம் என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. தேய்த்து=அழித்து; தேசு=தேஜஸ் என்ற வடமொழி எழுத்து தேசு என்று தமிழாக்கப்பட்டுள்ளது. முத்தீ=மூன்று வகையான வேள்விகளில் வளர்க்கப்படும் தீ; ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினியம் என்று கூறுவார்கள்.  

அனங்கன்=உடல் அற்றவன். மன்மதன் எரிக்கப்பட்டவுடன் அவனது மனைவி இரதி தேவி, இறைவனிடம் தனது கணவனை உயிர்ப்பித்து தருமாறு வேண்ட, அவளது கோரிக்கைக்கு இரங்கிய பெருமான், மன்மதனுக்கு மீண்டும் உயிரினை அளித்தார். ஆனால் அவ்வாறு உயிர் அளித்த போது, இரதி தேவியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான் என்றும் ஏனையோர் கண்களுக்கு புலப்படாமல் தனது தொழிலை, உயிர்களிடம் இனப்பெருக்கும் தொடர்ந்து நடப்பதற்கு ஏதுவாக, காதல் உணர்ச்சியை தூண்டும் செயலை, மன்மதன் தொடர்ந்து செய்வான் என்று பெருமான் வரம் அளித்ததால், எந்த உயிரும் காண முடியாத வண்ணம் மன்மதன் தனது தொழிலினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றான் என்று கூறுவார்கள்.  
  
பொழிப்புரை:

நீரில் ஊறிய காவிக் கற்களால் விளையும் சாயம் தோய்த்து ஏற்றப்பட்ட காவி ஆடையும் கோவணமும் அணிந்தவராக விளங்கும் பெருமான் கொடுகொட்டி என்ற வாத்தியத்தை ஒரு கையினில் ஏந்தி வாசிப்பவர் ஆவார். பண்டைய நாளில் தனது தவத்தினை கலைக்க முயற்சி செய்த மன்மதனின் அழகான உடலினை சுட்டெரித்து, அவன் உடலற்றவனாக திரியும் வண்ணம் செய்தவர் சிவபெருமான். உலகில் உள்ள அனைவரும் தொழும் வண்ணம், காய்ந்து பாறையாக இறுகி நின்ற கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும் வேதத்தின் பொருளை விளக்கியவர் சிவபெருமான். அவர் நிலையாக இருக்கும் இடம் யாது எனின், நாள்தோறும் செய்யவேண்டிய கடமையாக விதிக்கப்பட்ட மூன்று தீக்களை வளர்த்து நான்கு வேதங்களையும் நன்றாக பயின்று வாழும் அந்தணர்கள் நிரந்த வலம்புரம் நகரமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com